அறம் வளர்ப்போம் குழுவில் இடம் பெற்றுள்ள அறநெறிகளை முழுமையாக படிக்க
http://compcarebhuvaneswari.com/?cat=98
ஹலோ with காம்கேர் – 59
February 28, 2020
கேள்வி: நீங்கள் நடத்திவரும் ‘அறம் வளர்ப்போம்’ குழு என்னென்ன செய்கிறது?
நாங்கள் நடத்திவரும் ‘அறம் வளர்ப்போம்’ வாட்ஸ் அப் குழு என்னென்ன செய்கிறது என பலரும் கேட்பதால் பொதுவில் அதற்கான பதிலை பகிர்கிறேன்.
மேலும் இந்தக் குழுவிற்காக நான் எழுதியுள்ள ஒருசில அறநெறி கருத்துக்களை உங்கள் பார்வைக்காக கொடுத்துள்ளேன்.
தமிழகத்தின் பல்வேறு கிராமப்புறங்களிலும் சிறுநகரங்களிலும் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் அந்தக் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர். தினமும் நான் காலை 6 மணிக்கு ஒரு அறநெறி செய்தியை அதில் பதிவிடுவேன்.
தினமும் பள்ளியின் நடக்கும் இறை வணக்கத்தின் போது இந்த அறநெறி செய்திகளை மாணவர்களைவிட்டே படிக்கச் சொல்கிறார்கள்.
பின்னர் அந்த அறநெறி செய்திக்காக நான் எழுதியிருக்கும் விளக்கத்தை ஆசிரியர்கள் உணவு இடைவேளையின்போது சற்று விரிவாக சொல்லிக் கொடுக்கிறார்கள்.
இதன் மூலம் மாணவர்களின் மனதில் நல்ல மாற்றம் உண்டாவதாக சொல்கிறார்கள்.
அங்குள்ள மாணவர்கள் பெரும்பாலும் பொருளாதார ரீதியாக ஏழ்மையில் இருப்பவர்கள் என்பதால் மாலை வீட்டுக்குச் சென்றால் அப்பா குடித்துவிட்டு வருதல், அம்மாவுடன் சண்டை போடுதல், அம்மா அழுது கொண்டிருத்தல் இதுபோன்ற ஆரோக்கியமற்ற சூழலில் வளர்வதால் அந்த மாணவர்கள் வாயில் நாம் சாதாரணமாக காதுகொடுத்து கேட்க முடியாத அளவுக்கு கெட்ட வார்த்தைகள் சரளமாக வருமாம்.
அவர்களுக்கு இந்த அறநெறி கருத்துக்களை தினமும் கொஞ்சம் கொஞ்சமாக புகட்டும்போது அவர்கள் யதார்த்தத்தைப் புரிந்துகொள்கிறார்கள் என்றும், அவர்களுக்குள் வீட்டு சூழலின் எதிர்மறை தாக்கங்கள் விலகி நேர்மறை எண்ணங்கள் பெருகுவதாகவும், அவர்கள் செய்யும் சின்ன சின்ன தவறுகள்கூட குறைவதாகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்கள்.
குறிப்பாக நேற்று ஓசூரில் இயங்கிவரும் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்ன மற்றொரு தகவல் வேதனையளித்தது.
இங்குள்ள மாணவர்களுக்கு தமிழும் அரைகுறை, கன்னடமும் தெரியாது, ஆங்கிலமும் வருவதில்லை. எந்த மொழியுமே முழுமையாக தெரியாததால் பண்பட்ட மனநிலை வருவதே இல்லை. பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள வீட்டு சூழலுடன் மது புகை சண்டை சச்சரவு என பல்வேறு தீய பழக்கங்கள் குடிகொண்டுள்ள ஆரோக்கியமற்ற வீட்டு சூழலும் சேர்ந்துகொண்டு மாணவர்களை நல்வழிப்படுத்துவதே பெரும்பாடாக உள்ளது.
இந்த சூழலில் அறம் வளர்ப்போம் குழுவில் பகிரப்படும் அறநெறி கருத்துகள் உண்மையிலேயே எங்கள் மாணவர்களுக்கு வரப்பிரசாதம் என்று ஆசிரியர்கள் நெகிழ்ச்சியுடன் சொன்னார்கள்.
நல்ல விஷயங்களை சொல்லித் தரும் இந்த முன்னெடுப்பு குழந்தைகளுக்காகவும் மாணவர்களுக்காகவும் எங்கள் காம்கேர் மூலம் நாங்கள் தயாரித்துள்ள பிரமாண்ட அனிமேஷன் பிராஜெக்ட்டுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறிய முயற்சிதான்.
ஆனால் இந்த சிறு முயற்சியே மாணவர்கள் மனதில் மாற்றங்களை கொண்டு வருகிறது என்பதை கேட்கும்போது அடையும் ஆனந்தத்துக்கு அளவே இல்லை.
தீய விஷயங்கள் இருந்து கொண்டேதான் இருக்கும். முற்றிலும் அழிப்பது கடினம்தான். நல்ல விஷயங்களை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே தீயவற்றின் வீச்சை கொஞ்சமாவது குறைக்க முடியும்.
எதிர்மறையை விட நேர்மறையின் சதவிகிதத்தை உயர்த்தினால் மட்டுமே எதிர்மறையினால் ஏற்படும் அழிவை முற்றிலும் நீக்க முடியாவிட்டாலும் குறைக்கவாவது முடியும்.
அதைத்தான் நாங்கள் ‘அறம் வளர்ப்போம்’ குழுவின் மூலம் செய்துகொண்டிருக்கிறோம்.
அறம் பெருகட்டும், நல்லவை பரவட்டும், அன்பு செழிக்கட்டும்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software