ஹலோ With காம்கேர் -55: மகாபாரதத்தில் அவியலுக்கும் ஓர் இடம் உண்டு. எப்படித் தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 55
February 24, 2020

கேள்வி: மகாபாரதத்தில் அவியலுக்கும் ஓர் இடம் உண்டு. எப்படித் தெரியுமா?

கெளரவர்கள் சிறுவயதில் மரத்தில் ஏறி விளையாடும்போது பீமன் மரத்தை உலுக்கி கீழே விழுபவர்களை பார்த்து ரசிப்பானாம். பீமன் மீது துரியோதனனுக்கு அதில் ஆரம்பித்த விரோதம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமானது. எப்படியாவது பீமனை கொன்றுவிட வேண்டும் என பல்வேறு முயற்சிகள் எடுக்கிறான். அப்போது சகுனி அவன் மனதில் விஷத்தை விதைத்து அறிவுரை சொல்கிறான். மனதில் உள்ள கோபத்தை அடக்கி பாண்டவர்களிடம் அன்பாக நடந்துகொள்வதைப் போல நடிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் மனதில் இடம்பெற்றவுடன் அவர்களை அழிப்பது சுலபம் என்ற சகுனியின் அறிவுரையின்படி தர்மன், அர்ஜூனன், பீமன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐவரிடமும் அன்பாகப் பழகத் தொடங்கினான்.

பஞ்ச பாண்டவர்களில் புத்திசாலியான சகாதேவனை தவிர மற்றவர்கள் துரியோதனன் மனம் திருந்திவிட்டான் என நினைத்து அவனது அன்பில் திளைத்தனர்.

சகுனி திட்டம் தீட்டிக் கொடுக்க, துரியோதனன் சுற்றுலா ஒன்றுக்கு ஏற்பாடு செய்தான். பிரமன்கோடி என்ற இடத்தில் நதிக்கரை ஓரம் கூடாரம் அமைத்தார்கள். எல்லோரும் அங்கு சென்றார்கள். பீமனின் பலவீனமே சாப்பாடுதான். சாப்பாட்டை பார்த்துவிட்டால் தன்னையே மறந்துவிடும் அளவுக்கு சந்தோஷ மயக்க நிலைக்கு சென்றுவிடுவான். அவன் பலவீனத்தை அறிந்திருந்த துரியோதனன் அவனை திகட்டத் திகட்ட உபசரித்து திக்கு முக்காட செய்து உணவு படைத்தான்.

நிறைவாக இனிப்பும் பழங்களும் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. பீமனுக்குக் கொடுக்கப்பட்டதில் விஷத்தை கலந்துவிட்டான் துரியோதனன்.

எல்லோரும் இனிப்பையும் பழங்களையும் சாப்பிட்ட பின்னர் நதியில் நீந்தி விளையாடச் செல்ல பீமனும் செல்கிறான்.

சிறிது நேரத்தில் பீமனை தவிர மற்றவர்கள் கரைக்குத் திரும்ப, பீமன் தண்ணீரில் இருந்து வெளியே வந்து நதிக்கரையில் மயங்கினான்.

துரியோதனன் அவனை நன்றாக கட்டி நதியில் உருட்டி விட்டான். பாம்புகள் நிறைந்திருந்த பகுதியில் சென்று விழுந்த பீமனை விஷப் பாம்புகள் கொத்தின. பீமன் உடம்பில் ஏறியிருந்த விஷத்துக்கு அந்த விஷப்பாம்புகளின் விஷம் நல்ல விஷமுறிவாக செயல்பட்டது.

பீமனை காணாமல் மற்ற சகோதரர்கள் தவிக்க துரியோதனனும் அவர்களுடன் சேர்ந்து தவிப்பதைப் போல நடிக்க ஒரு கட்டத்தில் அனைவரும் துக்கத்துடன் அரண்மனை திரும்பினார்கள்.

குந்தி தியானத்தில் ஆழ்ந்து பீமன் இறக்கவில்லை என சொல்ல மீண்டும் பீமனை நதியில் தேடும் முயற்சியில் இறங்கினார்கள். பீமன் கிடைக்காததால் அவனுக்கு இறுதி சடங்குகள் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. இறுதிநாள் சடங்கின்போது மிகப்பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்கள்.

அப்போது அரண்மனைக்குத் திரும்பினான் பீமன். சகோதரர்கள் நால்வரும் குந்தியும் அடைந்த சந்தோஷத்துக்கு எல்லையே இல்லை. சடங்கு நிறுத்தப்பட்டது. சடங்குக்கான விருந்து தயாரிப்பதும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

பீமன் அகோரப் பசியில் இருந்தான். பாதியில் நிறுத்தப்பட்டிருந்த விருந்தைப் பார்த்ததும் பசி இன்னும் அதிகமாக நறுக்கி வைக்கப்பட்டிருந்த காய்கறிகளை கலவையாகக் கலந்து சமைத்தான்.

ஆரிய வம்சத்தில் குறிப்பிட்ட காய்கறிகளை மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைப்பது வழக்கம் இல்லை. ஆனால் பீமன் அத்தனை காய்கறிகளையும் ஒன்றாக சேர்த்து தயாரித்த உணவு ‘எல்லாம் சேர்ந்த கலவை’ என்று பொருள்படும் அவியல் என்று பெயர் பெற்றது.

நம் இதிகாச புராணங்களில்தான் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களுக்குப் பின்னாலும் எத்தனை சுவையான சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன எனும்போது வியப்பாக இருக்கிறது.

அதுவும் ‘அவியல்’ என்ற உணவுக்குப் பின்னால் ஒரு மகாபாரத நிகழ்வு இருப்பது எத்தனை ருசிகரமானது?

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 32 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon