ஹலோ With காம்கேர் -54: ஏன் இப்படி ஆனோம் நாம்?

ஹலோ with காம்கேர் – 54
February 23, 2020

கேள்வி: நம் நாட்டு பாரம்பரியத்தை நாம் பின்பற்ற சீன நாட்டு கொரோனா வைரஸ்தான் கற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. ஏன் இப்படி ஆனோம் நாம்?

சில வருடங்களுக்கு முன்னர் தொலைதூர ரயில் பயணத்தில் என் சீட்டுக்கு எதிரே அமர்ந்திருந்த பயணி தொடர்ச்சியாக இருமிக்கொண்டே இருந்தார். என்னுடன்  அமர்ந்திருந்த சக பயணிகள் அவரவர் வேலையில் ஈடுபட்டிருக்க எனக்கு மட்டும் மிக சங்கடமாக இருந்தது. அவர் இருமும்போதெல்லாம் நான் மூச்சை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டே இருந்தேன். என் கைக்குட்டையால் மூக்கையும் வாயையும் மூடிக்கொண்டு சமாளித்தேன்.

60 வயதிருக்கும் அவருக்கு. கூட வந்திருந்த அவர் மகளுக்கு 30 வயதிருக்கும். ஆனால் அவரும் அப்படியே அமர்ந்திருந்தார். மாஸ்க்கெல்லாம் இல்லையென்றாலும் இருமும்போது ஒரு கைகுட்டையால் வாயை மூடிக்கொண்டு இருமலாம் அல்லது அவர் தோளில் போட்டிருந்த துண்டால் மூடிக்கொண்டு இருமலாம். அவரும் அதை செய்யவில்லை, அவர் மகளும் அறிவுறுத்தவில்லை, சக பயணிகளும் எதையுமே கண்டுகொள்ளவில்லை.

எனக்கு மட்டும் முகம் அஷ்டகோணலாக, உடல் முழுவதும் என்னவோ செய்தது. இதற்குள் சைட் கம்பார்ட்மெண்ட் காலியாக நான் அங்கு சென்று அமர்ந்திருந்தேன்.

பிறகு அதற்கும் பயணிகள் வர, என் இருப்பிடத்துக்கு திரும்ப வேண்டியதாயிற்று. இதற்கு மேலும் பொறுக்க முடியாமல் அந்த பெரியவரிடம், ‘சார் இருமும்போது கைக்குட்டையால் வாயை மூடிக்கொண்டு இருமுங்களேன், எனக்கு சுவாசப் பிரச்சனை உள்ளது’ என்று இல்லாத வியாதியை சொன்னேன், அவர் மனம் நோகக்கூடாது என்பதற்காக.

நான் சொன்ன அந்த நிமிடம் அந்த அப்பாவுக்கும் மகளுக்கும் நான் எதிரியானேன். நான் சொன்னதற்காக வேண்டா வெறுப்பாக அறைகுறையாக முகத்தை மூடி இருமினார்.

அப்படி ரொம்ப சுத்தம்னா தனி காரில் வர வேண்டியதுதானே என அந்த மகள் அப்பாவிடம் என் காதில் விழ வேண்டும் என்பதற்காகவே ரகசியமாக சொல்வதைப் போன்ற பாவனையில் சப்தமாக சொன்னார்.

இப்போதெல்லாம் கூட்டமாக இருக்கும் கோயில்கள், மால்கள், மருத்துவமனைகள், தியேட்டர்கள் என பல இடங்களிலும் வாயில் மாஸ்க் அணிந்து செல்லும் மனிதர்களை அதிகம் காண முடிகிறது.

சுத்தமாக இருக்க வேண்டும், இருமும்போதும் தும்மும்போதும் பிறர் முகத்துக்கு எதிரே செய்யாமல் கைகளால் மூடிக்கொண்டு செய்ய வேண்டும், வீட்டுக்குள் நுழைந்ததும் கைகால் அலம்ப வேண்டும், சாப்பிடும்முன் கை கழுவ வேண்டும், ஒருவர் சாப்பிட்ட எச்சிலை மற்றொருவர் சாப்பிடக் கூடாது, கைகுலுக்குவதைவிட கைகூப்பி வணக்கம் சொல்லுவதே சிறந்தது என்பதெல்லாம் காலம் காலமாக நம் நாட்டு பாரம்பரிய பழக்க வழக்கங்கள்.

ஆனால் இதையெல்லாம் செய்யச் சொல்லி சீனாவை ஆட்டிப் படைத்துக்கொண்டிருகும் கொரோனா வைரஸ் வற்புறுத்துகிறது. நம் மக்களும் பின்பற்றுகிறார்கள்.

நம் கலாச்சார பண்பாட்டு பாரம்பரிய விஷயங்களை நாம் பின்பற்றக் கூட அந்நிய நாட்டு வியாதிகள்தான் உதவுகின்றன என்பதே வேதனையான விஷயம்தான்.

எல்லா நேரங்களிலும் பின்பற்ற வேண்டிய சுத்தம் சுகாதாரம் போன்ற விஷயங்களை உயிரை உலுக்கும் வைரஸ்கள் வந்தால் மட்டுமே பின்பற்ற முனைவது அறியாமையைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்.

என் பள்ளி கல்லூரி நாட்களில் என்னுடைய டிபன் பாக்ஸில் இருந்து மற்றவர்கள் எச்சில் கையுடனோ, ஸ்பூனுடனோ அப்படியே எடுத்துக்கொள்ள அனுமதித்ததில்லை. மற்றவர்கள் கேட்டால் நானே எடுத்து கொடுப்பேன். இந்த குணத்தினால் நிறைய பேர் என்னைவிட்டு விலகியிருக்கிறார்கள்.

இன்று வரை என் குணத்தில் எந்த மாற்றமும் இல்லை. யாருக்காகவும் மாறவில்லை.

நம் நாட்டு பாரம்பரியத்தை நாம் பின்பற்றுவதற்கு நாம் பெருமிதம் அடைய வேண்டுமே தவிர கூச்சப்படக் கூடாது.

இதுவும் நான் வாழ்ந்துகொண்டிருக்கும் என் நாடு எனக்கு கற்றுக்கொடுத்துள்ள பண்பு.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 61 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon