என் அலுவலகத்தில் இன்று ஒரு கிளையிண்ட் மீட்டிங். கிளையிண்ட் சிங்கப்பூரில் இருந்து ஒரு பிராஜெக்ட்டுக்காக வந்திருக்கிறார். அப்படியே என்னையும் சந்தித்துப் பேசினார்.
நானும் என் நிறுவனம் பற்றியும் தயாரிப்புகள் குறித்தும் சொன்னேன். ஆனால் துளியும் அவை அவர் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளப்படவில்லை என்பது அடுத்து அவர் சொன்ன ஒரு கருத்தில் நிரூபணமானது.
‘உங்கள் நிறுவனம் என் நிறுவனத்துடன் தொடர்பில் இருந்தால் சிங்கப்பூரில் மட்டுமல்ல உலக அளவில் உங்கள் பெயரை கொண்டு சேர்க்கிறேன். உங்கள் திறமை எல்லாம் இங்கேயே முடங்கி உள்ளதே…’ என்றார்.
நான் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். இப்போதுதான் என் தயாரிப்புகள் குறித்தும் அதற்கான வரவேற்பு குறித்தும் நேரடியாக புரியும்படி சொன்னேன். சுருங்கச் சொன்னால் ‘தம்பட்டம்’ அடித்துக்கொண்டேன்.
பெருந்தன்மையாக சொன்னால் புரிந்துகொள்ளாதபோது ‘தம்பட்டம்’ அடிக்கத்தானே வேண்டியுள்ளது. பல நேரங்களில் அதுதான் பலருக்கும் பல விஷயங்களைப் புரிய வைக்கிறது.
சிங்கப்பூர் மலேஷியாவில் பெரும்பாலான நூலகங்களில் என் புத்தகங்கள் பல வருடங்களாக இருப்பதைச் சொன்னேன்.
அமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சாஃப்ட்வேர் துறையில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் என் ‘ஃபோட்டோஷாப்’ உள்ளிட்ட சில புத்தகங்களுக்கு மதிப்புரை எழுதிக்கொடுத்ததைப் பகிர்ந்தேன்.
நான் அமெரிக்க மிசவுரி பல்கலைக்கழகத்தில் கல்வி குறித்து ஆவணப்படம் எடுத்ததையும் சொல்லி அந்த வீடியோவை காண்பித்தேன். அது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டதையும் கூறினேன்.
என்னிடம் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர்கள் உலகில் பல நாடுகளில் உயர் பதவியில் இருக்கிறார்கள் என்பதையும் பெருமிதத்துடன் சொன்னேன்.
என் குரலில் இருந்த தன்னம்பிக்கையை உணர்ந்தவர் என்னிடம், ‘மேடம் நீங்கள் ஃபெமினிஸ்ட்டா? என்றார்.
‘ஆமாம். நான் நானாக வாழ்கிறேன். அந்த வரத்தை… சூழலை… பெற்றிருக்கிறேன்… அந்த வகையில் நான் ஃபெமினிஸ்ட் தான். ஆனால் நீங்கள் மனதில் ஃபெமினிசமுக்கு ஒரு டெம்ப்ளேட் வைத்துக்கொண்டிருக்கிறீர்கள் அல்லவா… அந்தவகை ஃபெமினிஸ்ட் நான் அல்ல…’ என்றேன்.
புரிந்து கொண்டாரா என தெரியவில்லை. மீட்டிங் முடிந்து கிளம்பும் வரை அவரது பேச்சு ‘தொனி’ மாறியிருந்தது. ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகப் பேசினார்.
இதுதாங்க ஃபெமினிஸ்ட், ஃபெமினிசம் எல்லாமும்…
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
மார்ச் 8, 2019