குழந்தைகளிடம் இருந்து பொய்யான சிறு புன்னகையைக் கூட அத்தனை சுலபமாக நம்மால் பெற்றுவிட முடியாது.
பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இடங்களில் பள்ளி ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும், கல்லூரி பேராசிரியர்களுக்கும், எம்.என்.சி நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்களுக்காகவும் மோட்டிவேஷனல் உரை நிகழ்த்தி இருக்கிறேன்.
நம்முடைய உரை எப்படி இருந்தாலும், பெரியவர்கள் கட்டாயத்துக்காக அமைதிக்காக்கலாம்… ஆனால் குழந்தைகளிலும் சேர்த்துக்கொள்ள முடியாத, பெரியவர்களிலும் சேர்த்துக்கொள்ள முடியாத இரண்டும்கெட்டான் வயது மாணவ மாணவிகள் நம் பேச்சு சுவாரஸ்யமாக இல்லை என்றால் ஓரிடத்தில் நிலையாக உட்கார மாட்டார்கள்… அந்த வயதுக் குழந்தைகளுக்குப் பேசுவது என்பது மிகப்பெரிய சவால்தான்.
அந்த சவாலை எதிர்கொள்ள பாரதியாரின் பிறந்த நாளான 2018 டிசம்பர் 11-ம் தேதி சேவாலயாவில் நடைபெற்ற பாரதியார் விழாவுக்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். அரங்கில் நுழைந்தவுடன் கடல் அலை ஓசைபோல மாணவ மாணவிகளின் கைத்தட்டல் என்னை உறைய வைத்தது.
என்னுடன் சேர்ந்து அப்பாவையும் மேடை ஏற்றினார்கள். தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து முந்தியிருப்பச் செயல்’ என்ற குறளை அப்பாவுக்கும், ‘நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும்’ என்ற பாரதியின் புதுமைப் பெண்ணுக்கு என்னையும் உதாரணம் காட்டி கெளரவித்தார்கள்.
குத்து விளக்கு ஏற்றி, பாரதியார் படத்துக்கு மாலை அணிவித்து நிகழ்ச்சியை துவக்கி வைக்க நான் பணிக்கப்பட்டு விழா இனிதே துவங்கியது.
பாட்டு, நடனம், உரை என அத்தனை வடிவிலும் கலை நிகழ்ச்சிகள் மூலம் பாரதியை கண் முன் கொண்டு வந்து நிறுத்திய சேவாலயா மாணவ மாணவிகளின் அற்புத நடிப்பும் உணர்வுப்பூர்வமான கலைநயமும் பேரழகு. இந்த அளவுக்கு குழந்தைகளை மெருகேற்றிய ஆசிரியர்களின் பங்களிப்புக்கு ஒரு பெரிய சல்யூட்.
அரங்கம் முழுதும் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ மாணவிகள். அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக பேச அழைப்பட்ட எனக்கு மிக உற்சாகமான நாளாக அமைந்தது. எங்கள் நிறுவன அனிமேஷன் சிடிக்களை புரொஜெக்டரில் வெளிப்படுத்தி அவர்களை மேலும் உற்சாகப்படுத்திய பிறகு நான் பேச ஆரம்பித்தேன்.
ஒவ்வொரு மாணவ மாணவியின் கண்களிலும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும், தன்னம்பிக்கையும் கொப்பளித்தன. அவர்கள் கொடுத்த ஊக்கத்தில் அரை மணி நேரம் கதையும் கருத்தும் என கலந்துகட்டி பேசினேன்.
மாணவ மாணவிகளுக்கு கடைசி வரிசையில் சேவாலயா முதியோர் இல்லத்துப் பாட்டி தாத்தாக்கள் அமர்ந்திருந்தார்கள். வளரும் குழந்தைகள் முன் வரிசையில், வளர்ந்த குழந்தைகள் பின்வரிசையில். பார்க்கவே லட்சணமாக இருந்தது.
நிகழ்ச்சியில் இறுதியில் மாணவ மாணவிகளுக்கு பரிசளித்த கையோடு எங்களுக்கும் பாரதி, காந்தி, விவேகானந்தர் பாடங்களுடன் சேவாலயா போட்டோ ஃப்ரேம் கொடுத்து கெளரவித்தார்கள். மூவரையும் ஒருசேர பெற்றதில் பெருமகிழ்ச்சி.
சேவாலயா என்ன செய்கிறார்கள்?
சென்னையில் பாக்கம் என்ற இடத்துக்கு அருகில் உள்ள கசுவா என்ற கிராமத்தில் இயங்கி வரும் சேவாலயா 1988-ம் ஆண்டு முதல் ஆதரவற்ற குழந்தைகள், கைவிடப்பட்ட முதியோர்கள் இவற்றுடன் கரவை நின்றுபோன மாடுகளுக்கும் புகலிடம் கொடுத்து வருகிறது.
இவர்கள் இல்லத்தில் படித்துவரும் மாணவ மாணவிளுக்காக பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரியும், மருத்துவ சேவைகளும் தனித்தனிப் பிரிவுகளாக இயங்கி வருகிறது.
இதை நடத்தி வருபவர் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துகொண்டிருக்கும்போதே அதைத் துறந்து இந்த சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட திரு. முரளிதரன். இவரது மனைவி திருமதி. புவனேஸ்வரி முரளிதரனும் இதற்கு முழு ஒத்துழைப்பு. இருவரின் முழு ஈடுபாட்டுடன் இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இவர்களது சேவை பரவியுள்ளது.
பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள்…
சேவாலயாவில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் அக்கம் பக்கம் உள்ள சிறு கிராமங்களில் இருக்கும் வசதியற்ற மாணவர்களும் இவர்கள் நடத்திவரும் பள்ளியில் படிக்கும் வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர். அதுபோல கல்லூரியும் நடத்தி வருகிறார்கள். மேலும் பியூட்டீஷியன் கோர்ஸ், ஏசி சர்வீஸ், எலக்ட்ரிகல் என தொழில்பயிற்சியும் கொடுத்து வருவதோடு வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்துகொடுக்கிறார்கள்.
இவர்களிடமே தங்கி கல்வி பயின்ற மாணவ மாணவிகள் பலர் ஐடி துறையிலும், டாக்டர், இன்ஜினியர், வக்கீல் என பல்துறைகளிலும் பணிபுரிகிறார்கள். இவர்களிடம் படித்து டாக்டரான மாணவிகள் ஒரு சிலர் இவர்களது மருத்துவமனையிலேயே முழுநேர டாக்டராகவும் இருக்கிறார்கள்.
பாடப்புத்தகத்தோடு தொழில்பயிற்சியும் அளித்து வேலைவாய்ப்பையும் ஏற்படுத்திக்கொடுப்பது எத்தனை பெரிய விஷயம்?
சென்னையைத் தவிர பிற நாடுகளில் இருந்தும் பல்துறை வல்லுநர்கள் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் சிறப்புப் பயிற்சிகளும் ஆலோசனைகளும் மாணவர்களுக்குக் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
தேவையான கம்ப்யூட்டர் சென்டர், ஆராய்ச்சி சென்டர், மருத்துவ சென்டர் என முழுமையான கல்விச்சூழலை ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர்.
வாழும் தெய்வங்கள்…
குழந்தை இல்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள், பெற்ற குழந்தைகளால் கைவிடப்பட்டவர்கள், கணவனால் / மனைவியால் ஏமாற்றப்பட்டவர்கள், விவாகரத்தானவர்கள் என பல்வேறு சுமைகளைத் தாங்கிக்கொண்டு வயதான பாட்டிகளும், தாத்தாக்களும் வளைய வருவதைக் காணும்போது சங்கடமாக இருந்தாலும், தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் பாதுக்காப்பாக இருப்பதற்கும் சேவாலயா மாபெரும் உதவி செய்துவருவதைக் காணும்போது நிம்மதியாக இருக்கிறது.
குடும்பத்துடன் வீட்டில் வசிப்பதற்கு நிகராக எதையும் சொல்ல முடியாது என்றாலும் அப்படி இல்லாதபட்சத்தில் அதற்கு நிகரான பாதுகாப்பை சேவாலயா ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
நான் மேடையில் பேசியதை ஒவ்வொரு பாட்டி தாத்தாவும் பாராட்டி மகிழ்ந்தார்கள். தங்கள் பெண்ணுடன் பேசுவதைப் போல என் கைகளைத் தொட்டு பேசி வாழ்த்தினார்கள்.
அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அதை அவர்கள் காண்பிக்கச் சொன்னார்கள். மொபைலில் காண்பித்தபோது சிறுபிள்ளைகள் போல ‘ஹை’ என சொல்லி மகிழ்ந்தார்கள். ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொண்டு ஜாலியாக இருந்தார்கள்.
பெரியவர்களுக்கு பிராத்தனை கோயில்களும், யோகா சென்டர்களும், சிறுவர்கள் விளையாட பூங்காக்களும், இளைஞர்கள் உடற்பயிற்சி செய்ய ஜிம்களும் உள்ளன.
மொத்தத்தில் வெளியில் வசிப்பவர்கள் எந்த அளவுக்கு செளகர்யமாக இருப்பார்களோ அத்தனை செளகர்யங்களையும் சேவாலயாவுக்குள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
கோமாதா தரிசனம்…
கரவை நின்றுபோன பசுக்களுக்குப் புகலிடமாக கோசாலை வைத்து பராமரிக்கிறார்கள். அதில் கொசுக்களை விரட்ட ஆங்காங்கே மின்விசிறிகள் சுற்றிக்கொண்டிருக்கின்றன. பசுக்கள் தேவையானபோது தண்ணீர் குடிக்கவும், சாப்பிட வைக்கோலும் ஆங்காங்கே வசதியாக ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள்.
கோசாலை படுசுத்தம். பசுக்களின் சாணத்தின் வாசனை கூட வரவில்லை. அவ்வப்பொழுது சுத்தம் செய்கிறார்கள். அவற்றை மறுசுழற்சி செய்து அவர்கள் தோட்டத்து மரங்களுக்கும், செடி கொடிகளுக்கும் உரமாகப் பயன்படுத்துகிறார்கள்.
சேவாலயாவிற்குத் தேவையான பாலுக்காக கரவை நிற்காத பசுக்களையும் தனியாக பராமரிக்கிறார்கள்.
மரம் செடி கொடிகள்…
சேவாலயாவில் தங்கி இருக்கும் அத்தனைபேருக்கும் உணவு தயாரிக்கும் சமையல் அறையும் பிரமாண்டம். சாப்பிடும் இடமும் அதைவிட பிரமாண்டம். அத்தனையும் சுத்தமோ சுத்தம்.
சமையலுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் அத்தனையும் அவர்கள் பராமரிக்கும் தோட்டத்தில் இருந்துதான்.
வழிநெடுக மரங்களும், பச்சை பசேலென வயல்வெளிகளும் கண்களுக்கு இதமாக இருந்தன.
செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும்…
சேவாலயா என்ற பிரமாண்ட சரித்திரத்தை சுற்றிப் பார்த்துவிட்டு சாப்பிட அழைத்துச் சென்றார்கள். நுனி வாழைஇலை போட்டு வடை பாயசத்துடன் சாப்பாடு. விருந்தினர்களுக்கு மட்டும் இல்லாமல் அங்கு தங்கி இருக்கும் அனைவருக்கும் அதே சாப்பாடுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
சேவாலயாவுக்கு நான் சொன்ன வாழ்த்து என்ன தெரியுமா?
அவர்களின் சேவையை நான் உளமார பாராட்டியபோது அவர்கள், ‘சேவாலயா எங்கள் கனவு’ என்றார்கள்.
நான் அதை சற்று மாற்றி ‘சேவாலயா உங்கள் அடையாளம்’ என்றேன்.
ஆம். ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம் என்றில்லாமல் இந்த மண்ணில் ஆறறிவுள்ள மனிதனாக பிறந்த நாம் ஒவ்வொருவரும் நமக்கான அடையாளத்தை மற்றவர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த உலகுக்கு விட்டுச் செல்ல வேண்டும்.
அந்த வகையில் சேவாலயாவின் சேவை மகத்தானது.
கடந்த பத்து வருடங்களில் அவ்வப்பொழுது சிலமுறை சேவாலயாவுக்கு வந்திருந்தாலும் இந்த முறை குழந்தைகளுக்காக பேச வந்ததில் புத்தணர்வு பெற்றேன்.
நல்ல உள்ளங்களுக்கு சேவாலயாவின் பணி ஒரு சான்று.
சேவாலயாவில் இருந்து விடைபெறும் முன்னர் புவனேஸ்வரி முரளிதரனிடம் ‘எனக்கு உங்களை பார்த்தால் ரொம்ப பெருமையா இருக்கு. சாதனைப் பெண்மணியிடம் இத்தனை ஒரு சாத்வீகமா என வியப்பாக உள்ளது… உங்கள் எளிமையும் பண்பும் பாசமும் மற்றவர்களுக்கு ஒரு உதாரணம்…’ என்று வாழ்த்தினேன்.
விழாவின் லிங்க் என்னுடைய உரையின் சிறு பகுதியும் உள்ளது… https://youtu.be/jbLddtn4Hwc
அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
டிசம்பர் 11, 2018