கனவு மெய்ப்பட[13] – பெற்றோர்களே நீங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள்! (minnambalam.com)

பள்ளியில் ஏற்பட்ட சிறிய உளவியல் பிரச்சனைக்காக ஏற்கெனவே என்னிடம் கவுன்சிலிங் பெற்ற ஒரு பள்ளி மாணவி எனக்கு போன் செய்து பேசினாள்.

நடந்து முடிந்த தேர்வு குறித்தும் அவள் பள்ளி, படிப்பு, நண்பர்கள் குறித்தும் விசாரித்தேன்.

லீவில் சினிமா ஏதாவது பார்க்கப் போகிறாயா? என்று கேட்டதற்கு ‘ஆமாம் ஆண்ட்டி… நாளைக்கு விஸ்வாசம் புக் செய்திருக்கோம். அம்மாவும் நானும் போகப் போகிறோம்…’ என்றாள்.

‘அப்படியா… வெரிகுட்… நல்ல படம்… பார்க்க வேண்டிய படம்தான்… நயந்தாரா நடிப்பு நன்றாக இருக்கும்… பெண்கள் அறிவாளியா மட்டுமில்லாமல் தைரியமாக  இருக்கவும், படிக்கும் மாணவர்கள் வெற்றின்னா என்ன, தோல்வின்னா என்ன அப்படின்னு தெரிஞ்சுக்கவும் பல விஷயங்கள் இந்தப் படத்தில் இருக்கு… என்ஜாய் பண்ணு’ என்றேன்.

‘சரி ஆண்ட்டி… ஆனா எனக்கு நயன்தாராவைப் பிடிக்காது…’

‘ஏன்?’

‘அம்மாவுக்குப் பிடிக்காது… அதனால் எனக்கும் அதை சொல்லிச் சொல்லி இன்ஃபுலியன்ஸ் செய்துவிட்டார்…’

13 வயது மாணவி ‘இன்ஃப்லுயன்ஸ்’ குறித்து எத்தனை ஆழமாக ஒரு விஷயத்தைச் சொல்லி விட்டாள்.

‘ஹீரோயின் என்றால் மரத்தைச் சுத்தி டான்ஸ் ஆடவும் ஹீரோவை சுத்தி பாட்டுப்பாடவும் மட்டுமே நடிப்பாக செய்துகொண்டிருக்கும் ஹீரோயிச சினிமா உலகில் நயன்தாரா….’ என்பதை நான் முடிப்பதற்குள், ‘நயன்தாரா ஹீரோ தன்னைச் சுற்றிச்சுற்றி வரும்படி நடிப்பார்… இல்லையா ஆண்டி…’ என்றாள் அந்தச் சிறுமி ஆர்வம் கொப்பளிக்க.

‘இந்தப் பெண்ணுக்கா கவுன்சிலிங் தேவை… எவ்வளவு ஷார்ப்… எவ்வளவு வேகம்…’ என வியந்தேன்.

சினிமாவை வைத்தே அவளுக்குள் சில விஷயங்களை புகுத்த நினைத்தேன்.

‘நடிகை என்றால் அழகு சார்ந்தே அறியப்படும் சினிமா உலகில் நயன்தாரா தன்னம்பிக்கை, அறிவு சார்ந்து சுயமாக இயங்கும் தன்மை, தைரியம், நேர்மை இவற்றுடன் அன்பு, பண்பு, பாசம், நேசம் இத்தனையையும் வெளிப்படுத்தும் படங்களில் பெரும்பாலும் நடித்திருப்பார்…

இத்தனை குணங்களும் ஒவ்வொரு பெண்ணிடமும் இருக்க வேண்டியவை… உன்னிடமும் தான்…’ என்று நான் முடித்தபோது ‘சரி ஆண்ட்டி, நிச்சயமா தைரியா இருப்பேன்… தன்னம்பிக்கையா செயல்படுவேன்’ என அவள் மொழியில் சொல்ல நான் மகிழ்ந்தேன்.

பள்ளிச் சூழல், சமுதாயச் சூழல் என பெரும்பாலான இடங்களில் சூழல்தான் குழந்தைகளின் கவனத்தைச் சிதறடிக்கின்றன. அதில் இருந்து மீண்டு விட்டால் அவர்களை கைகளில்பிடிக்க யாராலும் முடியாது.

ஒரு நடிகையைப் பிடிப்பதற்கும் பிடிக்காமல் போவதற்குமே குழந்தைகள் தங்கள் தாயை ரோல் மாடலாக எடுத்துக்கொள்ளும்போது பெற்றோர்கள் எந்த அளவுக்கு தங்களை வடிவமைத்துக்கொள்ள வேண்டும் என்பது நிதர்சனமாகிறதல்லவா?

குழந்தைகள் நம்மை கவனிக்கவில்லை என நினைக்க வேண்டாம். அவர்கள் கண்களால் கவனிக்க மாட்டார்கள்… உணர்வுகளால் சுவாசிப்பார்கள். அணு அணுவாக உங்கள் பழக்க வழக்கங்கள் அவர்களை ‘இன்ஃபுலியன்ஸ்’ செய்யும்.

இதே திரைப்படத்தில் ஒரு காட்சியில் நயன்தாராவிடம் அவர் மகள் ‘சாரிம்மா…’ என்பாள். அதற்கு நயன்தாரா, ‘இதென்ன புதுசா சாரி எல்லாம் கேட்கிறாய்…’ என கேட்க அதற்கு மகள், ‘நான் பிறந்ததில் இருந்து உன்னை மட்டும் தானேம்மா பார்த்துக்கொண்டிருக்கிறேன். நீ யார்கிட்டேயும் சாரி கேட்டு பார்த்ததே இல்லை… அதான்…’ என்பாள். இதில் மகளே அவளுடைய செயலுக்கானக் காரணத்தையும் சொல்வதாக காட்சி அமைந்திருக்கும்.

அன்னையும் பிதாவும் – அறிவுரை பிள்ளைகளுக்கு மட்டுமல்ல

‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’, ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’, ‘மாதா பிதா குரு தெய்வம்’ போன்றவை ஏதோ குழந்தைகளுக்கான அறிவுரை மட்டும்தான் என்று நம்மில் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அவை அப்பா, அம்மா, குரு ஸ்தானத்தில் இருக்கும் நாமும் அந்த அளவுக்கு தகுதியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் சேர்த்தே உணர்த்துகின்றன.

என் நண்பரின் மகனுக்கு 15 வயதாகிறது. ஆஞ்சநேயர் பக்தன். அவனுக்கு சிறுவயதில் அவன் தாத்தா பாட்டி வாங்கித்தந்த ஆஞ்சநேயர் பொம்மையை இன்னமும் தன் கூடவே வைத்திருக்கிறான். அவனுடைய ஆஞ்சநேயரை ‘அது இது’என சொல்லிவிட்டால் அவனுக்கு கோபம் வந்து விடும். ‘அவர், இவர்’ என்றுதான் சொல்ல வேண்டும் என்பான்.

அமெரிக்காவில் படிக்கிறான். அவரவர்கள் நேடிவ் உடை அணிந்து வரலாம் என்ற நாட்களில் அவன் பைஜாமா குர்தா அணிந்து, விபூதி சந்தனம் இட்டுக்கொண்டுதான் பள்ளிக்குச் செல்வான். ஒரு நாள் அவனுக்கு உடம்பு சரியில்லை. அவனுக்கு திருஷ்டி சுத்தி போட்டு பள்ளிக்கு தயார் செய்துகொண்டிருந்த நண்பரிடம் அவன், ‘அம்மா இப்படி திருஷ்டி சுத்தி போட்டால் என் கர்மாவை நான் எப்படி கழிப்பது?’ என்ற கருத்தை ஆங்கிலத்தில் சொல்கிறான்.

இதுபோன்ற கருத்துக்கள் எப்படி 15 வயது சிறுவனுக்குள் செல்கிறது? குடும்ப வழக்கம், பாரம்பர்யம், வம்சாவளி ஜீன் இப்படி பலதரப்பட்டக் காரணங்கள் குழந்தைகளை உருவாக்குகிறது என்றாலும் பெற்றோர்தான் அவர்களின் முதல் ரோல்மாடல்.

அவர்களுக்கு எதையும் உட்கார வைத்து கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை. பார்த்தும் பார்க்காததைப் போல், கேட்டும் கேட்காததைப் போல் இருப்பார்கள். ஆனாலும் அவர்களின் கவனம் தங்களைச் சுற்றி உள்ளவர்கள் மீதும் இருக்கும். குறிப்பாக பெற்றோர் மீது அதிகம் இருக்கும்.

ஒரு சில விஷயங்கள் அவர்கள் அறிந்தும், ஒரு சில அவர்கள் அறியாமல் தானாகவும் அவர்களுக்குள் செல்லும். எனவே பெற்றோர்கள் தங்கள் சொல், செயல் எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டும்.

அன்று சனிக்கிழமை. ஆஞ்சநேயர் கோயிலில் கொஞ்சம் கூட்டம் அதிகம். எனக்கு முன்னர் வரிசையில் சென்றுகொண்டிருந்த ஒருவர் தன் 5 வயது மகனுடன் வந்திருந்தார். மழைத் தண்ணீர் சற்று தேங்கி இருந்ததால் ஓரமாக ஒதுங்கி பேண்ட்டை கால் பகுதியில் மடித்து விட்டுக்கொண்டார். அந்த சிறுவனும் அப்பா செய்ததை அப்படியே பார்த்து தான் போட்டிருந்த அரை டிராயரை மடித்துவிட்டுக்கொண்டான். கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

‘டேய் டிராயரை ஏண்டா மடித்துவிடறே… அது என்ன நனையவா போறது?’ என செல்லமாகக் கடிந்துகொண்டு அவனை கைப்பிடித்து அழைத்துச் சென்றார் அவர்.

கோயில் முழுவதும் தன் அப்பா என்னவெல்லாம் செய்கிறாரோ அதைப் பார்த்துப் பார்த்து தானும் அப்படியே செய்துவந்தான் அந்தச் சிறுவன்.

இந்த நிகழ்வில் ஓர் பேருண்மை அடங்கி இருப்பதை கவனிக்கவும். ஐந்து வயதில் அப்பா செய்வதைப் பார்த்து அப்படியே செய்கின்ற அந்தச் சிறுவன் வளர வளர பெற்றோரைப் பார்த்து அவர்கள் என்ன செய்கிறார்களோ அதைத்தானே செய்வான். அவர்களைத்தானே அவன் பிரதிபலிப்பான்.

இந்த நிகழ்வில் அப்பாவை பார்த்து அந்த சிறுவன் தனக்குத் தேவையோ தேவையில்லையோ தன் அரை டிராயரையும் மடித்துவிட்டுக் கொள்கிறான்.

இதுபோலவே ஆண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என பெற்றோரையும் குடும்பத்தாரையும் பார்த்தே கற்கிறார்கள் குழந்தைகள். அடுத்ததாக சமுதாயம் கற்றுக்கொடுக்கிறது. அந்த சமுதாயத்தில் நண்பர்கள், கல்விக்கூடங்கள், அலுவலகங்கள் இப்படி அனைத்துமே அடங்கும்.

சமுதாயம் திருந்தவில்லை என்று புலம்பாமல், அடிப்படையில் பெற்றோர் கவனமாக இருந்தால் குடும்பத்தாரையும், சமுதாயத்தையும் 100% மாற்ற முடியாவிட்டாலும் சிறு அசைவையாவது உண்டாக்க முடியும்.

நம் பிள்ளைகளுக்காகவாவது நாம் சரியாக நடந்துகொள்ள முயற்சிப்போமே!      ஊர் உலகத்துக்கு ரோல்மாடலாக இருக்க வாய்ப்பில்லை என்றாலும், அட்லீஸ்ட் தங்கள் குழந்தைகளுக்கு ரோல்மாடலாக இருக்கும் வாய்ப்பை ஒவ்வொரு பெற்றோருக்கும் இயற்கை கொடுத்திருக்கிறது. அதை தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்வதில்தான் சூட்சுமம் அடங்கியுள்ளது.

பெற்றோர்களே நீங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள். ஜாக்கிரதை!

யோசிப்போம்!

ஆன்லைனில் மின்னம்பலத்தில் படிக்க… https://minnambalam.com/k/2019/02/02/6

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
@ மின்னம்பலம் டாட் காம்
வெள்ளிதோறும் வெளியாகும் தொடரின் பகுதி – 13

(Visited 143 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon