மொழியினாலும் ஜெயிக்கலாம்!

யாமினி 10-ம் வகுப்புப் படிக்கிறாள். சின்ன வயதில் இருந்தே மொழிகள் மீது அதீத ஈடுபாடு. வீட்டுல் பேசும் தமிழ், பள்ளியில் பாடம் படிக்கும் ஆங்கிலம் மற்றும் இரண்டாவது மொழியாகத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் சமஸ்கிருதம் என மூன்று மொழிகளிலும் கவிதை மழைப் பொழியும் அளவுக்குத் திறமை.

அதோடு மட்டுமில்லாமல் தனியாக இந்தி கற்றுக்கொண்டு அதையும் முழுமையாகக் கற்றுக்கொண்டு எல்லா தேர்வுகளையும் எழுதி பாஸ் செய்து விட்டாள்.

இதன் காரணமாய் மொழிகளைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே வந்தது.

தவிர இன்டர்நெட்டில் வெப்சைட்டுகளிலும் யு-டியூபிலும் பல்வேறு மொழிகளை தானாகவே தேடித்தேடி கற்றுக்கொள்ளத் தொடங்கினாள். முழுமையாக இல்லாவிட்டாலும் எழுத்துகள், வார்த்தைகள், வாக்கியங்கள் என தேவையானதைக் கற்றுக்கொண்டாள்.

அவள் பெற்றோருக்கு மகளுடைய மொழி ஆர்வம் பெருமையாக இருந்தாலும் கூடவே எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கவலையும் இருந்தது. காரணம் பள்ளியில் மற்ற சப்ஜெக்ட்டுகளில் மதிப்பெண் குறைவு என்று சொல்ல முடியாவிட்டாலும் அதிகம் என்று சொல்வதற்கில்லை.

எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவளால் மொழிகளைத் தவிர மற்ற சப்ஜெக்ட்டுகளில் கவனம் செலுத்தவே முடியவில்லை.

+1 சேர்வதற்கு முன் என்னிடம் ஆலோசனை கேட்க அழைத்து வந்தார்கள். அவளுடைய மொழி ஆர்வம் என்னையும் வியக்க வைத்தது. மொழிகள் மீதான அவளுடையா  ஆர்வத்தையும் திறமையையும் ஒதுக்கித்தள்ளிவிட்டு அவளை வேறு பாதையில் செல்லச் சொல்ல என் மனம் ஒப்பவில்லை.

அந்த சமயத்தில்தான் எங்கள் காம்கேர் நிறுவனத்தில் ஒரு கிளையிண்ட்டுக்காக அசாமீஸ், பெங்காலி, போடோ, டோக்ரி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி,மைதிலி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, ராஜஸ்தானி, சந்தாலி, சிந்தி, தெலுங்கு, உருது, தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் என 24 இந்திய மொழிகளிலும் ஒரு இணைய இதழை வடிவமைக்க உதவிக்கொண்டிருந்தோம். அது இந்திய இலக்கியத்திற்கான பன்மொழி இணைய இதழ்.

அந்த வெப்சைட்டை அவளுக்குக் காண்பித்தேன். அவள் அசந்து போனாள். அவள் முகம் பிரகாசமாகியது.

‘ஆண்ட்டி, இந்த பத்திரிகையில் நானும் ஏதாவது எழுதட்டுமா… எனக்கும் ரொம்ப ஆசையா இருக்கு…’ எனக்கு கெஞ்சாதக் குறையாக கேட்டாள்.

அவளுக்கு ஒரு டாப்பிக்கைக் கொடுத்து அதை முதலில் தமிழில் எழுதச் சொன்னேன். அரை மணியில் எழுதிக் காண்பித்தாள். பிறகு அதை அப்படியே அவளுக்கு என்னென்ன மொழிகள் தெரியுமோ அத்தனையிலும் எழுதச் சொன்னேன்.

இந்த நேரத்தில் அவள் பெற்றோரிடம் தனி அறையில் பேசினேன்.

மொழியில் ஆர்வம் உள்ள அவர்கள் மகளுக்கு வேலைவாய்ப்புகள் மட்டுமில்லாமல் தனியாகவே தொழில் தொடங்கும் அளவுக்கு வாய்ப்புள்ளது என்பதையும், போட்டி குறைவான துறை என்ற உண்மையையும் எடுத்துச் சொன்னேன்.

மொழியைப் பாடமாகவும் அதையே வாழ்வாதாரத்துக்கு எடுத்துக்கொள்பவர்களும் பெரும்பாலும் ஆசிரியர் தொழிலையே எடுத்துக்கொள்வர். அடுத்ததாக மொழிபெயர்ப்பு எழுத்தாளர்களாக இருப்பார்கள்.

அதையும் தாண்டி எத்தனையோ வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. இவர்களுக்கு பத்திரிகை, தொலைக்காட்சி, அனிமேஷன் துறை, திரைப்படத்துறை என எல்லா துறைகளிலும் வேலைவாய்ப்பு உள்ளது. எங்கெல்லாம் செய்திகளை புழங்குகின்றனவோ அங்கெல்லாம் இவர்களின் திறமைக்கான தேவை உள்ளது.

எல்லோரும் இன்ஜினியரிங், மெடிசன், அக்கவுண்ட்ஸ், கிராஃபிக்ஸ், அனிமேஷன், புகைப்படத்துறை, வீடியோகிராஃபி என பிரிந்து செல்லும்போது இவை அத்தனையையும் செய்தியாக்கவும், வியாபாரமாக்கவும், சம்பாத்யமாக்கவும் உதவக்கூடிய மொழியை தன் பணியாக எடுத்துக்கொள்ளும்போது தமிழகம் என்ற எல்லையைத் தாண்டி இந்தியா முழுவதுமே இவளுடைய திறமைக்கான களமும் தளமும் பரந்து விரிந்து கிடக்கின்றன என்ற உண்மையை எடுத்துச் சொன்னேன்.

24 இந்திய மொழிகளில் நாங்கள் வடிவமைத்த இந்திய இலக்கியத்துக்கான பன்மொழி இணைய இதழையும், கும்பகோணம் மகாமகத்துக்கான வெப்சைட் உட்பட பல்வேறு மொழிகளில் நாங்கள் தயாரித்த வெப்சைட்டுகளையும் அவர்களுக்குக் காண்பித்தேன். ஆங்கில சப் டைட்டிலுடன் கூடிய பல்மொழிகளில் நாங்கள் தயாரித்துள்ள அனிமேஷன் படைப்புகளையும் போட்டுக் காண்பித்தேன்.

அவர்களுக்குள்ளும் நம்பிக்கை துளிர்விட்டது. ஒரு விஷயத்தை அழுத்தமாகச் சொன்னேன்.

மொழியை பாடமாக எடுப்பவர்களுக்கு எல்லா விஷயங்களையும் படித்து புரிந்துகொள்ளும் நுணுக்கம் மனதுக்குள் உண்டாகிவிடும். இது மற்ற எந்த சப்ஜெக்ட்டுக்கும் இல்லாத குணம். சயின்ஸ் பிடித்தால் அவருக்கு சயின்ஸ் மட்டுமே பிடிக்கும். பயாலஜி பிடிப்பவருக்கு அதில் மட்டுமே ஆர்வம் இருக்கும். ஆனால் மொழி ஆர்வம் உள்ளவர்களுக்கு எல்லா சப்ஜெக்ட்டையுமே புரிந்துகொள்ளும் நுட்பம் இருக்கும். அதனால்தான் அவர்களால் எந்த ஒரு விஷயத்தையும் மொழிபெயர்ப்பு செய்ய முடிகிறது.

மொழிபெயர்ப்பாளர்களை கவனித்தால் அந்த உண்மை புரியும். அவர்களால் ஃபிக்‌ஷன், இலக்கியம், வரலாறு, அறிவியல் என எல்லா சப்ஜெக்ட்டுகளையும் ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு மொழி மாற்றம் செய்ய முடியும்.

ஆனால் இந்த திறமை மற்ற துறையினருக்கு இருப்பதில்லை.

இதற்குள் அவர்கள் மகள் நான் கொடுத்த டாப்பிக்கை 5 மொழிகளில் எழுதிக்கொண்டு வர மொழியைத்தவிர வேறெந்தத் துறையும் அவளுக்குப் பொருத்தமாக இருக்காது எனச் சொல்லி அனுப்பினேன்.

கற்போம்… கற்பிப்போம்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software Private Limited

மார்ச் 25, 2019

மின்னம்பலம் டாட் காமில்
ஆன்லைனில் மாணவர்களுக்காக நான் எழுதி வரும்
‘எந்தப் பாதையில் உங்கள் பயணம்?’
என்ற  தொடரில் மார்ச் 25, 2019 அன்று எழுதிய கட்டுரையின் முழு வடிவம்

(Visited 117 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon