மொழிகளின் லாஜிக்!
மனித மொழிகளுக்கு மட்டுமல்ல கம்ப்யூட்டர் மொழிகளுக்கும் லாஜிக் ஒன்றே ஒன்று தான்!
மொழிகள் எதுவாக இருந்தாலும் அதற்கான உழைப்பு எங்கிருந்தாலும் அதற்காக உழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் போற்றுதலுக்குறியவர்கள்.
காரணம். மொழிதான் உலகில் மற்ற உயிரினங்களில் இருந்து மனிதனை வித்தியாசப்படுத்துகிறது.
மகாகவி பாரதியார், இந்தி சமஸ்கிருதம் தவிர்த்து ஆங்கிலம் பெங்காலி ஹச் போன்ற மொழிகளிலும் புலமைப் பெற்றிருந்ததால்தான் ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாடினார்.
நேற்று இந்தி, குஜராத்தி, தமிழ், ஆங்கிலம், ஜப்பானீஸ், ஜெர்மன் என பல்வேறு மொழிகளை எளிமையாகக் கற்றுக்கொடுக்கும் ‘திரு. விஸ்வநாதன்’ அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு.
எளிமையாகவும் அதே சமயம் குறைந்த மணிநேரத்திலும் அடிப்படையை சொல்லிக்கொடுத்து அந்தந்த மொழிகளில் பேச வைக்கிறார்.
இது எப்படி சாத்தியமாகிறது என வியந்ததற்கு, ‘எல்லா மொழிகளுக்கும் அடிப்படை லாஜிக் ஒன்றுதான். அதை கற்றுக்கொண்டால் எல்லா மொழிகளுமே சுலபம்தான்…’ என்கிறார்.
சில வாரங்களுக்கு முன்னர் ‘மொழி’ குறித்து ஒரு சாஃப்ட்வேர் தயாரிப்பதற்காக என்னுடன் பேசியிருந்தார்.
நேற்று ஒரு நாள் சென்னையில் இந்தி வகுப்பு எடுப்பதற்காக வருவதாகச் சொன்னார். பிராஜெக்ட் குறித்துப் பேசுவதற்காக நேரில் சந்தித்தோம். அவருடைய மாணவர்களுக்கு என்னை சிறப்பு விருந்தினர் என அறிமுகப்படுத்தி அவர்களை என்னுடன் Interactive Session – க்கு ஏற்பாடு செய்தார். அவர்கள் தாங்கள் கற்றுக்கொள்ளும் மொழிகள் குறித்து அழகாக அவரவர்கள் கருத்துக்களை எடுத்துச் சொன்னார்கள்.
நான் தொழில்நுட்பத்தில் மொழி என்ற கான்செப்ட்டில் சில கருத்துக்களை பதிவு செய்தேன்.
அதன் சாராம்சம்:
மனிதர்கள் பேசுகின்ற மொழிகளுக்கு மட்டுமல்ல, கம்ப்யூட்டர் மொழிகளுக்கும் அடிப்படை லாஜிக் ஒன்றுதான். அதை புரிந்துகொண்டுவிட்டால் எல்லா கம்ப்யூட்டர் மொழிகளும் சுலபமே.
C, C++ இந்த இரண்டு மொழிகளில் ஆழ்ந்த அறிவை வளர்த்துக்கொண்டுவிட்டால் போதும், Java, DOT NET, VB.NET, Asp.NET, C#.NET என எல்லா மொழிகளிலும் ஜமாய்க்கலாம்’ என தொழில்நுட்பம் குறித்தும் பேசினேன்.
மொழி என்பது கம்ப்யூனிகேஷனுக்கு உதவும் ஒரு டூல். மனிதர்கள் சக மனிதர்களுடன் பேசி புரிய வைக்க Human Languages, கம்ப்யூட்டருக்குப் புரிய வைக்க Computer Languages, திரும்பவும் கம்ப்யூட்டர் மனிதனுக்குப் புரிய வைக்க Human Languages.
இதன் அடிப்படையில் தான் ஃபாண்ட் உருவானது. ஆங்கிலத்தில் நாம் பேசுவதைப் போல அப்படியே டைப் செய்தாலே அது தமிழில், தெலுங்கில், மலையாளத்தில் டைப் ஆகிறதே அந்த டைப்பிங் முறைக்கு பொனெடிக் (Phonetic) என்று பெயர். இதனால்தான் நம் மக்கள் இன்று அவரவர் தாய் மொழியில் கம்ப்யூட்டர் / ஸ்மார்ட்ப்போனில் கலக்குகிறார்கள்.
இப்போது பேசினாலே டைப் ஆகின்ற தொழில்நுட்பமும் வந்துவிட்டது.
கண் அசைவினால் இயங்கும் தொழில்நுட்பமும் வந்துகொண்டே இருக்கிறது.
இந்தத் தொழில்நுட்பத்தில் அடிப்படையில் ஏற்கெனவே ‘கூகுள் கிளாஸ்’ வந்துவிட்டது. அதை கூலிங் கிளாஸ் அணிந்து கொள்வதைப் போல அணிந்து கொண்டால், நம் கண்கள் எதையெல்லாம் நோக்குகின்றனவோ, அவற்றையெல்லாம் கூகுள் கிளாஸின் காமிரா நோக்கும்.
உதாரணத்துக்கு தெருவில் நாம் நடந்து செல்லும் போது, நம்முன் செல்லுகின்ற மனிதர்கள், கடந்து செல்கின்ற பஸ், ஸ்கூட்டர், கார் போன்றவற்றை ஸ்கேன் செய்து அவற்றின் தகவல்களை எல்லாம் திரட்டி நமக்கு அளிக்க முற்படும். இதன் பெரிய சிக்கலே, நம்மைப் பற்றியும், நம்மைச் சுற்றி இருப்பவற்றைப் பற்றியும் தகவல்களை தொடர்ந்து சேகரித்து, பதிவு செய்து கொண்டே இருக்கும்.
ஃபாண்ட் தவிர கம்ப்பைலர் இன்டர்பிரட்டர் என ட்ரான்ஸ்லேட்டர் புரோகிராம்கள் மனிதனும், கம்ப்யூட்டரும் அவரவர் மொழிகளில் தொடர்புகொள்ள உதவுகின்றன. இவை புரோகிராம் எழுதுபவர்களுக்கும், சாஃப்ட்வேர்கள் தயாரிப்பவர்களுக்குமானது.
மொழி குறித்து பேசும்போது திரு. மாலன் அவர்கள் தலைமையில் இயங்கி வரும் அக்ஷர வெப்சைட் குறித்து பேசாமல் இருக்க முடியுமா? அக்ஷர – 24 இந்திய மொழிகளில் இயங்கிவரும் இந்திய இலக்கியத்திற்கான பன்மொழி இணைய இதழ் குறித்தும் தகவல்களை பதிவு செய்தேன்.
நிகழ்ச்சி முடிவில் திரு. விஸ்வநாதன் அவர்களுடன் மொழிக்கான சாஃப்ட்வேர் தயாரிப்பு குறித்த பிராஜெக்ட் பற்றி விவாதித்துவிட்டு விடைபெற்றோம்.
நேற்றைய பொழுது என் நினைவுகள் மொழிகளால் கலகலப்பானது.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
டிசம்பர் 2, 2018