ஹலோ with காம்கேர் – 35
February 4, 2020
கேள்வி: கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்குமாமே உண்மையா?
முன்பெல்லாம் வீடுகளில் அப்பாக்கள் மட்டுமே வேலைக்குச் செல்வார்கள். அவர்கள் வேலையில் இருந்து வீட்டுக்கு வரும்போது அலுவலக டென்ஷனில் குழந்தைகளிடமும் மனைவியிடமும் எரிந்து விழுவார்கள். அப்படி எரிந்து விழுவதை வீடுகள் ‘கோபம்’ என கொண்டாடின. அந்த எரிச்சலில் பிள்ளைகளுக்கு இரண்டு அடிகூட விழும்.
பிள்ளைகளுக்கு அப்பாவின் மீது மரியாதை வர வேண்டும் என்பதற்காக ‘கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்’ என்று அம்மாக்கள் சப்பைக் கட்டு கட்டுவார்கள்.
அதுவே பல பரிணாமங்கள் எடுத்து இன்று ‘யாரையும் ஏமாற்றாமல் நேர்மையாக இருப்பவர்களுக்கு கோபம் அதிகம் வரும்’ என்று புதுவிதமாய் சொல்லி வருகிறார்கள்.
உண்மையில் தகிக்கும் கோபத்துக்கும் தன்மையான குணத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. கோபமும் ஒரு குணமே. மற்றபடி கோபம் இருப்பவர்களிடம்தான் குணம் இருக்கும் என்று சொல்வதெல்லாம் கோபப்படுபவர்களை மேலும் மேலும் உசுப்பிவிடும் தந்திரம்.
கோபத்தில் கத்தியபிறகு தன்னால் காயப்பட்டவர்கள் மீது பரிதாபம் உண்டாவதால் நமக்குள் குற்ற உணர்வு வேண்டுமானால் ஏற்படும். அதுதான் இயல்பான உணர்வு. அதையே அன்பு என்பதும் அதுவே தன்மையான குணம் என கொண்டாடுவதும் அபத்தத்தின் உச்சம்.
கோபமாக இருப்பவர்களின் குணமே உயர்வு என்றால், கோபம் இல்லாமல் அன்பாக பண்பாக இருப்பவர்களின் அன்புக்கும் பாசத்துக்கும் என்ன மதிப்பு?
எல்லா இடங்களிலும் கோபப்படுபவர்களையாவது அது அவர்களின் குணம் என்று ஏற்றுக்கொண்டுவிடலாம். ஆனால் எங்கு தன் கோபம் செல்லுபடி ஆகுமோ அந்த இடத்தில் மட்டும் கோபப்படுபவர்கள் இன்னும் மோசமானவர்கள். சுயநலவாதிகள்.
வீடுகளில் குறிப்பாக தன் மனைவியிடம், பணியிடத்தில் தனக்குக்கீழ் பணிபுரிபவர்களிடம், ஓட்டல்களில் சர்வர்களிடம் என தன் கோபத்தை எங்கு செலுத்த முடியுமோ அங்கு மட்டுமே தன் வீரத்தை கோபம் வழியாக காட்டுபவர்களை ஜீரணிக்கவே முடிவதில்லை.
ஒருமுறை, சென்னையில் ஒரு ஹோட்டலில் செல்ஃப் சர்வீஸ் பிரிவில் தோசை சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒருவர் ‘தண்ணீர்…’ என குரல் கொடுத்தார். செல்ஃப் சர்வீஸாக இருந்தாலும் ஏதேனும் கேட்டால் சர்வர்கள் உதவுவார்கள். அன்று அந்த டேபிளுக்கு அருகே சர்வர் யாருமே இல்லை.
அவர் டேபிளில் தண்ணீர் பாட்டில் இருந்தது. அவரே அதை டம்ளரில் எடுத்து ஊற்றி குடிக்கலாமே என யோசித்துக்கொண்டிருந்தபோதே அவர் கடும் கோபத்துடன் சர்வீஸ் செக்ஷனுக்குச் சென்று அந்த ஹோட்டலே அதிர்வதைப் போல கத்தினார்.
அவரை சமாதானப்படுத்தி டேபிளில் அமரச் செய்து தண்ணீர் கொடுத்தார் ஒரு சர்வர்.
தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை அவரே டம்ளரில் ஊற்றி குடித்திருக்கலாம். ஆனால் தன் அகங்காரத்தை, அதிகாரத்தை, ஈகோவை எப்படியாவது பிறர் மீது காட்டுவிடத் துடிப்பவரால் எப்படி கோபத்தை அடக்க முடியும்? அதுவும் தன் கோபம் செல்லுபடி ஆகும் இடத்தில்தானே காண்பிக்க முடியும். என்ன ஒரு சுயநலம்?
வீட்டில் இப்படி நடந்துகொள்வாரா என்று பார்த்தால் அங்கு அவரது முகமே வேறாக இருக்கும்.
தன் கோபம் செல்லுபடி ஆகாத இடத்தில் தன் அதிருப்தியை சின்ன எதிர்ப்பினால் கூட காட்ட முடியாத கோழைகளால் மட்டுமே இப்படி சுயநலத்துடன் நடந்துகொள்ள முடியும்.
கோபம் என்பது வலுவான ஆயுதம். தேவையான நேரத்தில் மட்டும் பயன்படுத்தினால் அது நமக்குப் பாதுகாப்புக் கவசம். இல்லையெனில் அது நம்மை கோமாளி ஆக்கி வேடிக்கைப் பார்க்க வைத்துவிடும்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software