ஹலோ with காம்கேர் – 52
February 21, 2020
கேள்வி: துஷ்டரைக் கண்டால் தூர விலக வேண்டும் என ஒதுங்கி வாழ்வது சரியா?
நல்லது கெட்டது என இரண்டு விஷயங்கள் உண்டு. நல்லது நேர்மறை, கெட்டது எதிர்மறை.
நேர்மறை, நல்லவற்றுக்குத்தான் துணைபோகும். சந்தேகமே இல்லை. ஆனால் எதிர்மறை, தீயவற்றுக்கு துணைபோவதுடன், நல்லவற்றை அழிக்கும் பேராற்றல் கொண்டது.
நல்லவற்றை செய்வதும் நல்லவராக வாழ்வதும் பெரிதல்ல, தீயவற்றை எதிர்கொள்வதே பெரிய விஷயமாக உள்ளது.
எந்த ஒரு நல்ல விஷயமும் அதன்போக்கில் அமைதியான நதிபோல கவலை இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும்போது அதை கெடுக்கும் வகையில் தீய சக்திகள் எந்த ரூபத்திலாவது வந்து தலைவிரித்தாடும்.
அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதனுடன் போராடுவதைவிட்டு நம் போக்கில் சென்றுகொண்டே இருத்தல் சாலச்சிறந்தது. அதைவிட்டு அந்த தீய சக்திகளின் பேயாட்டத்துக்கு நாம் கவலைப்படுவதை வெளிப்படையாக காண்பித்துக்கொண்டால் போச்சு, தீய சக்திகளின் வீரியம் இன்னும் அதிகமாகிவிடும்.
நம் செயல்பாடுகளை புரிந்துகொள்ளாமல் நம் கருத்துக்களுடனும் கொள்கைகளுடனும் முரண்பட்டிருப்பவர்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்கலாம்.
நல்ல விஷயங்களை செய்யும் நம் மீதே குரோத எண்ணத்துடன் செயல்படுபவர்களுக்கு புரிய வைத்தாலும் பிரஜோஜனமில்லை. ஏனெனில் அவர்களின் கண், காது, மனம் போன்ற சக ஜீவன்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள படைக்கப்பட்டிருக்கும் உறுப்புகள் அனைத்தும் உறுதியான அக்மார்க் பொறிக்கப்பட்ட அடைப்பானால் அடைக்கப்பட்டிருக்கும்.
சுருங்கச் சொன்னால் கருத்துக்களுக்கு எதிர்கருத்திடுபவரை விட கருத்துச் சொல்பவரை எதிரியாக நினைத்து செயல்படுபவர்கள் பயங்கரமானவர்கள். அவர்களில் இருந்து தூர விலகி இருப்பதுதான் சிறந்தது.
ஒரு நல்ல காரியத்தை செய்யும்போது அதை நடக்கவிடாமால் செய்வதற்கு தீய சக்திகள் பெரும்பாடுபடும். அதை எல்லாம் மீறி நன்மைகள் செய்வதுதான் உண்மையான வெற்றி. அப்படி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வெற்றி பெரும்போது அந்த வெற்றியை அதிகப்படியாக வெளிப்படுத்தி நம் சந்தோஷத்தை கொண்டாடவும் தேவையில்லை.
ஏனெனில் நம்முடைய சந்தோஷமும் மனநிம்மதியும்தான் எதிராளியை உறங்கவிடாமல் செய்யும். நாம் எடுத்துக்கொண்ட செயலில் உறுதியாக நின்று நேர்வழியில் பயணிப்பதுதான் நம் நோக்கம் என்றால் நம் வெற்றிகளை கொண்டாடுவதில்கூட ‘அடக்கிவாசித்தல்’ நல்லது.
நம் வெற்றியை ஆடம்பரமாகக் கொண்டாடி சீண்டுவதைவிட நதிபோல ஓடிக்கொண்டிருக்கும் நாம் அருவிபோல பேராற்றலுடன் செயல்பட இந்த அடக்கிவாசித்தலே துணைபுரியும்.
இதற்கு பெயர் அடங்கிப் போவது என்று அர்த்தம் இல்லை. எதிராளியை அடக்கும் அற்புத ஆயுதம், ஆகச்சிறந்த தந்திரம், ஈடு இணையில்லா மந்திரம்.
துஷ்டரைக் கண்டால் தூர விலகுவதற்கு கோழைத்தனம் என்று பொருளில்லை. அப்படி விலகுவதே தைரியத்தின் உச்சம்.
நீங்கள் தைரியசாலியாக வாழ விரும்புகிறீர்களா அல்லது கோழையாக இருக்க விரும்புகிறீர்களா. முடிவு உங்கள் கைகளில்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software