நலமாக இருங்கள்… வளமாக வாழுங்கள்!
சில நாட்களுக்கு முன்னர் 40 வயதேயான என் நெருங்கிய உறவினர் ஒருவர் விடுமுறை தினமன்று சாப்பிட்டு தன் 10 வயது பெண் குழந்தையோடு விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென ஹார்ட் அட்டாக். மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்.
எப்போதும் தன்னை கலகலப்பாக வைத்துக்கொள்ளக்கூடியவர். எந்த விஷயத்தையும் மனதுக்குள் வைத்துக்கொண்டு பாரம் சுமக்க மாட்டார். சிகரெட், மது போன்ற தீய பழக்கங்கள் கிடையாது. குழந்தைகளிடம் ஜாலியாக பேசி விளையாடுவார். வாழ்க்கையில் தன் கடும் உழைப்பால் முன்னுக்கு வந்தவர். படிப்படியான வளர்ச்சி, அருமையான குடும்பம். ஆசிர்வதிக்கப்பட்டவர் போல அழகான ஒரு பெண் குழந்தை.
சென்ற வருடம் 70 வயதான என் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக். எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாமல் வாசிப்பு, நடை, நல்ல நட்பு, தோட்டத்தில் செடி கொடிகளுடன் நேசிப்பு, நல்ல குடும்பம், அருமையான குழந்தைகள், நல்ல கட்டுப்பாடான சைவ உணவு பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி என எல்லாமே ஆரோக்கியமாக சூழலில் இருக்கும் என் அம்மாவுக்கே ஹார்ட் அட்டாக் வந்துள்ளதே என நான் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தேன்.
மனதில் உள்ளதை நான் டாக்டரிடமும் கேட்டேன்.
‘இப்படி ஆரோக்கியமான சூழலில் இருந்ததால்தான் 70 வயதில் ஹார்ட் அட்டாக் வந்துள்ளது… இல்லை என்றால் 50 வயதுக்குள்ளேயே வந்திருக்கும்….’ என்று சொல்லி சிரித்துக்கொண்டே தொடர்ந்தார்.
40 வருடங்களுக்கு மேல் அம்மா 24 மணிநேர பணிசுழற்சி வேலையில் தொலைபேசி துறையில் பணிபுரிந்தவர். தன் பணிநிமித்தம் நேரம் கெட்ட நேரத்தில் சாப்பாடு, தூக்கம், இதனால் உள்ளுக்குள் தானாகவே உருவாகும் ஸ்ட்ரெஸ் போன்றவையும் காரணம் என்றார்.
‘கடந்த 10 வருடங்களாக தனக்குப் பிடித்த விஷயங்களை செய்துகொண்டு ரிலாக்ஸ்டாகத்தானே இருக்கிறார்… அப்போதும் ஏன் இப்படி’ என்ற என் கேள்விக்கு, ‘பல உடல் உபாதைகள் உடனுக்குடன் வருவதில்லை. காலம் கடந்துதான் தன் வேலையைக் காட்டத் தொடங்கும்…’ என்றவர் கூடுதலாக ஒரு தகவலையும் சொன்னார்.
‘உதாரணத்துக்கு 10 வருட சிகரெட் வழக்கம் அல்லது மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், தற்போது அவற்றை நிறுத்திவிட்டாலும் அவர்களுக்குள் ஏற்கெனவே சென்றிருக்கும் அதன் தாக்கம் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் நுரையீரலை, இதயத்தை, நிறுநீரகத்தை பாதிக்கலாம். அவரவர் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றாற்போல பிரச்சனையின் தாக்கம் கூடும் அல்லது குறையும்.’
ஐசியூ-வில் 15 முதல் 60 வயதைத் தாண்டிய பலதரப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. பெரும்பாலானோர் ‘ஹார்ட் அட்டாக்’ வந்து அனுமதிக்கப்பட்டிருந்தவர்களே.
இதில் இன்னொரு விஷயமும் கவனத்தை ஈர்த்தது. இளம் வயதினருக்கும், நடுத்தர வயதினருக்கும், அறுபதைத் தொட்ட முதியவர்களுக்கும் கேர் டேக்கராக அவரவர்கள் பெற்றோரே வந்திருந்தது மனதை கனக்கச் செய்தது. 80-க்கும் மேற்ப்பட்ட வயதினர் இந்தக் கோளாறுகளுக்குள் சிக்காமல் வளைய வருவது ஆச்சர்யமாக இருந்தாலும் அதன் பின்னால் உள்ள ஆரோக்கியம் வியக்க வைத்தது.
இளம் வயதில் அவர்கள் எடுத்துக்கொண்ட உணவு வகைகள், பின்பற்றிய பழக்க வழக்கங்கள், சுகாதாரமான சுற்றுச்சூழல், இயற்கையிலேயே கிடைத்த சுத்தமான தண்ணீர், பரபரபில்லாத ரிலாக்ஸ்டான மனோநிலை போன்றவை அவர்களிடம் நோய்கள் நெருங்காமல் ஓடுகின்றன என்ற உண்மை உரைத்தது.
கடந்த சில வருடங்களில் 35-45 வயதுக்குள் இறக்கும் இளம் வயதினரை காணும்போதெல்லாம் மனதுக்குள் இனம் புரியாத வேதனை. ஆராய்ந்ததில் காரணங்களைப் பட்டியலிட முடிந்தது.
இயற்கை உரப்பயிரிடல் மறைந்து செயற்கை உரங்கள் ஊறிய காய்கறிகளை சாப்பிடுதல்…
நேரம் கெட்ட நேரத்தில் சாப்பாடு, காபி டீ, உறக்கம்…
10 மணிக்கும், 11 மணிக்கும் பீட்சா, பர்கர், பரோட்டா போன்ற ஜீரணமாகாத உணவு வகைகளால் வயிற்றை நிரப்பிவிட்டு அடுத்த அரை மணியில் தூக்கம்… இதன் காரணமாய் இரத்த ஓட்டமும், அது தொடர்பான பிரச்சனைகளும்…
கார்ப்பரேட் உலகில் ஒருவரை ஒருவர் கீழ்த்தள்ளி மேல் ஏறிச்செல்லும் மனதைக்கொள்ளும் போராட்ட வாழ்க்கை…
தவிர சாதாரண தலைவலி, கால்வலிக்கே மாத்திரைகளை விழுங்குவதால் ஏற்படும் பக்க விளைவுகள்…
இவற்றுடன் உடலை சீரழிக்க சிகரெட் மது, மனதை சிதைக்க சமூக வலைதள வக்கிரங்கள் என உடல் அளவிலும் மனதளவிலும் தாங்களே தங்களை சீரழித்துக்கொள்ளுதல்…
இவை அத்தனையையும் மீறி, பரம்பரையாக வந்து வலுக்கட்டாயமாக ஒட்டிக்கொள்ளும் நோய்கள்…
இவற்றில் இருந்து நாமும் நம் அடுத்த தலைமுறையினரும் தப்பிக்கவும் பாதுகாப்பாக இருக்கவும் நாம் கொஞ்சம் மெனக்கெட்டாலே போதும்.
‘ஜங்ஜ் ஃபுட்’களைத் தவிர்த்து வேளா வேளைக்கு டிபன், சாப்பாடு என நம் வழக்கப்படி சாப்பிடப் பழகலாம். முடிந்தவரை இரவில் 8 மணிக்குள் சாப்பாட்டை முடித்துக்கொள்ளலாம். இரவு தூங்கும் முன்னர் ஒரு கப் வெந்நீர் சாப்பிடலாம்.
அதிக நேரம் பணிபுரியும் நேரங்களில் பசித்தால் ஹார்லிக்ஸ், பால் என சூடான பானங்களை அருந்தும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.
தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
இரவில் நிம்மதியாகத் தூங்கப் பழக வேண்டும்.
தீய பழக்கங்களுக்கு அடிமையாகி ‘எப்பவாவதுதான்’என்று மற்றவர்களுக்குக் காரணம் சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளாமல் இருக்கலாம்.
பணமும், புகழும் சம்பாதிக்கும் இடைவெளியில் நம் உடல் நலத்தையும் பேண வேண்டும்.
சுவர் இருந்தால்தானே சித்திரம். இதுவே நம் உடல் நலத்தைப் பேண இயற்கை நமக்குக் கொடுத்துள்ள OTP.
ஓட்டல்களில் சாப்பிடும்போது நாம் பொங்கல் கேட்டால் நாம் கேட்காத வடையையும் சேர்த்துக் கொண்டு வந்து நம்மை சாப்பிடத் தூண்டுவார்கள். டிபன் சாப்பிட்டு காபி சாப்பிட வேண்டாம் என நினைத்திருப்போம், அவர்கள் காபி டீ வேண்டுமா, இஞ்சி டீ ரொம்ப சூப்பரா இருக்கும் என கேட்டு நம்மை ஈர்ப்பார்கள். நெய் மிதக்கும் சர்க்கரைப் பொங்கல், எண்ணை மிதக்கும் பஜ்ஜி, குழிப் பணியாரம், வெள்ளை வெளேரென பாசந்தி என வண்ணமயமான உணவுப் பொருட்களை தட்டிலேயே கண்காட்சியாக்கி உலா வருவதைப் பார்க்கும்போது குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியோர்களுக்கும் சாப்பிடும் ஆர்வம் வரத்தானே செய்யும்.
10 மணிக்குப் பிறகு சாப்பிட்டால் ஸ்டார் ஓட்டல்களில் 10% டிஸ்கவுண்ட் என சொல்லி மக்களை ஈர்க்கிறார்கள். இன்னும் சில இடங்களில் அன்லிமிடெட் ஆஃபரும் தருகிறார்கள்.
10% டிஸ்கவுண்ட்டில் சாப்பிட்டு, மெடிகல்ஷாப் கொடுக்கும் 10% டிஸ்கவுண்ட்டையும் அனுபவிக்கும் இளம் தலைமுறையினரின் ஆயுளுக்கு இயற்கை 50% மட்டுமே உத்திரவாதம் கொடுக்கிறது.
வயிற்றுக்குச் சாப்பிடுவோம். ஆசைக்காக சாப்பிட வேண்டாமே. இதுவே நம் ஆரோக்கியத்துக்கான OTP.
நுரையீரல், பெருங்குடல், வயிறு, மண்ணீரல், இதயம், சிறுகுடல், சிறுநீரகப்பை, பித்தப்பை போன்ற நம் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் தங்கள் பணியை செவ்வனே செய்ய அதற்கான நேரத்தை ஒதுக்கியுள்ளன. மேலும் அவை ஒவ்வொன்றும் பின்னிப் பிணைந்து செயலாற்றும் தன்மையுடையது. நேரம் தவறினால் அவற்றின் பணியிலும் பாதிப்பு ஏற்படுகிறது. நாளடைவில் அவை முழுமையாகவோ, அரைகுறையாகவோ செயலிழக்கின்றன.
சுவாரஸ்யமாக டிவியில் கிரிக்கெட் பார்க்கும் நேரத்தில் கடைக்குப் போகச் சொல்லும் அம்மாவை நாம் கடிந்துகொள்வதைப் போலத்தானே நாம் தூங்க வேண்டிய நேரத்தில் சாப்பிட்டு வயிற்றுக்கு வேலை கொடுக்கும்போது நம் உடலும் நம்மை கடிந்துகொள்ளும். உடலுக்கு கோபத்தில் கத்தத் தெரியாது. மாறாக தாறுமாறாக வேலைசெய்யத் தெரியுமே?
சென்னை நந்தனத்தில் நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சியில் அன்று சிறப்பு விருந்தினராக மருத்துவர் கு. சிவராமன் கலந்துகொண்டு நலம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
மருத்துவம் தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் தான் கலந்து கொண்டபோது ஏற்பட்ட அனுபவத்தை உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார்.
ஒரு மூத்த மருத்துவர், இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் இளம் வயது இறப்புகள் அதிகரித்து வருகிறது என்பதையும் அதற்கான காரணங்களையும் புள்ளி விவரங்களுடன் பவர்பாயிண்ட் பிரசண்டேஷனுடன் விளக்கிப் பேசியதுடன் சில வேதனையான உண்மைகளையும் எடுத்துரைத்தார்.
நாம் வாழும் இந்த காலகட்டம் கொடிய காலகட்டம். நோய்களில் விதவிதமான தாக்குதல் காரணமாக பெற்றவர்கள் முன்னிலையிலேயே பிள்ளைகள் இறப்பு சதவீதம் கூடிக்கொண்டே போகிறது. இது இன்னும் அதிகரிக்கும் என்பதுதான் அவரது செய்தி.
இதற்கு மேல் அவரது பேச்சைக் கேட்கும் திறனும் திராணியும் தனக்கு இல்லை என்று தனது வேதனையை பகிர்ந்து கொண்டார் மருத்துவர் கு.சிவராமன்.
நவீன மருத்துவம்,கிரேக்க மருத்துவம்,சீன மருத்துவம்,இந்திய மருத்துவம்,இயற்கை மருத்துவம் என்று உலகில் உள்ள அனைத்து மருத்துவங்களும் ஒரே விஷயத்தைத்தான் போதித்து வந்தன.
அது நோயாளியை எப்படி அன்பு,அக்கறை மற்றும் கரிசனத்துடன் கவனித்து காப்பாற்றுவது என்பதுதான். அதில் எந்த பிரச்னையும் இருக்கவில்லை… ஆனால் எப்போது இதில் வணிகம் புகுந்ததோ அப்போதே இதன் உண்மை சரிந்துவிட்டது.
அவரவர் அவரவர் பாணியில் நோயாளிகளின் நோய் தீ்ர்த்துக் கொண்டிருந்த நிலையில் இப்போது ஒருவரை ஒருவர் குற்றம்சாற்றி கடித்து குதறும் வண்ணம் நடந்து கொள்கின்றனர் இதில் பாதிக்கப்படுவது பாவம் நோயுற்றவர்கள்தான்.
நன்றாக மென்று சாப்பிடு,பசி வந்தால் சாப்பிடு,ஒரு வேளை உணவு இயற்கைதானிய உணவாக மாற்றிடு ஒரு நோயும் வராது என்றால் யார் கேட்கிறார்கள். பிறகு சர்க்கரை நோய் வந்த பிறகு அதற்காக மாத்திரை சாப்பிடுகிறார்கள். இந்த மாத்திரை என்ன செய்கிறது நோயை குணப்படுத்துவது இல்லை… அப்படியே பொத்திவைத்து வளர்க்கிறது.
உணவகத்தை தேடிப்போன காலம் மாறிப்போய் இப்போது உணவே வீடு தேடிவருகிறது. ஆன் லைனில் உணவு புக் செய்து வாங்கி சாப்பிடும் பழக்கம் இப்போது மிகவும் அதிகரித்து வருகிறது. இது மிகவும் ஆபத்து. நான் இதைச் சொன்னால் நான் நவீனத்திற்கு எதிரி என்றும் புதுமைக்கு விரோதி என்றும் சொல்லி கேலி செய்கின்றனர்.
எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் சில வருடங்களில் நமது உணவு என்பது பெரும்பாலும் இந்த உணவோட்டிகளால்தான் தீர்மானிக்கப்படும். உங்களை இதற்கு பழக்கப்படுத்திய பிறகு உங்கள் உடம்பி்ற்கு ஒத்துக்கொள்ளாத உணவுகளை உங்களிடம் விற்றுவிடுவர். நீங்கள் உளுந்தவடை கேட்டால் டொனால்ட் கொடுத்து சாப்பிட்டுப் பாருங்கள் என்பர். அதுவும் உருண்டையாகத்தானே இருக்கிறது என்று சாப்பிட ஆரம்பித்துவிடுவீர்.
இந்த உணவு பழக்கம் பதினைந்து வயதில் இருந்து இருபத்தைந்து வயது உள்ள இளைஞர்களை இப்போது வசியப்படுத்திவிட்டது. இந்த உணவுகளை சாப்பிடும் இவர்கள் முப்பது நாற்பது வயதிற்கு வரும்போது மிகவும் தளர்ந்து போய் எளிதில் நோய்தங்கும் கூடராங்களாகிப்போவர்.
கேன்சருக்கு கூட பயப்படாத நாம் இப்போது நான்கு நாள் காய்ச்சலுக்கு பயப்படுகிறோம் காரணம் உடனடி மரணம், நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதற்குள் அந்த நோய்க்கிருமிகள் தன்னை மேலும் புதுப்பித்துக் கொண்டு உலா வருகிறது.
பெற்றவர்கள் இருக்க பிள்ளைகள் சாவார் என்று சொன்ன அந்த பேராசிரியரின் கூற்று இப்படியெல்லாம் மெய்யாக வேண்டுமா? இந்த இளைய தலைமுறையை காப்பாற்ற வேண்டியது அனைவரின் பொறுப்பாகும்.
‘இளைய தலைமுறை இனிய தலைமுறையாகட்டும் மருத்துவர் கு. சிவராமன் வேண்டுகோள்’ என்ற தலைப்பில் புகைப்படப் பத்திரிகையாளர் திரு.எல்.முருகராஜ் அவர்கள் எழுதிய ஃபேஸ்புக் பதிவுதான் இது.
‘பெற்றவர்கள் இருக்க பிள்ளைகள் சாவார்’ – இந்த வரியைப் படிப்பவர் யாராக இருப்பினும் நெஞ்சம் உருகி கண்கள் குளமாவது நிச்சயம்.
இதில் யாரையும் குறை சொல்வதற்கில்லை. எல்லாவற்றுக்கும் காரணம், நாம் வளர்த்துவிட்ட வழக்கமும் பழக்கமும்தான்.
இந்தா பிடிங்க உங்களுக்கான OTP ‘நல்ல சாப்பாடு சாப்பிடுங்கள், நன்றாக தூங்குங்கள், தீய பழக்கங்களை ஒதுக்குங்கள்! நலமாக இருந்து வளமாக வாழுங்கள்!’.
எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
புதிய தலைமுறை – பெண் மாத இதழ்
வாழ்க்கையின் OTP – 8
மார்ச் 2019