சாதாரண வேலையைக் கூட உன்னதமாக நினைத்து பூரண ஈடுபாட்டுடன் செய்யும்போது நமக்கு மனநிறைவு கிடைப்பதுடன், நிறைவடைந்த வேலையிலும் அழகு ததும்புவது நிச்சயம்.
ஒரு வேலையை செய்ய ஆரம்பிக்கும்போதே அதை முடிக்கும்போது எப்படி இருக்கும் என கற்பனையில் மனக்கண் முன் கொண்டுவந்து பார்த்து மகிழ்ந்தபடி செய்தால் வேலை செய்வதும் சுலபமாக இருக்கும். மனமும் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் இயங்கி உடல் சோர்வை விரட்டும்.
எந்த வேலையானாலும் மற்றவர்களுக்காக செய்கிறோம் என்ற நினைத்து செய்தால் உடலும் மனதும் சோர்வடையும்.
மாறாக அதை நம் வேலையாக பாவித்து நமக்காக செய்கிறோம் என்ற ஆழ்ந்த ஆர்வத்துடன் ஆக்கப்பூர்வமாக அணுகும்போது அது எத்தனை கடினமான வேலையாக இருந்தாலும் நமக்கு உடல் சோர்வோ, மனச் சோர்வோ வரவே வராது. அது கொடுக்கும் பூரண மனத்திருப்தியை அனுபவிப்பவர்களால் மட்டுமே உணர முடியும்.
அதுபோல நான்கு பேர் இணைந்து செயல்புரியும் இடம் எதுவாக இருந்தாலும் அது சிறப்பாக செயல்பட அதில் உள்ள அனைவரும் உயர்ந்த நோக்கத்துடன் சரியாக செயல்பட வேண்டும். அப்போதுதான் இலக்கை எட்ட முடியும்.
அது கமர்ஷியல் நிறுவனமாக இருந்தாலும் சரி அல்லது ஏதேனும் சேவை அமைப்பாக இருந்தாலும் சரி. ஏன் நம் வீடாக இருந்தாலும் அதே லாஜிக்தான்.
ஒரு பெரிய பல்கலைக்கழகம் சிறப்பாக இயங்குவதற்கு, வாசலில் நிற்கும் செக்யூரிட்டி முதல் பேராசிரியர்கள், மேனேஜ்மெண்ட் ஸ்டாஃப், அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஸ்டாஃப் மற்றும் மாணவர்கள் என அத்தனை பேருக்கும் அந்தப் பல்கலைக்கழகம் நம்முடையது என்கின்ற ஈடுபாடு இருக்க வேண்டும்.
அந்த நிலையில் இருந்தால் மட்டுமே அந்த செக்யூரிட்டியிடம் ‘நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?’ என்ற கேள்வியை நாம் கேட்டால் ‘இந்த பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சிறப்பாக படித்து முடிக்க உதவுகிறேன்’ என்ற ஸ்மார்ட்டான பதிலை பெற முடியும். இல்லை என்றால் ‘நான் இந்த பல்கலைக்கழகத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறேன்’ என்ற சாதாரண பதிலை மட்டுமே பெற முடியும்.
அமெரிக்க முன்னால் ஜனாதிபதி திரு. ஜான் கென்னடிக்கு இந்த அனுபவம் கிடைத்தது.
அவர் ஒரு முறை நாசா விண்வெளி மையத்தைப் பார்வையிடச் சென்றிருந்தபோது அங்கு தரையை சுத்தம் செய்துகொண்டிருந்த ஒரு பணியாளரிடம் ‘ஹலோ நாசாவில் நீங்கள் என்ன வேலை செய்துகொண்டிருக்கிறீர்கள்?’ என கேட்டுள்ளார்.
பொதுவாக தரை துடைக்கும் பணியாளர்கள் என்ன பதில் சொல்வார்கள். ‘இங்கு இடத்தை சுத்தம் செய்யும் பணியில் வேலை செய்கிறேன்’ என்றுதானே சொல்வார்கள். ஆனால் அந்தப் பணியாளர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?
‘நான் சந்திரனுக்கு ஆட்களை அனுப்பும் உன்னதப்பணிக்கு உதவிக்கொண்டிருக்கிறேன்…’
என்ன ஒரு அட்டகாசமான பதில்? இதுவல்லவோ ஸ்மார்ட்னெஸ்.
ஸ்மார்ட்டான அணுகுமுறை
ஒருமுறை திருப்பதிக்கு காரில் சென்றுகொண்டிருந்தோம். வழக்கம்போல டிரைவரிடம் பேச்சுக் கொடுத்து பயணத்தை இனிமையாக்கியபடி.
பயணத் தொடக்கத்தில் இருந்தே அவருடைய அணுகுமுறை மற்றவர்களைவிட வித்தியாசமாகவே இருந்தது. நடை உடை பழகும்விதம் என அனைத்தும் ஏதோ அவரே அந்த டிராவல்ஸ் உரிமையாளர் என்பது போன்ற பாவனை. அத்தனை தன்னம்பிக்கை.
இடையில் அவர் படிப்பு, வேலை, குடும்பம், குழந்தைகள் என பொதுவான விசாரிப்புகளும் வந்தன.
படிப்பு குறித்த கேள்விக்கு ‘மெட்ரிக் படிச்சிருக்கேன் மேடம்…’ என்று சொன்னபோது நான் கொஞ்சம் யோசித்தேன்… ‘பத்தாம் வகுப்பா?’ என்றேன்.
பொதுவாக ‘10-வது தான் படிச்சிருக்கேன்’ என்று குரலை தாழ்த்தி தன்னம்பிக்கை இல்லாமல் பேசுகின்ற பெரும்பாலான டிரைவர்களுக்கு மத்தியில் இவருடைய தன்னம்பிக்கை அசர வைத்தது மட்டுமில்லாமல் எதிராளிக்கும் ஏதோ ஒரு பாஸிட்டிவிடி வந்து ஒட்டிக்கொள்வதைப் போன்ற தோரணை அசத்தல்.
‘ஆமாம் மேடம்…’ என்றவர் தொடர்ந்தார்.
‘மெட்ரிக் முடித்த பிறகு பல வேலைகளில் இருந்தேன்… எந்த வேலையாக இருந்தாலும் பூரண மனதுடன் ஈடுபடுவேன். சலிப்பு ஏற்படும்வரை அந்த வேலையைத் தொடர்வேன். எப்போ சலிப்பு வருகிறதோ அப்போது அந்த வேலையை விட்டு வேறு வேலைக்கு சென்றுவிடுவேன்…’ என்று சொன்னவர் தன் 35 வயதுக்குள் 5 வேலைகளில் இருந்ததை சொன்னார். அத்தனையிலும் அவருடைய வித்தியாசமான அணுகுமுறையினால் தன் படிப்புக்கும் மீறிய உயரிய ஸ்தானத்திலேயே இருந்திருக்கிறார்.
இப்போது, டிராவல்ஸில் டிரைவிங் மட்டும் இவரது பணியல்ல, அவருக்கென 3 கார்களை ஒதுக்கி, தினமும் சென்னை to திருப்பதிக்கு பயண ஏற்பாடுகளை நிர்வகிக்கும் பொறுப்பை அவரிடமே கொடுத்திருக்கிறார்கள்.
தன் படிப்பை அறிமுகப்படுத்திக்கொண்ட விதத்தில் இருந்து பல்வேறு விதமான வேலைகளில் இருந்துவிட்டு தற்போதுள்ள டிராவல்ஸ் பணி வரை அவர் வார்த்தைகளால் வரைந்த கிராஃப் கேட்பவர்களுக்கு உத்வேகம் அளித்தது.
ஒருமுறை திருச்சியில் இருந்து சென்னைக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தோம். செங்கல்பட்டை அடுத்து ஒரு இயற்கை உணவகத்தில் டிபன் சாப்பிடச் சென்றோம்.
ரெஸ்ட் ரூம் உள்ளே சென்றதும் நாம் யு.எஸ்ஸில் இருக்கிறோமா அல்லது இந்தியாவில் இருக்கிறோமா என சந்தேகம் வந்துவிட்டது. நறுமணத்துடன் பளிச்சென காட்சி அளித்ததைப் பார்த்தவுடன், நேஷனல் ஹைவேயில் இப்படியும் ஒரு ரெஸ்ட் ரூம் பராமரிப்பதைக் கண்டு ஆச்சர்யப்பட்டேன். அத்தனை சுத்தம். வெளியே புன்னகையுடன் யூனிஃபார்ம் அணிந்த இளம்பெண் நின்றுகொண்டிருந்தார்.
அவரிடம் ‘நீங்கள் டாய்லெட்டை நன்றாக மெயின்டெயின் செய்கிறீர்கள்…’ என பாராட்ட வாய் எடுப்பதற்குள், ‘பாத்ரூம் எப்படி இருக்கிறது மேடம்… நல்லா சுத்தமா இருக்கா… நல்லா பராமரிக்கிறேனா?’ என வெள்ளந்தியாகக் கேட்க ‘சூப்பரா மெயின்டெயின் செய்கிறீர்கள்….’ என்று சொல்லிப் பாராட்டினேன்.
இரவு கடை மூடும் சமயத்தில்கூட முக மலர்ச்சியுடன் தன் பணியை செய்துகொண்டிருக்கும் ஹோட்டல் ஊழியர்களை பார்க்கும்போது, ஹோட்டல் உரிமையாளர் உழைக்கும் கரங்களை எந்த அளவுக்கு ஊக்குவிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஹோட்டல் உரிமையாளரும், ஊழியர்களும் ஒரே நேர்கோட்டில் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.
ஒரு நிறுவனத்தை நிர்வகிக்கும் உரிமையாளராக இருக்கலாம் அல்லது அந்த நிறுவனத்தின் பாத்ரூமை சுத்தம் செய்யும் பணியாளராக இருக்கலாம். எந்தச் செயலாக இருந்தாலும் ஆத்மார்த்தமாக செய்யும்போது, அது மிக அழகானதாக இருக்கும் என்பதற்கு இதைவிடச் சான்று வேறு வேண்டுமா?
பொதுவாக ஹோட்டல்களில் சாப்பாடு எப்படி இருக்கிறது, ஜவுளிக்கடைகளில் டிரஸ் கலக்ஷன் எப்படி இருக்கிறது, மளிகைக்கடைகளில் பொருட்களின் தரம் எப்படி இருக்கிறது என்று நம்மிடம் கேட்டு சந்தோஷப்படும் வியாபாரிகளைப் பார்த்திருப்போம்.
ஆனால், பாத்ரூமைப் பராமரிக்கும் அந்த ஹோட்டல் பெண் பணியாளர் முகமெல்லாம் புன்னகையுடன் இரவு பணி முடியும் நேரத்தில்கூட ‘பாத்ரூமை நல்லா பராமரிக்கிறேனா மேடம்’ என்று கேட்ட ஸ்மார்ட்டான கேள்வி சென்னை திரும்பும் வரை என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
ஸ்மார்ட்டான கஸ்டமர் சர்வீஸ்
அமெரிக்காவில் கஸ்டமர் சர்வீஸ் அற்புதமாக இருக்கும். கடைகளுக்குள் சென்றதுமே, முகம் மலர ‘Have a Nice Day… Welcome’ என்று சந்தோஷமாக வரவேற்கிறார்கள். நாம் ஏதேனும் கேட்டால் நமக்கு பதில் சொல்வதற்காகவே பிறப்பெடுத்திருப்பதைப் போல மிகவும் சந்தோஷமாக நாம் பேசுவதை கேட்டு அதற்கு பதிலளிக்கிறார்கள்… தேவைப்பட்டால் உதவி செய்கிறார்கள்.
கடையில் பில் போடும் போது ஏதேனும் தவறு ஏற்பட்டால், நிர்வாகம் அதற்கு முழு பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது. உதாரணத்துக்கு, 100 டாலருக்கு பில் போடுவதற்கு பதிலாக 50 டாலர் என்று பில்லை தவறாகப் போட்டு விட்டால், அந்த இழப்பை நிர்வாகம் ஏற்றுக்கொள்கிறது.
வாடிக்கையாளர்களிடம் கேட்பதில்லை. மேலும் தவறு செய்த ஊழியரையும் வாடிக்கையாளருக்கு முன்னால் திட்டி அவமானப்படுத்துவதில்லை.
குறிப்பாக இங்கு பணிபுரியும் நபர்களை மேற்பார்வைப் பார்க்க ஒரு அதிகாரி அமர்த்தப்படுவதில்லை. பணிபுரிபவர்களுக்கே முடிவெடுக்கும் உரிமையை நிர்வாகம் கொடுத்திருப்பதால் அவர்கள் மனமகிழ்ச்சியுடன் ஸ்மார்ட்டாக வேலை செய்ய முடிகிறது.
உதாரணத்துக்கு வாடிக்கையாளர்கள் ஒரு பொருளை சரியில்லை என்று திருப்பிக் கொடுக்க வந்தால், பணியாளர்களே அதை அப்படியே வாங்கி ஓரம் கட்டி விட்டு, புது பொருளை கொடுத்தனுப்புகிறார்கள். பொருளே வேண்டாம் என்றாலும் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறார்கள். வாடிக்கையாளர்களைக் காத்திருக்கச் செய்துவிட்டு நிர்வாகத்திடமோ மேலிடத்திலோ அல்லது மேனேஜரிடமோ ஒப்புதல் கேட்க ஓடுவதில்லை. முடிவெடுக்கும் உரிமையை பணியாளர்களிடமே கொடுத்துள்ளனர் நிர்வாகத்தினர்.
அமெரிக்கா முழுவதும் கிளைகள் பல உள்ள ஒரு பெரிய கடையின் உரிமையாளர்கூட, ஏதேனும் ஒரு பில் கவுண்டரில் ஆள் இல்லாதபோது பில் போடுவதற்கும் தயங்குவதில்லை.
முதலாளி தொழிலாளி என்னும் பாகுபாடே அங்கு இல்லை. அனைவருமே முழு ஈடுபாட்டுடன் முகமலர்ச்சியோடு வேலை செய்கிறார்கள்.
அமெரிக்காவில் பின்பற்றும் இந்த அணுகுமுறையை மேலே குறிப்பிட்ட டிராவல்ஸ் உரிமையாளரும் ஓட்டல் நிர்வாகியும் கடைபிடிப்பதால்தான் அந்த பணியாளர்களிடம் ஸ்மார்ட்னெஸ் வெளிப்படுகிறது.
யோசிப்போம்!
ஆன்லைனில் மின்னம்பலத்தில் படிக்க… https://minnambalam.com/k/2019/01/26/20
எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
@ மின்னம்பலம் டாட் காம்
வெள்ளிதோறும் வெளியாகும் தொடரின் பகுதி – 12