இன்று காலையிலேயே ஒரு வித்தியாசமான அனுபவம்.
அரசாங்கத்தில் உயரிய பதவியில் இருக்கும் ஒருவர் போன் செய்திருந்தார்.
‘உங்கள் புத்தகங்களை படித்திருக்கிறேன். எங்கள் அலுவலக ஸ்டாஃப்களுக்கு வகுப்பெடுக்க பயன்படுத்தி வருகிறோம்….’
நான் உற்சாகமாகி ‘அப்படியா… என்ன புத்தகம்…’ என்றேன்.
‘நீங்கள் எழுத ஆரம்பித்த 1995-களில் இருந்தே உங்கள் புத்தகங்களைத்தான் எங்கள் ஸ்டாஃப்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிகளுக்குப் பயன்படுத்துகிறோம்…’ என்று சொல்லிவிட்டு அண்மையில் வெளியான புத்தகம் குறித்து கேட்டு குறித்துக்கொண்டார்.
இதுவரை நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது பேச்சு வார்த்தை.
இதன் பிறகுதான்…
அவர் ‘உங்கள் புத்தக சேல்ஸ் எப்படி இருக்கிறது…’ என்றார்.
‘மிக நன்றாக சென்றுகொண்டிருக்கிறது… என் பெரும்பாலான தொழில்நுட்பப் புத்தகங்கள் 20 பதிப்பு கூட சென்றிருக்கின்றன…’ என்று மகிழ்ச்சியுடன் சொன்ன அடுத்த நொடி ‘ஆமாம் மேடம். வேறு யாரும் தொழில்நுட்பம் எழுதுவதில்லை என்பதால் இருக்கும்…’ என்றாரே பார்க்கலாம்.
ஒரு நிமிடம் எனக்கு என்ன பதில் சொல்வது என புரியவில்லை.
ஆனாலும் சமாளித்துக்கொண்டு ‘அப்படி இல்லை சார்…. மற்ற துறை எழுத்தாளர்களைப் போலவே பலரும் தொழில்நுட்பம் குறித்து எழுதுகிறார்கள். அவர்கள் தாங்கள் படித்ததை எழுதுகிறார்கள் அல்லது படித்து எழுதுகிறார்கள் அல்லது மொழி பெயர்க்கிறார்கள்.
நான் என் சாஃப்ட்வேர் நிறுவனம் மூலம் தயாரிக்கின்ற சாஃப்ட்வேர்/அனிமேஷன்/APP/ஆவணப்படம் இவற்றினால் கிடைக்கும் அனுபவங்களைப் பதிவு செய்கிறேன். அதனால் எழுத்தின் வீச்சும், புத்தகங்களின் ரீச்சும் நன்றாக சென்றுகொண்டிருக்கிறது…’ என்றேன்.
இவர்களுக்கெல்லாம் புரிய வைக்க முடியுமா என தெரியவில்லை. புரிதல் இல்லாத கருத்துகள் என் காதுகளுக்கு வரும்போது அதற்கு பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை. பேச வேண்டிய நேரத்தில் பேசித்தான் ஆக வேண்டும் என்பதால் பதிலை புரியும்படி விளக்கமாகச் சொன்னேன்.
ஏனோ சில நாட்களுக்கு முன்னர் பத்திரிகையாளர் திரு. திருவட்டாறு சிந்துகுமார் அவர்கள் சொன்ன கருத்து நினைவுக்கு வந்தது.
“நீங்கள் பேஸ்புக்கில் என்னுடன் நண்பரான பின்னர் என் மனைவி மீனாம்பிகா, காம்கேர் புவனேஸ்வரி மேடத்தின் புத்தகங்கள் எங்க ஸ்கூல் லைப்ரரியில் இருக்கு…நான் வேலைக்குச்சேர்ந்த பின்னர்தான் கம்ப்யூட்டரே கத்துகிட்டேன். மொதல்ல ஒண்ணுமே புரியலை..அப்புறம் இவங்க எழுதின புக்கைப்பார்த்துதான், நன்றாக புரிந்து கொண்டு கம்ப்யூட்டரை ஆபரேட் பண்ண கத்துகிட்டேன்… மட்டுமல்லாம இவர் எழுதும் புத்தங்களில் நமக்கு ஏற்படும் சின்னச்சின்ன சந்தேகங்களுக்குக்கூட தெளிவாக விளக்கம் கொடுத்திருப்பார்’ என்றார்.
பொதுவாக கம்ப்யூட்டரில் தெளிவடைய வேண்டிய தமிழ் மக்கள் நீங்கள் எழுதிய புத்தகங்களை படித்தாலே போதும் என்பதே எங்கள் இருவரின் கருத்துமட்டுமல்ல; உங்கள் நூல்களை உள்வாங்கி புரிந்துகொண்ட எல்லோரின் கருத்தாகவும் இருக்கமுடியும். வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் சேவை…”
எல்லோராலும் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடிவதில்லை. நான் தொழில்நுட்பத்தைச் சொல்லவில்லை. மற்றவர்களின் திறமைகளையும், உணர்வுகளையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.
இந்த இடத்தில் ஒரு செய்தியை பதிவு செய்ய விரும்புகிறேன்.
எங்கள் காம்கேர் மூலம் நாங்கள் தயாரிக்கும் சாஃப்ட்வேர், அனிமேஷன், APP, ஆவணப்படங்கள் இவற்றின் மூலம் நான் பெறுகின்ற அனுபவங்களை கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வப்பொழுது பதிவு செய்து வருகிறேன்.
இதனால் நான் எழுதிய தொழில்நுட்பப் புத்தகங்கள் 100-ஐ தாண்டியுள்ளன.
அதுபோல தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மனிதர்களோடும் பயணிப்பதால் அவர்களுகாகவும் ஆன்மிகம், சுயமுன்னேற்றம், பேரண்டிங், இளைய தலைமுறை, வாசிப்பு, இலக்கியம், தன்னம்பிக்கை என்று 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளேன். எழுதியும் வருகிறேன்.
தவிர எங்கள் நிறுவன அனிமேஷன் மற்றும் ஆவணப்படங்களுக்கும் ஸ்கிரிப்ட் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுவதும் நான்தான்.
இதற்கும் மேல் உங்கள் அனைவருக்கும் தெரியாத ஒரு விஷயம். நான் கல்லூரியில் M.Sc., படித்து முடித்த 21 வயதிற்குள் சாவி, கல்கி, குமுதம், விகடன், அமுதசுரபி, கலைமகள், விஜயபாரதம் என பல்வேறு பத்திரிகைகளில் 100-க்கும் மேற்பட்ட கதைகள் கவிதைகள் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அவற்றில் பல பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளன.
குறிப்பாக சாவியில் பரிசுபெற்ற ‘நியதிகள் மாறலாம்’ என்ற கதையும், கலைமகளில் பரிசு பெற்ற ‘வேரை விரும்பாத விழுதுகள்’ என்ற கதையும், ராஜம் இதழில் பரிசு பெற்ற ‘அம்மா பொய் சொல்கிறாள்’ என்ற கதையும், விஜயபாரதத்தில் பரிசு பெற்ற ‘நவபாரத சிற்பிகள் நாம்’ என்ற கட்டுரையும் முக்கியமானவை. காலத்தால் அழியாத கருத்துக்களைச் சொன்ன எழுத்துக்கள் அவை.
இன்று காலையில் வந்த அலைபேசி அழைப்பு பல பழைய நல்ல நினைவுகளை கிளறிவிட்டது…
எல்லாம் நன்மைக்கே!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
ஜனவரி 31, 2019