ஹலோ With காம்கேர் -26: நேர்மையாக இருப்பதால் என்னை யாருக்குமே பிடிப்பதில்லை என புலம்பும் நபரா நீங்கள்?

ஹலோ with காம்கேர் – 26
ஜனவரி 26, 2020

கேள்வி: நான் நேர்மையாக இருப்பதால் என்னை யாருக்குமே பிடிப்பதில்லை என புலம்பும் நபரா நீங்கள்?

நான் நேர்மையாக இருப்பதால் என்னை யாருக்கும் பிடிப்பதில்லை என்று சற்றே கழிவிரக்கத்துடன் பேசுகின்றவர்களை மேலோட்டமாக நோக்கினால் அவர்களிடம் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையுடன் பேசுவதாகத் தோன்றும். ஆனால் உண்மையில் அவர்களிடம் இருப்பது தன்னைப் பற்றிய அதீதமான உயர்வு மனப்பான்மையே.

நேர்மையாக இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு அடுத்தவர் விஷயங்களில் மூக்கை நுழைத்து மூக்குடைபடும்போது தான் நேர்மையாக இருப்பதால்தான் இப்படி நடக்கிறது என புலம்புவது அவர்களுக்கு ஒரு சுகமான உணர்வாகவே ஆகிவிடுவதுண்டு.

சென்ற வருடம் முழுவதும் நான் எழுதிவந்த ‘இந்த நாள் இனிய நாள்’ தொடரில் முதல் நாளில் இருந்து படித்து லைக் போட்டு வந்த நபர் ஒருவர் நாள் செல்லச் செல்ல தான் எழுதும் பின்னூட்டங்களில் வார்த்தைப் பிரயோகங்களை தாறுமாறாக பயன்படுத்த ஆரம்பித்தார். இத்தனைக்கும் அவரது கல்லூரி நாட்களில் இருந்தே என்னுடைய தொழில்நுட்பப் புத்தகங்களைப் படித்துதான் கம்ப்யூட்டர் கற்றுக்கொண்டதாக சொல்லி இருக்கிறார்.

‘நன்றாக எழுதுகிறீர்கள். மற்றவர்கள் புகழ்கிறார்கள் என்பதற்காக கர்வத்தை தலைக்குள் ஏற்றிக்கொண்டு விடாதீர்கள்…’ என்பது போன்ற அறிவுரைகளை அள்ளி வழங்க ஆரம்பித்தார். கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம், கொஞ்சம் பொறாமை, கொஞ்சம் ஆணவம் என அனைத்து உணர்வுகளின் கலவையாக இருந்தார்.

நான் மென்மையாக என் எதிர்ப்பை தெரிவித்தபோது தான் தவறு செய்ததற்காக வருத்தப்படாமல், என்னுடைய ஃபேஸ்புக் நட்பு வட்டத்தில் நீங்கள் இருப்பதால் அறிவுரை சொல்ல வேண்டியது என் கடமை. நான் நேர்மையாக இருக்கிறேன் அதனால் உங்களுக்கு கருத்து சொல்கிறேன் என்ற பிதற்றல் வேறு.

இது போன்றவர்கள் தங்கள் வீட்டில் தன் மனைவி குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள், அவர்கள் எப்படி இவரைப் போன்றவர்களுக்கு மதிப்பளிக்கிறார்கள் என்று வியந்ததுண்டு.

மற்றொருவர் என் பதிவில்  ‘டைப்பிங் பிழை’ ஏதேனும் இருந்தால் அதை பார்த்துக்கொண்டே இருந்து இந்த இடத்தில் எழுத்துப்பிழை உள்ளது என்று சொல்லாமல் கிண்டலாக பின்னூட்டங்களை எழுதுவார். அவரை சற்று கடுமையாகவே கண்டித்தேன். ‘நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே’ எனச் சொல்வதோடு  ‘நீங்கள் காக்காய் வெள்ளையாக இருப்பதாகச் சொன்னால் நான் ஆமாம் என்று சொல்லி பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன். கருப்புத்தான் என நிரூபிப்பேன்… ஏனென்றால் நான் நேர்மையானவன்’ என்ற பிதற்றலில் பின்னூட்டங்கள்வேறு.

இங்கு நான் சொன்ன இரண்டு பேருமே 40-45 வயதினர். விடியற்காலையில் 6 – 6.30 மணிக்குள் மொபைலை வைத்துக்கொண்டு ஃபேஸ்புக்கில் இத்தனை அக்கப்போர் செய்பவர்கள் வீட்டில் வேலையே இருக்காதா என யோசித்ததுண்டு. இவர்கள் மனைவிகளை நினைத்து பரிதாபப்படுவதும் உண்டு. வேலைக்கு கிளம்ப வேண்டாமா, குழந்தைகள் இருந்தால் பள்ளி கல்லூரிக்கு செல்ல சமையலில் மனைவிக்கு உதவ வேண்டியிருக்காதா என்றெல்லாம் வியந்ததுண்டு.

இரண்டு மூன்று முறை வாய்ப்பளித்தும் மாறவில்லை என்றால் Unfriend/Block செய்துவிடுவதுண்டு.

காலையில் எழுதுவதே மனநிம்மதிக்காக, அந்த நாளின் நல்ல தொடக்கத்துக்காக. அந்த நிம்மதியையும் அமைதியை குலைக்கும்வகையில் நடந்துகொள்பவர்களை ப்ளாக் செய்யாமல் வேறென்ன செய்ய முடியும்?

நேர்மையாக இருப்பது என்பது, தான் செய்கின்ற பணிகளை முழுமனதுடன் செய்வது, பரிபூரண ஈடுபாட்டுடன் செய்வது, வேலை பளு என புலம்பாமல் செய்வது, செய்கின்ற வேலைக்காக லஞ்சம் வாங்காமல் இருப்பது, நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கின்ற பேராசையில் குறுக்கு வழியில் சென்று சம்பாதிக்க முயலாமல் நேர்வழியில் செல்வது  இவைதான் நேர்மையாக இருப்பதற்கான அடையாளம்.

நேர்மையாக இருக்கிறேன் என சொல்லிக் கொண்டு அடுத்தவர் விஷயங்களில் மூக்கை நுழைப்பது நேர்மையின் அடையாளம் அல்ல. அநாகரிகத்தின் அடையாளம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 68 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon