ஹலோ with காம்கேர் – 53
February 22, 2020
கேள்வி: மொபைலில் வாட்ஸ் அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் டைப் செய்வது கஷ்டமாக உள்ளது. என்ன செய்யலாம்?
மொபைலில் வாட்ஸ் அப்பிலும் ஃபேஸ்புக்கிலும் டைப் செய்வது என்பது பழக்கம் இருந்தால் மட்டுமே சுலபமாக இருக்கும். ஓரிரு பத்திகள் என்றால் டைப் செய்யலாம். சற்றே நீண்ட பதிவுகளை டைப் செய்யும்போது கழுத்து, தோள்பட்டைகள் கூட வலி எடுக்க ஆரம்பித்துவிடும்.
ஃபேஸ்புக்கில் பதிவிட லேப்டாப்பை பயன்படுத்தலாம். வாட்ஸ் அப்பில் நமக்கு வரும் தகவல்களுக்கு அவ்வப்பொழுது பதில் அளிக்க ஒவ்வொரு முறையும் லேப்டாப்பை ஆன் செய்துகொண்டிருப்பது தொழில்நுட்பம் சார்ந்திராதவர்களுக்கு சாத்தியமில்லைதானே.
அதற்கு ஒரு எளிய வழி உள்ளது. அதாவது டைப் செய்யவே தேவையில்லை. நீங்கள் பேசினாலே உங்கள் போன் அதை புரிந்துகொண்டு தமிழ், ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் எழுத்துக்களாக மாற்றி வெளிப்படுத்தும் தொழில்நுட்பம் உள்ளது.
சமீபத்தில் உயர்திரு. கவிக்கோ ஞானசெல்வன் அவர்கள் கைப்பேசியின் இடர்ப்பாடு என்ற தலைப்பில் போனில் டைப் செய்வது தனது 81 வயதில் எத்தனை சிரமமாக உள்ளது என பதிவிட்டிருந்தார்.
அவரது வார்த்தைகளில் அவர் பதிவு உங்கள் பார்வைக்கு.
// கருத்துகளைப் பதிவிட நம் கைவிரல்கள் ஒத்துழைக்கவேண்டும். அகவை முதிர்ச்சி (81) காரணமாகச் சிலசமயம் த வுக்கு ந, ந வுக்குத் த , ப வுக்கு ம, ம வுக்கு ப விழுந்து விடும். இதைப்பார்த்துச் சரிசெய்து விடலாம்.
ஆனால் நாம் ஒன்று செய்தால் கருவி தொடர்பே இல்லாமல் வேறொன்று செய்து விடுகிறது.புதிய புதிய சொற்களெல்லாம் வந்திருக்கும்.
பேசிப்பார்த்தாலே என்று நாம் எழுதினால் யோசித்தாலே என வருகிறது.அல்லது எண்ணிப்பார்த்தாலே என ஆகிறது. நிறைவைக்கண்ட என்றால் சிறைவைக்கப்பட்ட எனக்காட்டுகிறது அல்லது கனவு கண்ட எனக்காட்டுகிறது. சொற்களெல்லாம் இதற்கெல்லாம் என்றாகிறது. மென்தொடர்க்குற்றுகரம் என எழுதினால் குற்றுயிராக எனவருகிறது. வருந்தவேண்டாம் திருந்தவேண்டும் என்றும், கைப்பேசி குப்புசாமி என்றும் ஆகின்றன.
ஒரு முறைக்கு மூன்று முறை சரிபார்த்தால்தான் ஒழுங்காக அமையும்.
இடும்பைகூர்(இரும்புக்கரம்…) பேசியே உன்னோடு வாழ்தல் அரிது.//
இதுபோன்ற பிரச்சனை உங்களில் பெரும்பாலானோருக்கு இருக்கலாம்.
இதை தவிர்க்க ஆண்ட்ராய்ட் போன்களில் Gborad என்ற APP இன்ஸ்டால் செய்துகொண்டு அதில் Speak Now என்ற ஆப்ஷனை பயன்படுத்தி வாயால் பேசியே அதை டைப் செய்யும் தகவல்களாக மாற்றிக்கொள்ளலாம்.
எஸ்.எம்.எஸ், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டிவிட்டர் என எங்கெல்லாம் டைப் செய்ய தேவையிருக்கிறதோ அங்கெல்லாம் இந்த ஆப்பை பயன்படுத்தலாம்.
இந்த ஆப்பை எப்படி இன்ஸ்டால் செய்துகொள்வது, எப்படி பயன்படுத்துவது என்பதை எனது வெப்சைட்டில் விளக்கப்படங்களுடன் கொடுத்துள்ளேன். பயன்படுத்தித்தான் பாருங்களேன்.
http://compcarebhuvaneswari.com/?p=5261
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
இன்றைய கேள்வியை பலரும் பல்வேறு சந்தர்பங்களில்
என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.
அவர்கள் அனைவருக்காகவும் இந்த பதிவு.