மல்டிமீடியாவில் ஓவியங்கள் (அமுதசுரபி தீபாவளி மலர் 2005)

இந்த கட்டுரையில் பயன்படுத்தியுள்ள ஓவியங்கள் அத்தனையும், 
16 வருடங்களுக்கு முன் எங்கள் ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ நிறுவனம் தயாரித்த சிறுவர்களுக்கான இராமாயணம் – அனிமேஷன் சிடிக்காக எங்கள் நிறுவனத்தில் வரைந்தவை.

2005 – ம் ஆண்டு – கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு முன்  நம் நாட்டில்
அனிமேஷன்களும் கிராஃபிக்ஸ்களும் துளிர்விட ஆரம்பித்தபோது  அமுதசுரபி தீபாவளி மலரில் நான் எழுதிய கட்டுரை.

ஓவியங்கள் என்பது பென்சிலாலும், தூரிகையாலும் வரைந்து கலர் கொடுத்து உருவாக்கப்படுகின்ற அற்புதமான கற்பனைப் படைப்பு. கம்ப்யூட்டர் தொழில்நுட்பத் துறை பிரமாண்டமாக வளர்ந்து ஒவ்வொரு வீட்டிலும் டிவியோடு தேர்ந்து கம்ப்யூட்டரும் கம்பீரமாய் வீற்றிருக்கின்ற இன்றைய கால கட்டத்தில் ஓவியங்களும் புதுச்சேலை கட்டியப் பெண்ணாய் மறு அவதாரம் பெற்றுள்ளன.

கைகளால் கற்பனைக்கு உருவம் கொடுத்து வந்த நம் ஓவியர்கள் மவுசின் மூலம் மிக அற்புதமாய், அழகாய் உருவம் கொடுத்து ஓவியங்களையும் பிரகாசமாய் வடிவமைத்து தாங்களும் மிகப் பிரகாசமாய் வளர்ந்து வருகின்றனர்.

கைகளால் படம் வரைவதற்கும் கம்ப்யூட்டர் மூலம் வரைவதற்கும் என்ன வித்தியாசம்? கைகளால் ஒரு மனிதனின் உருவத்தை வரையும் போது ஒரு முறை வரைந்ததை மறுமுறை பயன்படுத்த இயலாது. திரும்பத் திரும்ப வரைய வேண்டும். கம்ப்யூட்டரில் ஒரு மனிதனின் உருவத்தை வரையும் போது பல்வேறு பயன்கள் கிடைக்கின்றன. ஒரு மனிதனை முழுமையாக வரைந்து கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்து விட்டால் போதும். அதனை ஒன்றுக்கும் மேற்பட்ட பல உருவங்களாக்க முடியும்.

உதாரணத்துக்கு, வேட்டி, சட்டை, கண்ணாடி அணிந்த ஒரு மனிதனை ஒரு முறை வரைந்து கலர் கொடுத்து வைத்துக் கொண்டு, அந்த மனிதனின் முகத்தை மட்டும் வேறு வேறு வடிவங்களில் வரைந்து ஒட்ட வைத்துக் கொள்ள முடியும். கிராமத்து டீச்சரை வரைந்து அவரது முகத்தை மட்டும் வேறு வரைந்து ஒட்ட வைத்து அரசியல்வாதியாக்கலாம் அல்லது அலுவலகம் செல்லும் மனிதனாக்கலாம்  அல்லது கூட்டமாக இருக்கும் மனிதர்களை உருவாக்கலாம். ஆம். ஒரு மனிதனை மட்டும் வரைந்து கொண்டு, வரைந்த உருவத்தில் நொடிப் பொழுதில் மாற்றங்களை உருவாக்க முடியும்.

வரைவதைப் போலவே கலர் கொடுக்க முடியும். நொடிப் பொழுதில் கலர்களை மாற்றியமைத்துப் பொருத்தி வெவ்வேறு கலர்களில் உடைகளை மாற்றம் செய்ய முடியும்.

ஆடை ஆபரணங்கள் அணிந்த அலங்காரமான சுவாமிப் படங்களையும், புராண கால ராஜா, ராணி படங்களையும் வரைவதற்கு கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்கள் உதவுகின்றன. ஆடை அணிகலன்களை ஒரே ஒரு முறை மட்டும் வரைந்து தனித்தனியாக பதிவு செய்து கொள்ளலாம். பிறகு தேவையான போது, ராஜா, ராணி, சுவாமிப் படங்கள் இவற்றுக்கு அணிவித்து அழகுபடுத்திக் கொள்ளலாம்.

காகிதத்தில் ஒவ்வொரு முறை ராஜா, ராணி படங்களை வரையும் போதும் அணிகலன்களை வரைய வேண்டும். ஆனால் கம்ப்யூட்டரில் சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்தி வரையும் போது திரும்பத் திரும்பப் பயன்படுத்துகின்ற  விவரங்களை தனியாக பதிவு செய்து வைத்துக் கொண்டு தேவையான போது எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளும் வசதி உள்ளது. இதனால் நேரமும், உழைப்பும் சேமிக்கப்படுகிறது.

கம்ப்யூட்டரைப் பயன்படுத்தத் தொடங்கி விட்ட ஓவியர்களுக்கு இன்றைய அதிநவீன கம்ப்யூட்டர் யுகத்தில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

ஓவியர்கள் படங்களை வரைவதோடு அவற்றுக்கு இயக்கத்தைக் கொடுத்து இயங்கச் செய்கின்ற அனிமேஷன் துறையிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டால் வாய்ப்புகள் காத்துக் கிடக்கின்றன.

அனிமேஷன் என்பது வரைந்த படங்களுக்குக் கொடுக்கப்படும் இயக்கமாகும். திரையில் தோன்றும் கார்ட்டூன் படங்கள் அனைத்துமே படங்களை வரைந்த பிறகு இயக்கம் கொடுக்கின்ற வகையில் உருவாக்கப்பட்டதே ஆகும்.

படங்களை தனியாக வரைந்து, குரல்களைத் தனியாகப் பேசி பதிவு செய்து, பிறகு குரலுக்கு ஏற்ப, அதன் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அனிமேஷன் மூலம் இயக்கங்களைக் கொடுத்து அனிமேஷன் துறையில் கார்ட்டூன் படங்கள் உருவாக்கப்படுகின்றன.

கார்ட்டூன் அனிமேஷன்களில் மூன்று விதமான செயல்பாடுகள் உள்ளன.

டப்பிங்

படம் வரைதல்

இயக்கம் கொடுத்தல்

கம்ப்யூட்டர் மூலம் இந்த மூன்று செயல்பாடுகளையும் செய்வதற்கு ஏராளமான சாஃப்ட்வேர்கள் உள்ளன.  குரலைப் பதிவு செய்வதற்கு தனி சாஃப்ட்வேர், அனிமேஷன் செய்வதற்கு தனி சாஃப்ட்வேர் என ஒவ்வொரு வேலையையும் திறம்படச் செய்ய சாஃப்ட்வேர்கள் உள்ளன. கற்றுக் கொள்வதும் சுலபம். ஆங்கில அறிவு தேவையில்லை.

கம்ப்யூட்டரில் சாஃப்ட்வேர்களை பயின்று கற்றுக் கொண்டுவிட்டால் பிறகு கைகளால் தூரிகை மூலம் படம் வரைவது என்பது கடினமானதாகி விடும். எப்படி காரில் சென்று பழகியவர்கள் நடந்து செல்வதைக் கடினமாக உணர்கிறார்களோ அதைப் போலத் தான் கம்ப்யூட்டர் ஓவியர்களும்.

கம்ப்யூட்டர் மூலம் வரைந்த ஓவியங்களுக்கு இயக்கத்தைப் பொருத்தி அனிமேஷன் செய்கின்ற முறையில் இரண்டு பிரிவுகள் உள்ளன.

2-D Animation

3-D Animation

இரு பரிமாண கோணத்தில் வரையப்படும் படங்களை 2-D அனிமேஷன் எனவும், முப்பரிமாண கோணத்தில் வரைந்து உருவாக்கப்படும் அனிமேஷன்களை 3-D அனிமேஷன் எனவும் சொல்லலாம்.

இரு பரிமாண அனிமேஷன் செய்வதற்கு ஃப்ளாஷ் போன்ற சாஃப்ட்வேர்களும், முப்பரிமாண அனிமேஷன் செய்வதற்கு மாயா போன்ற சாஃப்ட்வேர்களும் உள்ளன.

இது போன்ற சாஃப்ட்வேர்களை கற்றுக் கொள்ள கொஞ்சம் பணம் செலவழிந்தாலும், வரைகின்ற திறமையை இன்றைய காலகட்டத்தோடு இணைத்து சீர்படுத்தி மேம்படுத்திக் கொள்ள முதலீடு அவசியம் தானே.

அதுபோல அனிமேஷன் துறையில் பிரகாசிக்க இளங்கலை முதுகலைப் பட்டங்களோ, ஆங்கிலப் புலமையோ எதுவுமே தேவையில்லை. ஆங்கில வார்த்தைகளை படித்துப் புரிந்து கொள்ளும் திறன் இருந்து விட்டால் போதும்.

கற்பனைத் திறனும், கலை உணர்ச்சியும் படம் வரையும் திறனும் கூடவே சலிப்பில்லாத உழைப்பும், அயராத ஆர்வமும் இருக்க வேண்டும்.

கம்ப்யூட்டரின் மானிட்டரில், காகிதங்களின் பக்கங்களில், வெப்சைட்டுகளில், சிடிக்களில், தொலைக்காட்சி திரையில், திரைப்படங்களில் இப்படி எந்தெந்த ஊடகங்களின் வழியாக படங்கள், உருவங்கள், இமேஜ்கள் போன்றவை வெளிப்படுத்தப்படுகின்றனவோ அவை கிராஃபிக்ஸ் எனப்படும்.

கம்ப்யூட்டர் மூலம் ஓவியங்கள் வரைகின்ற, அனிமேஷன் செய்கின்ற படைப்பாளர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

ப்ரிண்டிங் துறையில்…

புகைப்படத் துறையில்…

விளம்பரத் துறையில்…

வெப்சைட் டிஸைனிங்கில்…

மல்டிமீடியா துறையில்…

தொலைக்காட்சியில்…

திரைப்படங்களில்…

காகிதங்களில் படம் வரையும் ஓவியர்கள் அனைவரும் மல்டிமீடியாவில் பிரகாசிக்க வேண்டுமானால் அதற்குத் தனியாக பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். தூரிகையை வைத்து முழுமையாக ஒரு படத்தை வரைவதற்கும், மவுசை வைத்து வரைவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. வரையும் முறைகளில், கலர் கொடுக்கும் சூட்சுமத்தில் என்று ஏராளமான மாற்றங்கள் உள்ளன. வரைவதில் ஆர்வம் உள்ள அனைவருக்கும் இதெல்லாம் பெரிய விஷயமில்லை. சுலபமாகக் கற்றுக் கொண்டு விடலாம்.

எழுத்தும் ஆக்கமும்: காம்கேர் கே. புவனேஸ்வரி
2005  அமுதசுரபி  தீபாவளி மலர்

(Visited 353 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon