தகவல் கசிவு – ஃபேஸ்புக்கில் நடப்பது என்ன? ‘[2/2]

தகவல் கசிவு – ஃபேஸ்புக்கில் நடப்பது என்ன? ‘[1] -ன் தொடர்ச்சி….

தேர்தலில் நிற்கும் இரண்டு தரப்புகளில் யார் அதிகம் பணம் கொடுக்கிறார்களோ அவர்களைப் பற்றிய நல்ல தகவல்களை கட்டுரை, செய்தி, புகைப்படம், வீடியோ, மீம்ஸ் என பல்வேறு வழிகளில் ஃபேஸ்புக்கில் வெளிப்படுத்துவார்கள். அவை பெரும்பாலும் நம் கருத்துக்களுடன் உடன்படுவதைப் போல இருக்கும். இவை தேர்ந்தெடுத்த பயனாளர்களின் ஃபேஸ்புக் பக்கங்களில் மட்டும் வெளிப்படும். அதாவது, எவர்களுடைய அக்கவுண்ட் விவரங்கள் அவர்களுக்கு கிடைக்கிறதோ அவர்களின்  பக்கங்களில் மட்டும். இந்த வகையில் மக்களின் மனதை மூளைச் சலவை செய்து அமெரிக்க தேர்தல் வெற்றி தோல்வியை நிர்ணயித்ததுதான் குற்றச்சாட்டு.

நம் ஃபேஸ்புக் தகவல்கள் எப்படி அவர்களுக்குக் கிடைக்கிறது?

‘தாங்கள் செய்கின்ற பிசினஸை சொல்லி, அதில் அதிக இலாபம் பெற முடியவில்லை, என்ன செய்தால் இலாபம் அடையலாம்’ – இதுதான் பொதுவாக வாசகர்கள் என்னிடம் கேட்கும் ஆலோசனை.

‘முன்பெல்லாம் ஒரு தையல் மிஷின் வாங்கி வைத்துக்கொண்டு பிசினஸ் செய்யும் ஒருவர் அந்த ஊரில் பிரபலமாகவும், பிரதான டெய்லராகவும் இருப்பார். நன்றாக சம்பாதிக்கவும் செய்வார்.

ஆனால் இன்று திறமை மட்டும் போதாது. நீங்கள் வீட்டில் இருந்தே வியாபாரம் செய்யலாம். ஆனால் உலகளாவிய அளவில் விளம்பரம் தேவை. ஃபேஸ்புக், டிவிட்டர், பிளாக், வெப்சைட், லிங்க்ட் இன் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் உலகுக்கு அறிமுகம் செய்துகொண்டு உங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தி விரிவுபடுத்துவதில்தான் சூட்சுமம் இருக்கிறது….’ இதுதான் என் பதில்.

ஒரு சின்ன விஷயத்துக்கே இத்தனை பிரமாண்டமான வெளிப்பாடும் வெளித்தோற்றமும் அவசியமாக இருக்கும்போது பிரமாண்டமான நெட்வொர்க்கான ஃபேஸ்புக்குக்கு எத்தனை பெரிய விளம்பர நுட்பம் அவசியம்.

ஃபேஸ்புக் முழுக்க முழுக்க இலவசமாக கிடைக்கும் ஒரு நெட்வொர்க் வசதி. அதுபோலவே வாட்ஸ் அப்பும். இவற்றை எத்தனை கோடானுகோடி மக்கள் பயன்படுத்துகிறார்கள். தகவல்களை ஷேர் செய்கிறார்கள். இலவசமாக தங்களையும், தங்கள் வியாபாரத்தையும், தங்கள் தயாரிப்புகளையும் ப்ரமோட் செய்கிறார்கள்?

இதுவே ஷேர் செய்யும் ஒவ்வொன்றுக்கும் கட்டணம் என்றால் எத்தனைபேர் ஜகா வாங்குவார்கள் என்பது இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் அறிந்ததே.

பயனாளர்களுக்கு இலவசமாக வசதிகளை அள்ளிக் கொடுத்து அந்த பிரமாண்ட நெட்வொர்க் நிறுவனம் எப்படி இயங்குகிறது? எப்படி பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கிறது? என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

ஃபேஸ்புக்கில் நடுநடுவே Sponsored என்ற வார்த்தையைத் தாங்கிவரும் விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். அவை கட்டணம் செலுத்தி கொடுக்கப்படும் விளம்பரம். நாமும் கட்டணம் செலுத்தி நம் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் பதிவுகளைக்கூட விளம்பரப்படுத்தலாம். இப்படி விளம்பரப்படுத்தப்படும் ஃபேஸ்புக் பதிவுகள் அவற்றின் கட்டணத்துக்கு ஏற்ப லைக்குகளை பெற்றுத்தரும். அதாவது லைக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம்.

மிகக் குறைந்த கட்டணத்திலும் இது சாத்தியமாவதால் தங்கள் தயாரிப்புகள், வியாபாரம் என்றில்லாமல் தங்கள் பதிவுகளைக்கூட விளம்பரப்படுத்துவதில் ஆர்வம் காட்டுபவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

தவிர, ஃபேஸ்புக் பேஜின் பக்கவாட்டிலும் விளம்பரங்கள் வெளிப்படுவதைக் காணலாம். இவை பத்திரிகைகளில் வெளிவரும் விளம்பரங்கள் போல்தான்.

  நம்மைப் போன்றவர்களின் பொதுவான ஆசைகளை அறிந்து வைத்துக்கொண்டு மனோதத்துவ ரீதியில் செயல்படும் ஆப்ஸ்களின் மூலம்தான் பெரும்பாலும் தகவல்கள் வெளியே செல்கின்றன. ஃபேஸ்புக் நிறுவனத்தில் இல்லாமல் வெளி நிறுவனங்கள் தயாரிக்கும் ஆப்ஸ்கள் Third Party Apps. இவை ஃபேஸ்புக்கில் விளம்பரம் கொடுக்கும். அதை நாம் பயன்படுத்த கட்டணம் இல்லை. முற்றிலும் இலவசம். அதற்குக் கூலி நம்மைப் பற்றிய ஃபேஸ்புக் தகவல்கள். ‘If anything is FREE, You are the product’ – எத்தனை வேதனையான உண்மை.

பத்திரிகை / டிவி / வெப்சைட்டுகள் / யு-டியூபில் வெளிவரும் ராசி பலனை கண்டுகொள்ளாமல் கடந்து செல்பவர்கள் நம்மில் எத்தனை பேர்? ஜாதகம், நியூமராலஜி போன்றவற்றில் ஆர்வம் இல்லாதவர்கள்கூட ‘நீங்கள் நேர்மையானவர். ரொம்ப நல்லவர். உத்தமர். அன்பானவர்’ என்று முகத்தைப் பார்த்து பலன் சொல்லும்போது தடுமாறுவதுதான் இயற்கை.

மக்களின் இதுபோன்ற வீக்னெஸை ஆதாரமாக்கி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆப்ஸ்களை தயாரிக்கின்றன. மக்களை ஏமாற்றுவது இவர்கள் குறிக்கோள் அல்ல. அவற்றை நாம் பயன்படுத்தும்போது அது அவர்களுக்கு மறைமுகமான விளம்பரமாகிறது. அவர்கள் ஆப் / வெப்சைட் விளம்பரப்படுத்தப்பட்டு வியாபாரமாகிறது.

தொடரும்…

(குங்குமம் 06-04-2018 இதழில் வெளியான கட்டுரையின் இரண்டாம் பகுதி)

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

மே 3, 2019

(Visited 73 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon