பள்ளியில் ஏற்பட்ட சிறிய உளவியல் பிரச்சனைக்காக ஏற்கெனவே என்னிடம் கவுன்சிலிங் பெற்ற ஒரு பள்ளி மாணவி எனக்கு போன் செய்து பேசினாள்.
நடந்து முடிந்த தேர்வு குறித்தும் அவள் பள்ளி, படிப்பு, நண்பர்கள் குறித்தும் விசாரித்தேன்.
லீவில் சினிமா ஏதாவது பார்க்கப் போகிறாயா? என்று கேட்டதற்கு ‘ஆமாம் ஆண்ட்டி… நாளைக்கு விஸ்வாசம் புக் செய்திருக்கோம். அம்மாவும் நானும் போகப் போகிறோம்…’ என்றாள்.
‘அப்படியா… வெரிகுட்… நல்ல படம்… பார்க்க வேண்டிய படம்தான்… நயந்தாரா நடிப்பு நன்றாக இருக்கும்… பெண்கள் அறிவாளியா மட்டுமில்லாமல் தைரியமாக இருக்கவும், படிக்கும் மாணவர்கள் வெற்றின்னா என்ன, தோல்வின்னா என்ன அப்படின்னு தெரிஞ்சுக்கவும் பல விஷயங்கள் இந்தப் படத்தில் இருக்கு… என்ஜாய் பண்ணு’ என்றேன்.
‘சரி ஆண்ட்டி… ஆனா எனக்கு நயன்தாராவைப் பிடிக்காது…’
‘ஏன்?’
‘அம்மாவுக்குப் பிடிக்காது… அதனால் எனக்கும் அதை சொல்லிச் சொல்லி இன்ஃபுலியன்ஸ் செய்துவிட்டார்…’
13 வயது மாணவி ‘இன்ஃபுலியன்ஸ்’ குறித்து எத்தனை ஆழமாக ஒரு விஷயத்தைச் சொல்லி விட்டாள்.
‘ஹீரோயின் என்றால் மரத்தைச் சுத்தி டான்ஸ் ஆடவும் ஹீரோவை சுத்தி பாட்டுப்பாடவும் மட்டுமே நடிப்பாக செய்துகொண்டிருக்கும் ஹீரோயிச சினிமா உலகில் நயன்தாரா….’ என்பதை நான் முடிப்பதற்குள், ‘நயன்தாரா ஹீரோ தன்னைச் சுற்றிச்சுற்றி வரும்படி நடிப்பார்… இல்லையா ஆண்டி…’ என்றாள் அந்தச் சிறுமி ஆர்வம் கொப்பளிக்க.
‘இந்தப் பெண்ணுக்கா கவுன்சிலிங் தேவை… எவ்வளவு ஷார்ப்… எவ்வளவு வேகம்…’ என வியந்தேன்.
சினிமாவை வைத்தே அவளுக்குள் சில விஷயங்களை புகுத்த நினைத்தேன்.
‘நடிகை என்றால் அழகு சார்ந்தே அறியப்படும் சினிமா உலகில் நயன்தாரா தன்னம்பிக்கை, அறிவு சார்ந்து சுயமாக இயங்கும் தன்மை, தைரியம், நேர்மை இவற்றுடன் அன்பு, பண்பு, பாசம், நேசம் இத்தனையையும் வெளிப்படுத்தும் படங்களில் பெரும்பாலும் நடித்திருப்பார்…
இத்தனை குணங்களும் ஒவ்வொரு பெண்ணிடமும் இருக்க வேண்டியவை… உன்னிடமும் தான்…’ என்று நான் முடித்தபோது ‘சரி ஆண்ட்டி, நிச்சயமா தைரியா இருப்பேன்… தன்னம்பிக்கையா செயல்படுவேன்’ என அவள் மொழியில் சொல்ல நான் மகிழ்ந்தேன்.
பள்ளிச் சூழல், சமுதாயச் சூழல் என பெரும்பாலான இடங்களில் சூழல்தான் குழந்தைகளின் கவனத்தைச் சிதறடிக்கின்றன. அதில் இருந்து மீண்டு விட்டால் அவர்களை கைகளில்பிடிக்க யாராலும் முடியாது.
ஒரு நடிகையைப் பிடிப்பதற்கும் பிடிக்காமல் போவதற்குமே குழந்தைகள் தங்கள் தாயை ரோல் மாடலாக எடுத்துக்கொள்ளும்போது பெற்றோர்கள் எந்த அளவுக்கு தங்களை வடிவமைத்துக்கொள்ள வேண்டும் என்பது நிதர்சனமாகிறதல்லவா?
குழந்தைகள் நம்மை கவனிக்கவில்லை என நினைக்க வேண்டாம். அவர்கள் கண்களால் கவனிக்க மாட்டார்கள்… உணர்வுகளால் சுவாசிப்பார்கள். அணு அணுவாக உங்கள் பழக்க வழக்கங்கள் அவர்களை ‘இன்ஃபுலியன்ஸ்’ செய்யும்.
பெற்றோர்களே நீங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள். ஜாக்கிரதை!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
ஜனவரி 20, 2019