ஜனவரி 30 முதல் பிப்ரவரி 4 வரை சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடைபெறும் இந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சியில் பாரத மாதா ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.
டாக்டர் தி.தேவநாதன் யாதவ் அவர்களின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் மற்றும் வின் தொலைக்காட்சி சார்பில் அமைக்கப்பட்ட இந்த பாரத மாதா ஆலயத்தை 2019 ஜனவரி 29 அன்று ஆடிட்டர் திரு. குருமூர்த்தி அவர்கள் திறந்துவைக்க, காஞ்சி பெரியவர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்கள் பாரத மாதாவிற்கு பூஜை செய்து கஜ , கோ வழிபாடு செய்தார்.
ஜனவரி 30- முதல் பிப்ரவரி 4 வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை, இந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சி நடைபெற உள்ளது.
வாய்ப்புள்ளவர்கள் இந்தக் கண்காட்சிக்கு வருகை தந்து பாரத மாதாவையும் தரிசிக்கலாம்.
இந்த விழாவுக்கு இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் துணைத்தலைவர் திரு ர. குணசீலன் அவர்கள் அழைப்பின் பேரில் சென்று இவர்கள் அமைத்திந்த ஆலயத்தில் பாரத மாதவை வணங்கினேன்.
கிராமத்து ஓட்டு வீட்டின் மாடல், அங்குள்ள பெட்டிக் கடை, கன்றுக்குட்டியுடன் கூடிய மாடு, மாட்டு வண்டி என அத்தனைக்கும் மாடல் வைத்திருக்கிறார்கள்.
கூடவே நிஜ மாடு கன்றுக்குட்டியுன், நிஜ யானை என அமர்க்களப்படுத்தி உள்ளார்கள்.
காஞ்சி பெரியவர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்புரை ஆற்றினார்.
முன்பெல்லாம் ஆச்சாரம், சஞ்சாரம் மூலம் இந்துமதத்தின் சிறப்புகள் தானாகவே மக்களிடம் சென்றுகொண்டிருந்தது. இப்போதெல்லாம் பிரசாரம் மூலம் தான் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியுள்ளது என நகைச்சுவையுடன் நிதர்சனத்தை எடுத்துரைத்தார்.
இப்படி இந்துமதத்தின் சிறப்புகளை யாரோ வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு சொல்வதற்காக பிரசாரம் செய்யவில்லை, நம் மக்களுக்காகவே பிரசாரம் செய்ய வேண்டியுள்ளதே சற்று சிந்திக்க வேண்டிய விஷயமாகிவிட்டது என்றும் ஆழமான கருத்தை அமைதியாக எடுத்துச் சொன்னார்.
நல்ல விஷயங்கள் உள்ளே சென்றால்தான் மனதுக்குள் சென்றிருக்கும் தீய எண்ணங்கள் தானாகவே வெளியேறும் என்ற பேருண்மையையும் நிதானமாகச் சொல்லி உரையை முடித்தார்.
நிகழ்ச்சிக்குச் சென்று வந்ததது முதல் மனதுக்குள் ‘பாரத மாதா’ கம்பீரமாய் வந்து உட்கார்ந்துகொண்டுவிட்டாள். எனக்குள்ளும் அந்த கம்பீரம் ஆட்கொண்டது.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
ஜனவரி 30, 2019