இங்கிதம் பழகுவோம்[10] பெண்ணே உன் சக்தி உன் மனதில்தான்! (https://dhinasari.com)

1992-ம் ஆண்டு எம்.எஸ்.ஸி முடித்து சென்னை வந்து சொந்தமாக காம்கேர் நிறுவனத்தை ஆரம்பித்த காலத்தில் இரண்டு கம்ப்யூட்டர்களையும்,  இரண்டு பெண் அலுவர்களையும்  மட்டுமே வைத்துக் கொண்டு செயல்பட ஆரம்பித்தேன்.

என் கனவு  இலட்சியம் எல்லாமே சொந்தமாக நிறுவனம் தொடங்கி, அதில் பெண்களை மட்டுமே பணிக்கு அமர்த்தி, முழுமையாக நூறு சதவிகிதம் பெண்களால் இயங்கக் கூடிய நிறுவனமாக்க வேண்டும் என்பதே.

கூடவே, திருமணம் ஆன பெண்களுக்காக குழந்தைகள் காப்பகத்தையும் என் நிறுவனத்திலேயே ஏற்படுத்த வேண்டும் என்பதும்  ஆசை.

அதன்படி அடுத்தடுத்த வருடங்களில் பெண்களை மட்டுமே வேலைக்கு எடுத்தேன். ஆனால் நான் நினைத்த அளவுக்கு பெண்களை வைத்துக் கொண்டு வேலை செய்வது என்பது அத்தனை எளிதல்ல என்பது எனக்குப் புரிய 2 வருடங்களாகி விட்டன. காரணம். தலைமை ஒரு பெண்ணாக இருக்கின்றபட்சத்தில் அவர்களிடம் பணிபுரியும் பெண்களின் கோ-ஆப்பரேஷன் பூஜ்ஜியமாகி விடுகிறது.

ஒரு பெண்ணை தலைமையாகக் கொண்டு பணிபுரிய பெண்களே விரும்புவதில்லை. வேறு வழியில்லாமல் வேலையில் சேர்ந்து விடுகிறார்கள். ஆனால் அவர்களின் ஈகோ அவர்களை பெண் தலைமையின் கீழ் பொருந்தி வேலை செய்ய விடுவதில்லை. இவளும் நம்மைப் போல ஒரு பெண் தானே, இவள் என்ன சொல்வது, நாம் என்ன கேட்பது என்று எத்தனையோ உணர்வுக் கோளாறுகள், உளவியல் பிரச்சனைகள், மாற்றுக் கருத்துக்கள்.

குறிப்பாக ஒரு பெண் நிர்வகிக்கும் அலுவலகத்தில் வேலை செய்யும் போது ஆயிரம் குறைகளையும், குற்றங்களையும் சொல்லுகின்ற பெண்கள், ஒரு ஆண் நிர்வகிக்கும் போது குற்றங்களை பெரிதுபடுத்துவதில்லை என்பதே நிதர்சனம்.

நான் நிறுவனம் தொடங்கிய 1992-ல் பெண் தலைமையில் நிறுவனங்கள் இயங்குவது புதிது என்பதால் இந்த உளவியல் கோளாறுகள் இருக்கும் என்றே வைத்துக்கொண்டாலும், இன்று வரை இந்த நிலைதான்.

பெண்ணியம் பேசும் பெண்களுக்குக்கூட போராட்டங்களில் கலந்துகொள்ளும் நேரத்தில் மட்டும் ஒன்றாகக் கூடுவதில் பெரிதாக சிக்கல் ஏதும் ஏற்படுவதில்லை. ஆனால் அதுவே தினம் தினம் ஒரு பெண் தலைமையின் கீழ் பணிபுரிய வேண்டிய சூழல் ஏற்படும்போது அவர்களுக்கும் பிரச்சனை ஏற்படுவது உண்மை.

பெண் தலைமையின் கீழ் பணியாற்றுவதை பெருமையாகவும் கர்வத்துடனும் பெண்கள் மனதளவில் ஏற்றுக்கொள்ளும் நிலை வரும்போது அவர்களின் சக்தி பல மடங்காக பெருகும் என்பது சர்வ நிச்சயம்.

வீட்டுக்கு அருகில் ஒரு பெண் தன் வீட்டிலேயே டெய்லரிங் கடை ஆரம்பித்திருந்ததால் வழக்கமாக நான் கொடுக்கும் இடத்தைத் தவிர்த்து அவரிடம் கொடுக்க ஆரம்பித்தேன்.

இரண்டு காரணங்கள். ஒன்று கடை அருகில் உள்ளது. இரண்டாவது ஒரு பெண் சுயமாக பிசினஸ் தொடங்கி உள்ளார்… அவருக்கு ஆர்டர் கொடுக்கலாமே… என்ற நல்ல எண்ணம்.

நான் டெய்லர் கடையை நாடுவதே ரெடிமேடாக வாங்கும் சுடிதாருக்கு மேல் தையல் போட மட்டுமே.

முதல் முறை சரியாக தைத்துக் கொடுத்தார். 120 ரூபாய் வாங்கிக் கொண்டார். நான் வழக்கமாகக் கொடுப்பதைவிட கட்டணம் அதிகம்தான் என்றாலும் ஒரு பெண் சுயமாக பிசினஸ் செய்வதை ஊக்குவிப்பதில் மகிழ்ச்சியே.

அடுத்த முறை ஒரு பக்கம் மட்டும் தைத்துவிட்டு மற்றொரு பக்கம் தையல் போடவே இல்லை. திரும்பவும் சென்று தைத்து வந்தேன்.

அதற்கும் அடுத்த முறை டிஸைனுக்காகக் கொடுத்திருந்த வடிவமைப்புப் பகுதியை சுடிதார் மேல்பக்கத்துடன் இணைத்து பட்டி போல தைத்துவிட்டார்.

நான் கேட்டதற்கு ‘நீங்கள் கொடுக்கும்போதே அப்படித்தான் இருந்தது’ என்று சொல்லி ஒரே ஆர்கியூமெண்ட்.

சரி பிரித்து வையுங்கள். நான் ஆஃபீஸ் விட்டு திரும்பும்போது வாங்கிக்கொள்கிறேன் என சொல்லிவிட்டுச் சென்றேன்.

நான் இரவு 8 மணிக்கு சென்றபோது அவர் என்னை பார்த்ததும் போனில் ஏதோ பேசுவதைப் போல பேச ஆரம்பித்தார். போன் ஏதும் வரவில்லை. என்னைத் தவிர்க்கவே அப்படிச் செய்கிறார் என எனக்குத் தெரியும் என்பது அவருக்குத் தெரியாது. உடல் மொழியை வைத்தே உண்மை எது பொய் எது என கண்டு பிடிக்கும் ஷார்ப்னெஸ் கூட இல்லை என்றால் ஒரு நிர்வாகியாக இருக்க முடியுமா?

அதற்குள் அவர் கணவன் என்னிடம் வந்து சற்றே கறாராக… ‘நாங்கள் மேல் தையல் போடுவதில்லை. இனி மேல் தையல் போட கொடுக்காதீர்கள்…’ என சொல்ல, ‘கொடுக்கும்போதே சொல்லி இருந்தால் கொடுத்திருக்க மாட்டேன் அல்லவா?’ என பொறுமையைக் கூட்டிச் சொல்ல, ‘அதான் இப்ப சொல்லிட்டோம்ல…’ என அலட்சியமாகச் சொல்ல நான் சுடிதாரை வாங்கிக்கொண்டு காருக்குத் திரும்பினேன்.

அந்த பெண் அவசரமாக போனை வைத்துவிட்டு அவள் கணவனை பார்த்து நக்கலாகச் சிரித்தார்.

நான் கவனித்தவரை பெண்களிடம் உள்ள மிகப் பெரிய குறைபாடே இதுதான். நன்றாகச் செல்லும்வரை அவர்கள்தான் பிசினஸை பார்த்துகொள்வதைப் போல டாமினேட் செய்வார்கள்.

ஏதேனும் சிறிய பிரச்சனை என்றால் உடனே தன் வீட்டில் கணவன், அண்ணன், தம்பி என ஆண்கள் யாரையாவது அதில் கோர்த்துவிட்டு தான் தலைமறைவாகி விடுவார்கள்.

இந்த குணம் ஏதோ டெய்லரிங் செய்யும் பெண்களிடம் மட்டும்தான் இருக்கிறது என்று நினைக்க வேண்டாம்… எம்.என்.சி லெவலில் பிசினஸ் செய்யும் பெண்களிடமும் இதே அணுகுமுறைதான். பேசும் விதமும், மொழியும், வார்த்தைகளும் அவரவர் கல்விக்கு ஏற்ப மாறுபடும். அவ்வளவுதான்.

இந்த விஷயத்தில் பெண்கள் கொஞ்சம் புரொஃபஷனலாக சிந்திக்கவும் செயல்படவும் ஆரம்பித்து விட்டால் எந்த  பிசினஸிலும் ஜெயிக்கலாம்.

பெண்கள் முன்னேற்றம், பெண்ணுரிமை என முழங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் பெண்கள் தங்கள் தனித்தன்மையை விடுத்து இதுபோன்ற செயல்பாடுகளினால் தங்களைத் தாங்களே தாழ்த்திக்கொள்வதை மாற்றிக்கொள்ளலாமே!

அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
டிசம்பர் 11, 2018

தினசரி டாட் காமில்  லிங்க்… https://wp.me/p5PAiq-g7e  

தொடரும்…

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
தினசரி டாட் காம் டிசம்பர் 11, 2018  

(Visited 125 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon