என் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்த தினத்தில்தான் ‘பருத்தியூர் டாக்டர் கே.சந்தானராமன்’ அவர்கள் மறைந்த செய்தி எனக்குக் கிடைத்தது. அதனால் உடனடியாக செல்ல முடியவில்லை. இடையில் ஒருநாள் இவரது மனைவி போன் செய்து, ‘சார் மறைந்த தினம் காலைவரை பேஜ்மேக்கரில் அவர் லே-அவுட் செய்து கொண்டிருந்த நவதிருப்பதிகளும் நவகயிலாயங்களும் என்ற புத்தகம் பாதியிலேயே உள்ளது. அதை பிரிண்டுக்குச் செல்லும் வகையில் சரி செய்து கொடுக்க முடியுமா?’ என்று கேட்டபோது ‘இதைவிட அவருக்கு அஞ்சலி வேறெப்படி செய்ய முடியும்…’ என்று ஒப்புக்கொண்டேன்.
கடந்த வாரம் நேரில் சென்று இவர் மனைவியை சந்தித்து ஆறுதல் சொன்னேன். அவர் லே-அவுட் செய்துகொண்டிருந்த பணியை பிரிண்ட்டுக்குச் செல்லும்வகையில் முடித்துக்கொடுத்தேன். அதை பூங்கொடி பதிப்பாளரும் உடனடியாக நேரில் வந்து பென் டிரைவில் வாங்கிச் சென்றார்.
சில வருடங்களுக்கு முன் ஒருநாள் எதேச்சையாக பேசிக்கொண்டிருந்தபோது வயதான காலத்தில் மங்கலாகத் தெரியும் கண்களுடனும் சற்றே தடுமாறும் கைகளுடனும், தான் எழுதும் புத்தகங்களை தானே பேஜ்மேக்கரில் லே-அவுட் செய்துகொண்டிருந்தவரை பார்த்தபோது ‘பேஜ்மேக்கரில் புக்ஸ்மேக்கர்’ என மனதில் தோன்றியதைச் சொன்னேன். அதை மிகவும் பெருமையாக எல்லோரிடமும் சொல்லி மகிழ்வதை பலமுறை நானே நேரில் கண்டிருக்கிறேன். பிறர் சொல்லியும் கேள்விப்பட்டிருகிறேன்.
இவர் மறைந்த பிறகு இவர் மனைவி ‘அமுதசுரபி’ – மார்ச் 2017 இதழில் எழுதிய அஞ்சலி கட்டுரையில் ‘கணினி மேதை காம்கேர் புவனேஸ்வரி இவரை பேஜ்மேக்கரில் புக்ஸ்மேக்கர் என பாராட்டியுள்ளார்’ என குறிப்பிட்டு அதற்கு மேலும் மகுடம் சூட்டியுள்ளார். (இவர்கள் இருவரும் ‘கணினி மேதை’ என்ற பட்டத்தை வலுக்கட்டாயமாக ஒரு நிகழ்ச்சியில் எனக்களித்துப் பெருமைப்படுத்தினர்.)
எங்கள் காம்கேர் நிறுவனம் வாயிலாக பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் FM ரேடியோ நிகழ்ச்சிக்காக திருக்குறளில் 1330 குறள்களையும் பாடல் மற்றும் விளக்கத்துடன் ஆடியோ ரெகார்டிங் செய்துதரும் பிராஜெக்ட் தயாரித்துக் கொடுத்துக்கொண்டிருந்தோம். அப்போதுதான் பருத்தியூர் டாக்டர் கே.சந்தானராமன் அவர்களின் தொடர்பு கிடைத்தது.
ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியான இவர்
அறிவாளி…
இலக்கியவாதி…
படிப்பாளி…
உழைப்பாளி…
எழுத்தாளர்…
பேச்சாளர்…
பல மாணவர்களை உருவாக்கியவர்…
இவரது மனைவியும் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர்-இலக்கியவாதி-ஆன்மிகப் பேச்சாளர்.
இவற்றை எல்லாம்தாண்டி பருத்தியூர் டாக்டர் கே.சந்தானராமன் அவர்களிடம் எனக்குப் பிடித்த விஷயம் ஒன்றுண்டு.
இவர் தன் மனைவியை, திருமணம் ஆனதில் இருந்து தன் இறுதி மூச்சுவரை சமையல் அறை பக்கமே செல்ல விட்டதில்லை. திருமணம் ஆன புதிதில் இவர் தாயார் சமையலை பார்த்துக்கொண்டு இருவரையும் இலக்கியத்தொண்டுக்கு செல்ல வழிவகுத்தார். தாயார் மறைவுக்குப் பின்னர் மனைவியைக் கஷ்டப்படுத்த விரும்பாமல் இருவருடைய உணவுக்கு சுகாதாரமான மெஸ்ஸில் ஏற்பாடு செய்து மனைவியை ஆணுக்கு இணையாகப் போற்றினார்.
இப்படிப்பட்ட கணவரைப் பெற்ற பாக்கியசாலி டாக்டர் ஹேமா சந்தானராமன். ‘இலக்கியத்துறையில் இரட்டை நாயனம்’ எனப் போற்றப்படும் வகையில் இருவரும் ஒரே மேடையில் கிரிக்கெட் கமெண்ட்ரி போல மாறி மாறி பேசி ஆன்மிக சொற்பொழிவு ஆற்றும் திறன் கொண்ட மனம் ஒத்த தம்பதியர்.
பருத்தியூர் டாக்டர் கே.சந்தானராமன் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிராத்திக்கிறேன்.
அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
மார்ச் 14, 2017