திரு. சத்யா GP எழுதி ‘நண்பர்கள் பதிப்பகம்’ வாயிலாக வெளிவந்திருக்கும் ‘சர்வேஷின் கதைகள்’ புத்தகத்தை இன்று வாசித்தேன்.
யாரேனும் ஒரு பரிசு கொடுத்தால் அதைப் பயன்படுத்த வேண்டும், நாம் அதற்குக்கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்கள் கவனத்துக்குக் கொண்டு சென்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கொள்கை. இன்றளவும் பெரும்பாலும் பின்பற்றி வருகிறேன்.
புத்தகம் பரிசாக வந்தால்…
அதை படித்து அதுகுறித்து பெரிய அளவில் விமர்சிக்காவிட்டாலும், அந்தப் புத்தக வடிவமைப்பு, எழுத்தோட்டம் போன்றவை குறித்து சிறிய அளவிலாவது கருத்து தெரிவித்து எழுத்தாளருக்கு / பதிப்பகத்தாருக்கு தகவல் கொடுத்துவிடுவதை என் வழக்கமாகவே கொண்டுள்ளேன். இது படைப்பாளர்களுக்கு பெரிய ஊக்கமாக அமையும்.
அந்த வகையில், எங்கள் காம்கேரின் கிரியேடிவிடியில் உருவான அட்டைப்படத்துடன் வெளியாகியுள்ள ‘சர்வேஷின் கதைகள்’ என்ற புத்தகம் குறித்து நூலாசிரியர் திரு. சத்யா GP அவர்களுக்கு….
இந்தப் புத்தகத்தின் சிறப்பம்சங்களாக நிறைய சொல்லலாம்.
ஒன்று…
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்த நண்பர்கள் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த பதிப்பகம் மாற்றுத்திறனாளிகள் மட்டும் பணிபுரியும் நிறுவனம் என சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். இதுவே இந்த நூலை முழுவதும் படிக்க பிள்ளையார் சுழி போட்டது எனலாம்.
இரண்டாவது…
அடுத்து ‘என்னை வளர்த்து உங்கள் அனைவர் முன்பாக ஒரு இயல்பான பிரஜையாக வளைய வருபவனாக என்னை ஆளாக்கிய என் அம்மா ஸ்ரீமதி ராஜலஷ்மி அவர்களுக்கு…’ என சமர்ப்பணம் செய்துள்ளது அவரது தாய் மீது அவர் கொண்டிருக்கும் அன்பையும், மரியாதையையும் வெளிக்காட்டுகிறது.
மூன்றாவது..
சர்வேஷின் கதைகள் என்ற புத்தகத்தில் உள்ள அத்தனை கதைகளிலும் கதாநாயகன் ‘சர்வேஷ்’தான். ஈசன் மீதுள்ள பக்தியால் அட்டைப்படத்தில் கைலாச மலை வர மாதிரி அட்டைப்படம் இருக்குமாறு வடிவமைக்க விரும்பினார்.
அவரது விருப்பத்துக்கு ஏற்ப, இந்தப் புத்தகத்துக்கு அட்டை வடிவமைப்பு என் கிரியேடிவிடியில் எங்கள் காம்கேரின் கைவண்ணத்தில்.
நான்காவது…
எல்லா கதைகளையும் படித்துவிட்டேன். ஆனாலும் என் மனதுக்கு நெருக்கமான கதை ‘கீதாபதேசம்’.
இதில் அம்மாவின் பாசம், அப்பாவின் நேர்மை, பாசமான் அண்ணி, பெருமாள் கோயில், பாயின் நோன்பு என வாழ்க்கைக்கு அவசியமான அத்தனையையும் அழகாக சொல்லி இருக்கிறார்.
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக இந்தக் கதையை ‘படிக்கும்போது தியரி முடிச்சு பிராக்டிகல் கிளாஸ் வரும். படிச்சு முடிச்சு வேலைக்குப் போயிட்டா முதல்ல பிராக்டிகல் ஆரம்பிச்சுட்டு, பிறகு தியரி…’ என முடித்திருப்பார். உண்மைதான்.
எல்லாக் கதைகளையும் தன் அனுபவத்தை எழுதியதைப் போலவே உள்ளது. அனுபவமா அல்லது கற்பனையா என தெரியவில்லை. ஆனாலும் கதைகள் அத்தனையும் இயல்பான வாழ்க்கை அனுபவங்களின் பகிர்தலாகவே எனக்குத் தோன்றியது.
இந்தப் புத்தகத்தை 2018 அக்டோபர் மாதம் மிக சிறப்பான முறையில் வெளியிட்டு என்னையும் அன்புடன் அந்த நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்.
‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ – இந்தக் கதை ஒன்றே இந்தப் புத்தகத்தில் உள்ள மற்ற கதைகள் எப்படி இருக்கும் என்பதற்கு சான்று.
ஐந்தாவது…
இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிப்பவர்கள் மாற்றுத்திறனாளிகளால் இயங்கி வரும் ஒரு நிறுவனத்துக்கு உதவுவதாக இருக்கும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software Private Limited
ஜனவரி 27, 2019
குறிப்பு:
நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் படித்த கதை புத்தகம் இது.
கதை கவிதை கட்டுரை என எழுதி வந்த எனக்கு தொழில்நுட்பம் பணியான பிறகு என் சிந்தனை முழுக்க அதிலேயே.
இந்த புத்தகத்தைப் படித்தபோது என் எழுத்து கற்பனை கதை கவிதை கட்டுரை பற்றியும் சின்ன ஃப்ளாஷ் பேக் ஓடியது…
என் 21 வயதுக்குள் நான் எழுதிய 100-க்கும் மேற்பட்ட கதை, கவிதை, கட்டுரைகள் சாவி, கலைமகள், அமுதசுரபி, கல்கி, விகடன், குமுதம் என பல முன்னணி பத்திரிகைகளில் வெளியாகி பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளன.
காம்கேர் சாஃப்ட்வேர் என் பணியாக மாறியதும், என் எழுத்து தொழில்நுட்பம் நோக்கிப் பயணிக்கத் தொடங்கியதால் 100-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப புத்தகங்கள்…
30-க்கும் மேற்பட்ட மேற்பட்ட வாழ்வியல், பேரண்டிங், இளைய தலைமுறை, இலக்கியம், தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம், ஆன்மிக நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன்.