ஹலோ with காம்கேர் – 58
February 27, 2020
கேள்வி: பாசத்தின் அளவுகோல் என்ன, சென்டிமென்ட்டுகள் அவசியமா?
சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ஒரு Talk it Easy என்ற ‘காமெடி ஷோ’ வீடியோ பார்த்தேன். 4 வருடங்களுக்கு முன் வெளிவந்தது. நடிகர் பாண்டியராஜன் நடத்திக்கொண்டிருந்தார். கோர்ட் போல சீன் அமைத்திருந்தார்கள்.
ஒரு பக்கம் அப்பா, மறுபக்கம் கல்லூரி படிக்கும் மகன். அப்பாவுக்கும் மகனுக்குமான இடைவெளியையும் அவரவர்கள் பக்க நியாயங்களை பேசுவதாகவும் நடுவர் விசாரித்து தீர்ப்பு வழங்குவதாகவும் அமைத்திருந்தார்கள். அருமையான கான்செப்ட்.
ஒரு கட்டத்தில் மகன் தன் பிரச்சனையை சொல்கிறார்.
அப்பா ரொம்ப பாசமாக இருக்கிறார். அதில் தவறில்லை. அதை டெஸ்ட் செய்துகொண்டே இருக்கிறார். நான் சரியாக படிக்கவில்லை என்றால் அவர் மீது பாசமாக இல்லை என நினைக்கிறார். அவர் திருமண நாளுக்கு அம்மாவுக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்துவிட்டு கல்லூரி சென்றுவிட்டேன். அதனால் தன் மீது பாசமில்லை என நினைக்கிறார். சாப்பிட்டீர்களா, தூங்கினீர்களா என ஒவ்வொன்றையும் விசாரிக்க வேண்டும் என நினைக்கிறார். விசாரிக்கவில்லை எனில் பாசமாக இல்லை என நினைக்கிறார். நான் சாப்பிடவில்லை என்றால் அவர் மீது பாசமாக இல்லை என நினைக்கிறார். நான் காலையில் சீக்கிரம் எழுந்திருக்கவில்லை என்றால் அவர் மீது பாசமில்லை. நான் வீட்டுக்கு தாமதமாக வருவதை போன் செய்து சொல்லவில்லை என்றால் அவர் மீது பாசமில்லை.
‘இப்படி நான் செய்கின்ற ஒவ்வொரு விஷயத்தையும் பாசத்துடன் இணைத்தால் நான் என்ன என் இதயத்தைப் பிளந்தா பாசத்தை காட்டுவது’ என மகன் தன் ஆதங்கத்தை நகைச்சுவையோடு பேசினார்.
அப்பா தன் எதிர்பார்ப்பை சொல்கிறார்.
85 வயதாகும் என்னுடைய அப்பா என் கையில் சிறிய காயம் வந்தாலும் பதறிபோய் ‘என்னாச்சு, ஏதாச்சு, நீ உன் உடம்பை கவனித்துக்கொள்வதே இல்லை…’ என்று புலம்பி அழவே ஆரம்பித்துவிடுவார். என் மகன் மழையில் லேசாக நனைந்து வந்தாலே என் சட்டையை கழற்றி துடைத்துவிடுகிறேன். ஆனால் நான் மழையில் சொட்ட சொட்ட நனைந்து வந்தாலும் என் மகன் கண்டுகொள்ளாமல் நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பவும் லேப்டாப்பில் மூழ்கிவிடுகிறான்.
இப்படி சின்ன சின்னதாக தன் எதிர்பார்புகளை சொல்லிக்கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் அவர் சொன்ன ஒரு சிறிய விஷயத்தில்தான் மிகப் பெரிய உளவியல் பார்வை உள்ளது.
தன் மகன் அம்பத்தூரில் விவேகானந்தரின் 150-வது ரத யாத்திரை பொறுப்பை ஏற்று சிறப்பாக செயலாற்றியதாகவும் அதற்கான பாராட்டு விழாவில் அவனுக்கு பெரிய மனிதர்கள் பலர் மாலை போட்டு மரியாதை செய்தார்கள் என்றும் சொன்னார். அப்போது தன் மகன் அந்த மாலைகளை எடுத்து தன் மீது போட்டு இந்த பெருமை எல்லாம் என் அப்பாவையே சேரும் என ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் அதைவிட இந்த வாழ்க்கையில் வேறென்ன வேண்டும் எனக்கு. மகன் தந்தைக்கு ஆற்றும் நன்றி வேறென்ன. ஆனால் என் மகன் அப்படி செய்யவில்லையே என்று நெகிழ்ச்சியாக தன் எதிர்பார்ப்பை சொன்னார்.
இந்த நிகழ்ச்சி நகைச்சுவைக்காக எடுக்கப்பட்டிருந்தாலும் எத்தனை அரிய விஷயத்தை சொல்லி செல்கிறது.
இதையேதான் நானும் சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.
சந்தோஷங்களை வெளிப்படுத்துங்கள். சென்டிமென்ட்டுகளை வைத்துக்கொள்ளுங்கள். அன்பையும் பாசத்தையும் வெளிக்காட்டுங்கள். இவையே நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்ள உதவும் உற்சாக டானிக்; வாழ்க்கையையும் உறவுகளையும் நட்புகளையும் இணைக்கும் மாமருந்து.
உங்கள் உணர்வுகளை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அளவுக்கு அத்தனை உணர்ச்சிப் பிரவாகமாக வெளிப்படுத்தத் தெரியவில்லை என்றாலும் குறைந்தபட்சம் சின்ன சிரிப்பு, மெல்லிய அரவணைப்பு, மென்மையான வார்த்தைகள் இதன் மூலமாவது வெளிப்படுத்தத் தயங்காதீர்கள்.
மனிதர்களை ஆப்ஜெக்ட்டுகளாக பார்க்காதீர்கள். மனிதர்களை மனித நேயத்துடன் அணுகப் பழகுங்களேன்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
இன்றைய கேள்வியை தேர்ந்தெடுக்க காரணமாக இருந்த வீடியோ லிங்க்: https://www.facebook.com/ravi.subramanian.581/videos/660680250737181/
இதில் பங்கேற்றவர்கள் என் ஃபேஸ்புக் நட்பு வட்டத்தில் இருக்கும்
உயர்திரு. ரவி சுப்ரமணியன் அவர்களும், அவரது மகன் உயர்திரு. கெளதம் ராஜூம்.