ஃபேஸ்புக்கில் ஒரு வார்த்தை, ஓராயிரம் கோணங்கள்!

முகம் தெரியாத ஃபேஸ்புக் அறிமுகங்கள் இளைஞர்களின் வாழ்க்கையை வெகுவாக பாதித்து வருகிறது.

சமூக வலைதளங்களில் இருந்து நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு வார்த்தையும் எத்தனையோ கோணங்களில் புரிந்துகொள்ளப்பட்டு வடிவமெடுக்கும் என்பதை மறக்காதீர்கள்.

யாருக்கும் அறிவுரை சொல்லி எதையும் மாற்றிவிட முடியாதுதான். ஆனாலும் நான் கடைபிடிக்கும் சில விஷயங்களை பகிர்ந்துகொள்கிறேன்.

—***—

நான் எழுதத்தொடங்கிய 12 வயதில் இருந்து கல்லூரியில் M.Sc., படித்து முடித்த 21 வயதிற்குள் சாவி, கல்கி, குமுதம், விகடன், அமுதசுரபி, கலைமகள், விஜயபாரதம் என பல்வேறு பத்திரிகைகளில் 100-க்கும் மேற்பட்ட கதைகள் கவிதைகள் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

எனக்கு வாசகர்கள் கடிதங்கள் போஸ்ட் கார்ட், இன்லேண்ட் லெட்டர் இப்படி போஸ்டல் வழியாகவும், கொரியர் சர்வீஸ் வழியாகவும் வருவதுண்டு.

—***—

நான் சொந்தமாக காம்கேர் நிறுவனம் தொடங்கி, என் சாஃப்ட்வேர் தயாரிப்பு அனுபவங்கள் வாயிலாக எனக்குக் கிடைத்த தொழில்நுட்ப அனுபவங்களை அந்தந்த கால கட்டத்தில் புத்தகங்கள் எழுதி பதிவு செய்து வருகிறேன். அதன் எண்ணிக்கை 100-க்கும் மேற்பட்டுள்ளதையும் பலரும் அறிந்ததே.

கம்ப்யூட்டரும், இன்டர்நெட் தொழில்நுட்பமும் நம் நாட்டில் நுழையவே தடுமாறிக்கொண்டிருந்த 1992-களில் தொழில்நுட்பத்  துறையில் நுழைந்து சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கி தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் தமிழில் தொழில்நுட்பத்தைக் கொண்டு சென்றதில் எனக்குப் பெரும்பங்குண்டு.

தவிர ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் தயாரித்த சாஃப்ட்வேர் மற்றும் அனிமேஷன் தயாரிப்புகள் இந்தியா முழுவதும் சென்றடைந்துள்ளன.

என்னுடைய நிறுவனத்தில் என்னுடன் இணைந்து பணிபுரிந்து அனுபவம் பெற்ற பலர் உலகின் பல நாடுகளில் பணியாற்றுகின்றனர்.

—***—

என்னுடைய பணி தொழில்நுட்பமாக இருந்தாலும் என் தொழில்நுட்ப அறிவை எனக்குள்ளேயே வைத்துக்கொள்ளாமல் அவை பலரும் பயனடையும் விதத்தில் எழுத்து, பேச்சு என எந்தெந்த வழிகளில் எல்லாம் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியுமோ அந்தந்த வழிகளில் எல்லாம் கொண்டு சேர்த்து வருகிறேன்.

இதன் காரணமாய்…

வாசகர்கள் என்னிடம் தொழில்நுட்பம் குறித்த சந்தேகங்களை கால மாற்றத்துக்கு ஏற்ப போன், மொபைல், வாட்ஸ் அப், இமெயில், ஃபேஸ்புக் மெசஞ்சர் என எல்லா வழிகளிலும் கேட்டபடியே இருப்பார்கள்.

இதில் எல்லா வயதினரும் அடக்கம்.

தொழில்நுட்ப சந்தேகங்கள் கேட்பவர்களுக்கு அவ்வப்பொழுது முடிந்தவரை   பதில் அளித்துவிடுவேன்.

ஃபேஸ்புக் பிரபலமான பிறகு நிறையபேர் வெப்சைட் வடிவமைப்பதில், பிளாக் டிஸைன் செய்வதில் சந்தேங்கள் கேட்கத் தொடங்கினார்கள். நானும் அவர்களுக்குப் புரியும்படி பதில் அளித்து வருகிறேன்.

தொழில்நுட்ப சந்தேகங்களுக்காக என்னை நேரில் சந்திக்க விரும்புபவர்களை பெரும்பாலும் தவிர்த்து விடுவேன். எந்த சந்தேகத்தையும் இமெயிலிலேயே தீர்த்துக்கொள்ளும் வசதி  இருக்கும்போது நேரில் சந்திப்பது நேர விரயம் தானே.

இதுபோல என்னால் தொழில்நுட்ப உதவிகளைப் பெறுபவர்கள்…

“நான் அவர்களை நேரில் சந்தித்ததே கிடையாது. போனில் பேசியது கிடையாது. ஃபேஸ்புக்கில் மட்டுமே அறிமுகம். ஆனாலும் நான் கேட்ட சந்தேகங்களுக்கு பொறுமையாக பதில் சொன்னார்… இமெயில் அனுப்பினார்…”

என்று என்னை பெருமைப்படுத்துவதற்காக பொதுவில் பதிவிடுவார்கள்.

நான் அவர்களுக்கெல்லாம் சொல்லும் ஒரே பதில்:

“எப்போது தொழில்நுட்பத்தை என் புரொஃபஷனாக எடுத்தேனோ அன்றில் இருந்து இன்று வரை யார் என்ன சந்தேகம் கேட்டாலும் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன்.

இப்போதெல்லாம் 6 வது படிக்கும் மாணவிகள்கூட போன் செய்து சந்தேகம் கேட்கிறார்கள். 65+ பெரியவர்களும் சந்தேகங்கள் கேட்கிறார்கள். நான் வயது வித்தியாசமின்றி அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி வருகிறேன்.

அதனால் என்னை உயர்வுப்படுத்துவதற்காக ஃபேஸ்புக்கில் மட்டுமே அறிமுகம்… நேரில் பார்த்ததில்லை. போனில் பேசியதில்லை… என பதிவிடாதீர்கள். அது பதிவைப் படிப்பவர்களின் பார்வையைப் பொறுத்து அர்த்தம் கொள்ளப்படும்.”

எனச் சொல்லி என்னைப் பெருமைப்படுத்த அவர்கள் பயன்படுத்தும்  இதுபோன்ற பதிவுகளை நீக்கச் சொல்லி இருக்கிறேன்.

ஏனெனில் ஃபேஸ்புக்கினால் எத்தனையோ நன்மைகள் இருக்கும்போது அது மற்றவர்களுக்கு தீய செயல்களைச் செய்யத் தூண்டிவிடக் கூடாது என்னும் உயரிய நோக்கில்.

சமூக வலைதளத்துக்குள் பயணிக்கும் ஒவ்வொருவரும் தங்களுக்கான கட்டுப்பாட்டை நிர்ணயம் செய்துகொள்ள வேண்டும். மற்றவர்களை கட்டுப்படுத்த நம்மால் முடியாது. ஆனால் நமக்கு நாமே கட்டுப்பாடுகள் போட்டுக்கொள்ள முடியும்தானே!

சமூக விரோதிகளிடம் நாம் சீரழியாமல் இருக்க, நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் கட்டுப்பாடு ஒன்றுதான் வழி.

உணர்ந்து செயல்படுவோம்!

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
மார்ச் 11, 2019

 

(Visited 50 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon