சில ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் காம்கேர் மூலம் நான் நடத்தி வரும் ஆங்கில ஜர்னல் (English Journal) ஒன்றுக்கு ஆர்டிகல் கேட்டு திரு. சாருகேசி அவர்களை தொடர்புகொண்டேன்.
அடுத்த இரண்டு நாட்களில் ஆர்டிகல் வேர்ட் ஃபைலாகவும், பி.டி.எஃப். ஆகவும் என் இமெயிலில்.
‘பேமெண்ட் குறித்து அவரிடம் கேட்டதற்கு நான் என் எழுத்தை நானாக காசு கேட்டு விற்பதில்லை. உரிய சன்மானம் என்ன கொடுக்கிறீர்களோ கொடுங்கள்’ – என்று என்றென்றும் மனதில் நிற்கும் பதில்.
கட்டுரை – தெளிவான ஆங்கிலம்; எடிட் செய்ய வேண்டிய அவசியமே இல்லாமல் நான் கேட்டிருந்த சப்ஜெக்ட்டுக்குப் பொருத்தமான கருத்துக்களுடன் அருமையான நடையில்.
அடுத்து TAG சென்டரில் மாதந்தோறும் இரண்டாவது செவ்வாய் கிழமை நடைபெற்றுவரும் ‘தமிழ் புத்தக நண்பர்கள்’ புத்தக மதிப்புரை நிகழ்ச்சியில் நேரில் சந்தித்தேன்.
ஒவ்வொரு மாதமும் கலந்துகொள்ள முடியாவிட்டாலும் நேரம் கிடைக்கும்போது கலந்துகொள்வேன்.
ஒருமுறை நான் கலந்துகொண்ட தினமன்று நடந்த நிகழ்வும் மனதைவிட்டு விலகாத நினைவாகியது.
புத்தக மதிப்புரை நிகழ்வு தொடங்கியது.
மதிப்புரை செய்தவரும் ஒரு நூலாசிரியரே. கிட்டத்தட்ட 1 மணி நேரம் தான் எடுத்துக்கொண்ட புத்தகம் குறித்துப் பேசினார். அவர் பேசிய புத்தகம் வேறொரு நூலாசிரியருடையது.
அவர் புத்தகம் குறித்து சரியாக தயாரிப்பு இல்லாமல் மேலோட்டமாக பேசியது பார்வையாளர்களாகிய எங்களுக்கே தெரிந்தது.
மதிப்புரை செய்து முடித்ததும் மேடையிலேயே அந்த நூலாசிரியருக்கு அறிவுரை சொல்லி ‘மதிப்புரை செய்பவர்கள் எந்த அளவுக்கு தயாராக வேண்டும்’ என்ற நுணுக்கத்தை அறிவுறுத்தினார்.
அவரது அறிவுரை கொஞ்சம் கடுமையாக இருந்தாலும், புத்தகம் எழுதிய ஆசிரியரைவிட பல மடங்கு அதற்கு மதிப்புரை செய்ய வருபவர் தயாராக வேண்டும் என்பதுதான் அவர் சொன்ன கருத்து.
‘பார்வையாளர்கள் தங்கள் நேரத்தை ஒதுக்கி தங்கள் வேலைகளை எல்லாம் தள்ளி வைத்துவிட்டுத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வருகிறார்கள். எனவே அவர்களையும் மனதில் வைத்து நிகழ்ச்சியில் மதிப்புரை வழங்க வருபவர்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளுங்கள்…’ என சொல்லி முடித்து மின்னல் வேகத்தில் மேடையை விட்டு கீழிறங்கினார்.
இந்த வயதிலும் எத்தனை சுறுசுறுப்பு…. வேகம்… தார்மீகக் கோபம்.
இன்று திரு. சாருகேசி அவர்கள் இயற்கை எய்தினார் செய்தியை கேட்டதும் மனதுக்குள் நிழலாடிய நினைவுகளுடன் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிராத்தனைகளுடன்…
காம்கேர் கே. புவனேஸ்வரி
ஜனவரி 30, 2019