ஹலோ With காம்கேர் -34: நாம் என்ன கற்றுக்கொள்கிறோம் என்ன கற்றுக்கொடுக்கிறோம்?

ஹலோ with காம்கேர் – 34
February 3, 2020

கேள்வி: நாம் என்ன கற்றுக்கொள்கிறோம் என்ன கற்றுக்கொடுக்கிறோம்?

எங்கள் வீட்டு மொட்டை மாடியில் பவழமல்லி, ரோஜா, மல்லி, முல்லை, செம்பருத்தி என அனைத்து வகையான பூச்செடிகளும் உள்ளன.

தவிர துளசி, கற்பூரவல்லி, மருதாணி, மா, வேப்பிலை போன்றவையும் உள்ளன.

சமையலுக்கு மிளகாய், முருங்கை, புதினா, தக்காளி, வெண்டை, பிரண்டை, பாகற்காய் போன்றவை அவ்வப்பொழுது காய்த்து மகிழ்விக்கும்.

வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால் அவர்கள் கிளம்பும்போது குங்குமத்துடன் வெற்றிலை பாக்கு வைத்துக்கொடுப்பது வழக்கம். அந்த வெற்றிலையையும் எங்கள் வீட்டில் இருந்தே பறித்துக்கொள்வோம்.

நாங்கள் தினமும் காலையிலும் மாலையிலும் ஊற்றும் தண்ணீருக்கு பிரதிபலனாக தினமும் பூஜைக்குத் தேவையான பூக்களைக் கொடுத்து விடுகின்றன எங்கள் செடிகள்.

முன்பெல்லாம் வீட்டு தோட்டம் பெரியதாக இருக்கும். எருக்குழி இருக்கும். அதில் தோட்டத்து செடிகொடி மரங்களுக்குத் தேவையான எருவை தயாரித்து உரமாக்குவார்கள்.

எங்கள் அப்பா அம்மா இருவருமே தொலைபேசி துறையில் பணிபுரிந்து வந்ததால் அடிக்கடி பணியிட மாற்றம் இருக்கும். கிராமம், நகரம், மாநகரம் என எல்லா இடங்களிலும் வசித்திருக்கிறோம். தோட்டம் உள்ள வீடுகளில் எங்கள் வீட்டில் ரோஜாக்கள் 50, 60 என பூத்துக்குலுங்கும். மல்லி முல்லை போன்றவை கமகமத்திருக்கின்றன. செம்பருத்தி செடிகளில் இலைகளே தெரியாத அளவுக்கு அந்த பூக்கள் செக்கச்செவேல் என செடி முழுவதும் படம் வரைந்தாற்போல படர்ந்திருக்கும்.

இப்போது மாநகரங்களில் அப்பார்ட்மெண்ட்டுகளில் எருக்குழிகள் சாத்தியமில்லைதான். ஆனால் என் அம்மா வாளியில் எரு தயாரிக்கிறார். மனமிருந்தால் மார்க்கமுண்டுதானே?

தினமும் சமையலுக்கு காய்கறி நறுக்கிய பிறகு கிடைக்கும் காய்கறி தோல்களையும், முதல்நாள் பூஜையில் வைத்த காய்ந்த பூக்களையும் ஒரு தொட்டியில் சேகரித்து எருவாக்கி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை எங்கள் செடி கொடி மரங்களுக்கு எருவளித்து பாதுகாத்துவருவதால் எங்கள் செடிகொடிகள் செய்நன்றி மறமாவல் நடந்துகொள்கின்றன.

தினமும் வாக்கிங் செல்வதற்காக மொட்டை மாடி செல்லும்போது முதல் வேலை பூக்களை சேகரிப்பதுதான். பூக்களை சேகரிக்கும்போதெல்லாம் எனக்குத் தோன்றுவது ஒவ்வொரு பூவும் ஒரு விஷயத்தை நமக்குச் சொல்வதைப் போல தோன்றும்.

குட்டி குட்டியாய் தரையில் தவழ்ந்திருக்கும் பவழமல்லியை பொறுக்குவதற்கு நிறைய பொறுமை வேண்டும். ஆக பவழமல்லி பொறுமையை கற்றுக்கொடுக்கிறது.

பார்த்தவுடன் நம்மைக் கவரும் ரோஜாப் பூக்கள் அழகை ரசிக்கக் கற்றுக்கொடுக்கிறது.

தூரத்தில் இருந்தே தன் இருப்பை வாசனையால் காட்டும் மல்லியும் முல்லையும் வாசனையை ருசிக்க கற்றுக்கொடுக்கிறது.

சின்ன செருக்குடன் ஒயிலாக பூத்துக் குலுங்கும் செம்பருத்தி  நளினத்தைக் கற்றுக்கொடுக்கிறது.

‘வெள்ளத்தனைய மலர் நீட்டம்…’ என்பதுபோல குளங்களில் தண்ணீர் எந்த அளவுக்கு உள்ளதோ அந்த அளவுக்குக் கீழே தன் தண்டை மறைத்துக்கொண்டு முகத்தை மட்டும் பிரகாசமாக வெளிக்காட்டும் தாமரை கம்பீரத்தைக் கற்றுக்கொடுக்கிறது.

இப்படி ஒவ்வொரு பூவும் போகிறப் போக்கில் ஏதோ ஒன்றை கற்றுக்கொடுப்பது இயற்கையின் அதிசயம்.

நாம் வளர்க்கின்ற செடிகொடிகளே பூக்களையும் காய்கனிகளையும் கொடுப்பதுடன் வாழ்க்கைக்குத் தேவையான ஏதோ ஒன்றை சொல்லிச் செல்லும்போது நாம் நம் கல்விக்கூடங்கள் கற்றுக்கொடுப்பதைத் தவிர வாழ்க்கையில் உருப்படியாக என்னக் கற்றுக்கொண்டோம், பிறருக்கு என்ன கற்றுக்கொடுத்துள்ளோம் என்பதை நினைவில் வைப்போம்.

மனமிருந்தால் நாமும் கற்றுக்கொண்டு பிறருக்கும் கற்றுக்கொடுக்க ஏராளமான வாய்ப்புகளும் வசதிகளும் நம்மைச் சுற்றி வியாபித்துள்ளன. பயன்படுத்துவதும் பயன்படுத்தாததும் அவரவர் விருப்பம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 28 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon