இன்று காலை பணி ஓய்வு பெற்ற 60 வயதைக் கடந்த ஒரு மூத்த பத்திரிகையாளரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் பல நண்பர்களை நினைவு கூர்ந்து அவர்கள் பண்புகளை புகழ்ந்து பேசினார்.
ஒரு நாள் அவர் நண்பர் ஒருவரை சந்திக்க ஒரு பத்திரிகை அலுவலகத்துக்கு சென்ற போது தன்னுடன் பணியாற்றிய தற்போது உயர் பதவியில் இருக்கும் சக ஊழியர் ஒருவர் எதேச்சையாக தன்னைப் பார்த்தவுடன் தன்னுடைய இருப்பிடத்திலிருந்து எழுந்து வந்து வரவேற்று உபசரித்து அன்புடன் பேசி நலன் விசாரித்தார். இந்த நிகழ்ச்சி தனக்கு இன்னமும் நெகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
இப்படி அவர் புகழ்ந்த நபருக்கு இவரைவிட 15 வயதுக்கு மேல் குறைவாக இருக்கும்.
இப்படி பலரது செய்கைகள் நமக்கு நெகிழ்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருப்பதை நாமும் பல நேரங்களில் உணர்ந்திருப்போம்.
‘நான் ஒரு கல்யாணத்துக்குச் சென்றபோது வயது முதிர்ந்த ஒரு மாமி என்னை இனம் கண்டுகொண்டு என்னிடம் வந்து செளக்கியமா என விசாரித்தார்… அந்த மாமி பாவம் கால் நடக்க முடியாமல் நடந்து வந்து பேசியது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது… நம் மீது இவ்வளவு அன்பா என சந்தோஷமாக இருந்தது…’
‘வழக்கமாகச் செல்லும் அந்த காய்கறி அங்காடியில் பழம் விற்கும் பையன் என் விருப்பம் அறிந்து நல்ல பழமாக எடுத்து அவனே ஒரு பையில் போட்டு உதவியது எனக்கு ஒரு சந்தோஷம்…’
‘ஒரு கோயிலுக்குச் சென்றபோது அந்தக் கோயிலில் தீபாரதனை காண்பித்துக்கொண்டிருந்தார்கள்…. நான் வாசலில் இருந்து ஓடி வருவதை கவனித்த குருக்கள் எனக்காக காத்திருந்து எனக்கு விபூதி குங்குமம் அளித்ததை நான் ரொம்ப ரொம்ப பெருமையாக நினைக்கிறேன்…’
‘ஆட்டோ டிரைவர் ஒருவர் நான் அவர் ஆட்டோவில் ஏறியதில் இருந்தே பதட்டமாக இருப்பதை கவனித்துவிட்டு ஏனம்மா இந்தப் பதட்டம்… பதட்டமா இருந்தா நினைச்சத செய்ய முடியாது… கொஞ்சம் பொறுமையா இருங்க… எல்லாம் நல்லபடியா நடக்கும்… என்று ஆறுதலாகப் பேசியபோது பிரச்சனையின் வலி பாதியாகிவிட்டது. எத்தனை நல்ல குணமுள்ள ஆட்டோ டிரைவர்…’
இப்படியான செய்கைகளையும், வார்த்தை உபசரிப்புகளையும் எங்கோ ஓரிரு இடங்களில்தான் இன்று காணமுடிகிறது. இவை நமக்குக் கிடைக்கும்போது அளவில்லா சந்தோஷம் அடையும் நாம் ஒவ்வொருவரும் அன்பான வார்த்தைகளையும், மரியாதைக்குரிய செய்கைகளையும் பிறருக்கு அளிக்கிறோமா?
பிறரிடம் இருந்து பெற்றதை பேரின்பமாகக் கருதும் நாம் ஒவ்வொருவரும் அதை திரும்பக் கொடுத்தால் நம்மைப் போல எத்தனை ஜீவன்கள் சந்தோஷமடைவார்கள், பயன்பெறுவார்கள்.
ஒரு சின்ன பாசிடிவான வார்த்தை, மரியாதைக்குரிய செயல்பாடு அன்று முழுவதும் நாம் செய்கின்ற பணிகளுக்கு எந்த அளவுக்கு ஊக்கம் அளிக்கும் என்பதை அனுபவித்தவர்களால் மட்டுமே உணர முடியும்.
ஒரு விடுமுறை தினத்தில் இந்தக் கட்டுரையை டைப் செய்துகொண்டிருந்தபோது வீட்டு வாசலில் காலிங் பெல் அடிக்க அவசரமாய் சென்று கதவைத் திறந்தேன். ‘அம்மா பூ வேணுமாம்மா…’ என எங்கள் ஃப்ளாட்டுக்கு வழக்கமாய் வரும் பூக்காரம்மா கேட்க சற்றே கோபம் எட்டிப் பார்த்தது.
காரணம்… எத்தனையோ முறை அவரிடம் சொல்லி இருக்கிறேன், பூ வேண்டுமென்றால் நானே உங்களைக் கூப்பிட்டு வாங்கிக்கொள்கிறேன்… நீங்கள் காலிங் பெல் அடுத்துக் கேட்காதீர்கள் என… ஆனாலும் அந்த அம்மா விடுவதாக இல்லை. ஒவ்வொரு சனிக்கிழமையும் அவர் பூ விற்பனை செய்ய எங்கள் ஃப்ளாட்டுக்கு வருவார்.
இப்போது ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ நினைவுக்கு வர உடனடியாக ‘இங்கப்பாருங்கம்மா இந்த வீட்டில் 2 வயதானவர்கள் இருக்கிறார்கள். இருவரும் ஹார்ட் பேஷண்ட். நீங்கள் காலிங் பெல் அடித்தால் அவர்களுக்கு திடுக்கென தூக்கிவாரிப் போடும். புரிந்துகொள்ளுங்கள்….’ என கடுமையுடன் சற்றே அன்பை இழைத்து சூழலை விளக்கினேன்.
‘மன்னிச்சுக்குங்கம்மா இத முன்னமே சொல்லி இருக்கக் கூடாதா…. என்னை இப்படி சங்கடப்படுத்திட்டியே தாயீ….’ என சொல்லியபடி நகர்ந்தாள்.
அதன் பிறகு அந்தப் பெண்மணி காலிங் பெல் அடித்து கேட்பதே இல்லை. நேரில் பார்த்தால் மட்டும் புன்முறுவலுடன் கேட்பாள். சரியான காரணத்தைப் புரியும்படி விளக்கியவுடன் தொந்திரவு செய்யக்கூடாது என புரிந்துகொண்டிருக்கிறார்.
‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும்’ – வேலை செய்தது எனக்கு. நீங்களும் முயற்சியுங்களேன்.
அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
ஜனவரி 22, 2019
ஆன்லைனில் தினசரி டாட் காமில் படிக்க… https://dhinasari.com/?p=67803
எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
தினசரி டாட் காம் ஜனவரி 22, 2019