வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[2] : அழகும், பேரழகும்! (நம் தோழி)

அழகும், பேரழகும்!

தினந்தோறும் காலை ஆறு மணிக்கு ஃபேஸ்புக்கில் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற தலைப்பில் தினம் ஒரு செய்தியுடன் ‘அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்’என்ற வாழ்த்துடன் பதிவிட்டு வருகிறேன்.

இது வானொலியில் தொடர்ச்சியாக வெளிவந்த  தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் ‘இன்று ஒரு தகவல்’ போல உள்ளது என்ற பாராட்டுடன் பெருத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

அதிலும் குறிப்பாக  தன்னம்பிக்கைப் பெண்கள் குறித்தும், பெற்றோர் பிள்ளைகள் குடும்ப உறவுகள் குறித்தும் நான் எழுதுபவை பெரும் வரவேற்பை பெறுகின்றன.

இவற்றை எழுதும்போது, அழகு குறித்த கேள்வி எனக்குள் எழுந்தது.

சமீபத்தில் வெளியான ‘ஐரா’ திரைப்படத்தில் நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். கிராமத்துப் பெண் பவானியாக வரும் நயன்தாராவின் நடிப்பு கிளாசிக். அவர் கருப்பாக இருப்பது, அவர் பிறந்த நாளன்றே அவர் அப்பா இறந்துபோனது, அவர் ருதுவான தினத்தன்று அவர் சகோதரியின் குழந்தை மனவளர்ச்சியின்றி பிறந்தது என அவர் ராசியில்லாத பெண்ணாகவே வளர்கிறார். ஒரு கட்டத்தில் அவர் அம்மாவே அவரை வீட்டைவிட்டு விரட்டிவிடுகிறார். பிறகு ஓட்டலில் வேலைக்கு சேர்கிறார். அவரை இளம் வயதில் காதலித்த பள்ளித்தோழனை சந்திக்கிறார். திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள். கடைசியில் அதுவும் நடக்கவில்லை. கடைசிவரை அவரது துரதிஷ்டம் தொடர்கிறது.

இதில் கிராமத்து நயன்தாராவை பார்க்கும்போது பதினைந்து ஆண்டுகளுக்கு முன் என் அலுவலகத்தில் பணியில் இருந்த ஒரு பெண்தான் நினைவுக்கு வருகிறார்.

எம்.சி.ஏ தொலைதூரக் கல்வியில் படித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணை என் பர்சனல் செகரட்டரியாக வேலைக்கு எடுத்திருந்தேன். என்னைவிட ஏழெட்டு வயது சிறியவள்.

பார்ப்பதற்கு நிறம் மற்றும் உயரம் இரண்டிலுமே நார்மலுக்கும் சற்று குறைவு. பற்களும் தூக்கலாக. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவள்.

தைரியமாக உள்ளத்தில் உள்ளதை பேசுகின்ற வெளிப்படையான குணம், நேர்மை, உழைப்பு இவை என்னை வெகுவாக கவர்ந்தன.

அவளுக்கு தன் தோற்றத்தின் மீது எக்கச்செக்க  தாழ்வு மனப்பான்மை.

அவளுக்கு நம்பிக்கை வார்த்தைகள் சொல்லி, அவளை ஊக்கப்படுத்தினேன்.  தன்னம்பிக்கையானாள்.

அவள் பேசும் ஆங்கிலத்தை இன்னும் மெருகேற்ற வகுப்புக்கு ஏற்பாடு செய்தேன். தமிழுக்கு இணையாக ஆங்கிலத்திலும் பேசத் தொடங்கினாள்.

புரோகிராமிங்  கற்றுக்கொடுத்தேன். சாஃப்ட்வேர் வடிவமைக்கும் அளவுக்கு புலமை பெற்றாள்.

இப்படி எல்லா வேலைகளிலும் படு ஸ்மார்ட். காரணம் நான் கொடுத்த ஊக்கமும் உற்சாகமும் என்பாள்.

நான் அலுவலகத்தில் இல்லாத நேரத்தில் அலுவலகம் முழுவதும் அவள் கன்ட்ரோலில். நான் இருக்கும்போதுகூட இயல்பாக சிரித்துப்பேசுபவர்கள் நான் இல்லாத நேரத்தில் அவள் கண்காணிப்பில் ‘கப்சிப்’தான். அந்த அளவுக்கு ஆளுமை. இதற்கும் நான்தான் இன்ஸ்பிரேஷன் என்பாள்.

இப்படியாக தொடர்ந்து ஐந்து வருடங்கள்  என் நிறுவனத்திலேயே பணி புரிந்துவிட்டு  என் அனுமதியுடனேயே  பன்னாட்டு நிறுவனம் ஒன்றுக்கு வேலைக்குச் சென்றாள்.  வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று திரும்பியிருக்கிறாள். அவ்வப்பொழுது போன் செய்து பேசுகிறாள்.

யார் அழகு என கேட்டால் இன்றளவும் அவள்தான் என் நினைவுக்கு வருகிறாள்.

தோற்றத்தால் வருவதில்லை அழகு. கடுமையான உழைப்பாலும், நேர்மையான குணத்தாலும் வருவதே பேரழகு.

இதை நிரூபணம் செய்யும் வகையில் சமீபத்தில் மூன்று உழைக்கும் கரங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஒரு நாள்  பிராஜெக்ட் விஷயமாக காலை 8 மணிக்குக் கிளம்பிச் சென்று உச்சி வெயிலில் திரும்ப வேண்டியதாயிற்று. இளநீர் சாப்பிடலாம் என்று காரை ஓர் ஓரமாக நிறுத்திவிட்டு, மரத்தடி நிழலில் ஒரு தள்ளு வண்டியில் இளநீர் விற்றுக்கொண்டிருந்த பெண்ணிடம் ‘இளநீர் காயாக வேண்டும்’ என்றேன். ‘ஒரு இளநீர் 50 ரூபாய்’ என்று விலையை சொன்னபடி அந்தப் பெண் இளநீர் வெட்டத் தயாரானார்.

அதற்குள் என் கண்கள் அந்த தள்ளுவண்டிக்கு அருகில் இருந்த மற்றொரு தள்ளுவண்டியை நோட்டம் விட்டது. அதில் தர்பூசணி விற்றுக்கொண்டிருந்தார் மற்றொரு பெண். அவர் இளநீர் விற்கும் பெண்ணைவிட சற்று மூத்தவராக இருந்தார்.

இதற்குள் இளநீர் வர அதை பருகிக் கொண்டே அந்த பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தேன்.

‘அந்த தள்ளு வண்டியும் உங்களுடையதுதானா?’

‘ஆமாம்மா… அது எங்கக்காவோடது…’

இப்போது இரண்டு தள்ளுவண்டிகளுக்கு நடுவில் ஒரு பாட்டி உட்கார்ந்து மல்லிகைபூ தொடுத்துக்கொண்டிருந்தது என் கண்களில் பட்டது.  .

‘பூவை நன்றாக நெருக்கித் தொடுக்கறீங்களே… விற்பதற்குதானா?’ என்றேன்.

‘ஆமாம்மா… ஒருமுழம் 30 ரூபாய்…’ என்று சொன்னதோடு கூடுதாய் மற்றொரு தகவலையும் சொன்னார்.

‘இவங்க என் அம்மா’

‘ஓ… அப்படியா! உங்கம்மாவா இவங்க… பாட்டிம்மாவை ஒரு போட்டோ எடுக்கட்டுமா?’ என்று அனுமதி கேட்டேன்.

இதற்குள் பாட்டிம்மா முகத்தை புடவையால் அழுந்தத் துடைத்துக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இரண்டு மூன்று கிளிக்குகளில் போட்டோ செக்‌ஷனை முடித்துக்கொண்டேன். பாட்டிம்மாவின் முகத்தில் அத்தனை சந்தோஷம்.

அவர்கள் பேசியதும், பழகியதும் அவர்கள் கொடுத்த இளநீரைவிட இனிப்பாக இருந்தது. அவர்களிடம் வாங்கிய மல்லிகையின் மணத்தைவிட வசந்தமாக இருந்தது.

வெவ்வேறு வயதில் மூன்று பெண்கள்.

இளநீர் விற்பனை, தர்பூசணி விற்பனை, பூ விற்பனை என மூன்று வெவ்வேறு வியாபாரம்.

கையில் தொழில், கண்களில் நம்பிக்கை.

இவர்களிடம் இருந்து எனக்குள்ளும் ஒரு புது உற்சாகம் தொற்றிக்கொண்டது.

ஒருமுறை திருச்சியில் நிகழ்ச்சி  ஒன்றில் கலந்துகொண்டு காரில் சென்னை திரும்பி வந்துகொண்டிருந்தபோது இரவு 8.30 மணிக்கு ஓர் இயற்கை உணவகத்தில் சாப்பிடச் சென்றோம். சாப்பாடும், சர்வீஸும் அருமை.

அதற்கு இணையாக ரெஸ்ட் ரூமும் மிக சுத்தமாக பளிச்சென்றிருந்தது. நேஷனல் ஹைவேயில் இப்படியும் ஒரு ரெஸ்ட்ரூம் பராமரிப்புள்ள உணவுவிடுதியா என ஆச்சர்யப்பட்டேன். வெளியில் புன்னகையுடன் யூனிஃபார்ம் அணிந்த ஓர் இளம்பெண் நின்றுகொண்டிருந்தார்.

அவரிடம் பாராட்ட நான் வாய் எடுப்பதற்குள், ‘பாத்ரூம் எப்படி இருக்கிறது மேடம்… நல்லா சுத்தமா இருக்கா… நல்லா பராமரிக்கிறேனா?’ என வெள்ளந்தியாகக் கேட்க  ‘சூப்பரா மெயின்டெயின் செய்கிறீர்கள்….’ என்று சொல்லி பாராட்டினேன்.

ஹோட்டல் மூடும் நேரத்தில்கூட பாத்ரூம் சுத்தம் செய்யும் பணிப்பெண்ணால் இவ்வளவு மகிழ்ச்சியுடன் வேலை செய்ய முடியுமா என வியந்தேன்.

எந்த வேலை செய்தால் என்ன? ஆத்மார்த்தமாக செய்யும்போது அந்த வேலை நேர்த்தியாக அழகாகிவிடுகிறது. அதை செய்பவர்களும் பேரழகாகிவிடுகிறார்கள்.

 

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
மே 1, 2019

சக்தி மசாலா குழுமத்தில் இருந்து வெளிவரும்
‘நம் தோழி’  மாத பத்திரிகையில் (மே2019)
வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும் – 2

புத்தக வடிவிலேயே படிக்க…நம் தோழி – மே 2019

(Visited 173 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon