ஹலோ with காம்கேர் – 27
ஜனவரி 27, 2020
கேள்வி: திருமணம் என்பது வெறும் வைபவம் மட்டும்தானா?
பதினைந்து வருடங்களுக்கு முன்னர் என்னிடம் பணி புரிந்த அனிமேட்டர் ஒருவர் தன் மகளின் திருமண அழைப்பிதழை வாட்ஸ் அப்பில் அனுப்பியதுடன் என்னையும் பெற்றோரையும் நேரிலும் வந்து அழைத்திருந்தார்.
என்னிடம் பணிபுரிந்தபோது அவர் மகளுக்கு பன்னிரெண்டு பதிமூன்று வயதிருக்கும்.
நேற்று ரிசப்ஷனுக்கு சென்றிருந்தேன். சிறுமியாய் பார்த்தது. பிறகு இப்போதுதான் திருமணக் கோலத்தில் பார்க்கிறேன்.
அவரது மனைவியும் மகனும் எங்களை பார்த்ததும் பரவசத்துடன் நலம் விசாரிப்பதில் தொடங்கியது அறிமுகப்படுத்தப்படும் படலம்.
தன் தம்பி, அண்ணன் குடும்பத்துக்கு, ‘மேடமிடம்தான் நான் அனிமேட்டராக பணிபுரிந்து அனுபவம் பெற்றேன்… அனிமேஷன் துறையில் புரட்சி செய்தவர்…’ என்று என்னை அறிமுகப்படுத்தினார்.
அவர் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து வந்திருந்தவர்களிடம் ‘மேடம் சாஃப்ட்வேர் எழுதுவதில் மட்டுமல்ல, ஆர்ட்டிலும் அனிமேஷனிலும்கூட கலக்குவார்கள்… ரொம்ப ஸ்ட்ரிக்ட். அப்படி இருந்ததால்தான் நானெல்லாம் இந்த நிலைக்கு வர முடிந்தது… கோடு போட மட்டுமே தெரிந்த என்னை கார்ட்டூன் வரையும் அளவுக்கு உயர்த்தியவர்…’ என்று ஒரே புகழாரம்தான்.
அடுத்து அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த குட்டீஸ்களை அழைத்து ‘இந்த ஆண்டி நல்ல கதை சொல்லுவாங்க… நீங்களும் நல்லா கதை சொன்னால் உங்கள் குரலையும் கார்ட்டூன் கேரக்டரில் கொண்டுவந்துவிடுவார்கள்…’ என அவர்களுக்கு புரியும் வகையில் அறிமுகப்படுத்தினார்.
இப்படியே கால் மணி நேரத்தில் அறிமுகப்படலமும் புகைப்படம் எடுத்தலுமாக சென்றது. கடைசியில் முன் வரிசையில் முதலாவதாக உட்கார்ந்திருந்த அவரது அம்மாவுக்கு அறிமுகம் செய்ய அழைத்துச் சென்றார். 80 வயது. முகத்தில் வயது கோடுகளால் கோலம் போட்டிருக்க, அன்பு அந்த கோடுகளை இணைத்திருக்க கைகூப்பி வணக்கம் சொன்னார். நடக்க முடியாமல் வாக்கர் வைத்திருந்தார். எழ முயன்றார். நான் அவர் பக்கத்து நாற்காலியில் அமர்ந்து அவர் நலன் விசாரித்தேன். அப்படி ஒரு சந்தோஷம் அவர் கண்களில்.
இதையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்றால் என் புகழுக்காகவோ, பெருமைக்காகவோ அல்ல.
ஒரு திருமணம் என்பது ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்க்கையை தொடங்குவதற்கான வைபவம் மட்டுமல்ல. எத்தனை உறவுகள், எத்தனை நட்புகள், எத்தனை ஆனந்த உரையாடல்கள். பார்ப்பதற்கே கண்கோடி வேண்டும்.
இளையதலைமுறையினர்கள் ஒன்று கூடவும், முந்தைய தலைமுறையினருடன் கலந்து பழகவும் வாய்ப்பளிக்கும் வைபவமல்லவா திருமணம் போன்ற நிகழ்வுகள். பல இடங்களில் பிரிந்திருக்கும் உறவுகளை இணைக்கும் பாலமாகவும் அமைவதுண்டு.
ரிசப்ஷன் அன்று மட்டுமே இத்தனை மகிழ்ச்சி என்றால் திருமண நிச்சயதார்த்தம், புடவை வேட்டி வாங்குதல், நகைகள் வாங்குதல், அழைப்பிதழ் அச்சடித்தல், உறவினர்களை அழைத்தல், குலதெய்வ கோயில் வழிபாடு, மண்டபம் பார்த்தல், விருந்துக்கு சமையல்காரர்களை தேர்ந்தெடுத்தல் இத்தியாதி இத்தியாதி. இவையெல்லாம் வெறும் வேலைகள் அல்ல. வாழ்நாளில் நம் ஒட்டுமொத்த மகிழ்ச்சியை குவித்து வெளிப்படுத்தும் ஒரு குடும்பத்து கொண்டாட்டம்.
இத்தனை பேருடைய சந்தோஷங்களையும் ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியையும் தாங்களும் அனுபவிக்காமல் தங்கள் குடும்பத்தாரையும் அனுபவிக்க வைக்காமல் ஓர் இனம்புரியாத தங்கள் சந்தோஷம் மட்டுமே முக்கியமென்று வீட்டை விட்டு அப்பா அம்மாவுக்கு தெரியாமல் சென்று திருமணம் செய்துகொள்பவர்களை நினைத்து வருத்தமே ஏற்பட்டது.
அதைவிட கொடுமை என்னவென்றால் எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரது வீட்டில் சென்ற வருடம் அவரது மகன் மதம்மாறி திருமணம் செய்துகொண்டுவிட்டதை அழுகையுடன் சொன்னது இன்றும் நினைவிருக்கிறது.
இளைஞர்களே! நீங்கள்தான் உங்கள் குடும்பத்து சந்தோஷத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதி. நினைவில் வையுங்கள்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software