ஹலோ with காம்கேர் – 60
February 29, 2020
கேள்வி: திரைப்படங்கள் மாற்றங்களை ஏற்படுத்துமா?
திரைப்படங்கள் மாற்றத்தை உடனடியாக ஏற்படுத்துகிறதோ இல்லையோ நிச்சயமாக விழிப்புணர்வை உண்டாகும். விழிப்புணர்வுதானே மாற்றத்துக்கான முதல் படி.
அந்த வகை திரைப்படம்தான் திரெளபதி. நெருப்பாய் சீறும் தைரியமான கதாநாயகியின் பெயரும் இதுவே.
இளம் பெண்கள் நாடக காதல் மூலம் ஏமாற்றப்படுவதை தத்ரூபமாக காட்டியுள்ளார்கள். பெண்களை காதலிப்பதைப் போல ஏமாற்றுபவர்களை காட்டியிருக்கும் அதே நேரம் பெண்ணின் கவனத்துக்கு வராமலேயே அவர்களை பதிவுத் திருமணம் வரை கொண்டுவந்து சீரழிக்கும் பதவியும் பணமும் படைத்த அதிகாரவர்க்கத்தினர், இளைஞர்கள், போலி வக்கீல்கள், சார் பதிவாளர் அலுவலர்கள் என சங்கிலித்தொராய் செய்யும் கூட்டு சதியை அம்பலப்படுத்தியுள்ளார்கள்.
அப்பா அம்மாவுடன் சேர்ந்து பெண் குழந்தைகள் பார்க்க வேண்டிய, தவற விடக்கூடாத படம் இது. இளம் பெண்களை சீரழிக்க இளைஞர்கள் எப்படி ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதையும் சொல்லியிருப்பதால் இளம் பெண்கள் மட்டுமல்ல இளைஞர்களும் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்.
பெண்ணையும் பணத்தையும் பகட்டையும் இன்ன பிற செளகர்யங்களையும் காட்டி இளைஞர்களை தூண்டிலில் சிக்க வைத்து இளம் பெண்களை சீரழிக்கும் ப்ராஜெக்ட்டில் அவர்களை பகடைக் காய்களாக்கி தேவைப்பட்டால் அவர்களையும் கொலை செய்யும் அளவுக்கு செல்லும் ஆரோக்கியமில்லாத பாதுகாப்பற்ற இந்த சமுதாயத்தை தோலுரித்துக் காட்டியுள்ளது இந்த திரைப்படம்.
சீராட்டி பாராட்டி பொத்திப் பொத்தி வளர்க்கப்படும் பெண் குழந்தைகளை அவர்கள் பெற்றோர்களிடம் இருந்து போலி காதல் எனும் வலைவீசி பிரித்து செல்வதுடன் அவர்களுடன் வாழவும் செய்யாமல் தங்கள் சுய லாபத்துக்காக பயன்படுத்துவதை திரையில் பார்க்கும்போது எப்படித்தான் பெண் குழந்தைகளை பாதுகாப்பாய் வளர்ப்பது என்ற பதட்டம் ஒவ்வொரு பெற்றோருக்கும் வருவது நிச்சயம்.
தியேட்டரில் வசன உச்சரிப்பே காதில் விழாதவாறு படம் ஆரம்பித்தது முதல் முடிவு வரை கைத்தட்டலும் விசில் சப்தமும்தான். எனக்குத் தெரிந்து சென்னையில், இப்படி படம் முழுவதும் கைத்தட்டலுடன் ஆரவாரத்துடன் பார்வையாளர்கள் இருந்த ஒரே திரைப்படம் இதுதான் என நினைக்கிறேன்.
நாங்கள் பார்த்த ஷோவின் போது அந்த படத்தின் இசையமைப்பாளர் உட்பட அவர்கள் டீமில் சிலர் வந்திருந்தார்கள் என்பதை படம் முடிந்ததும் பார்வையாளர்கள் மியூசிக் சூப்பர், கதை சூப்பர் என ஆராவாரத்துடன் அவர்களை சூழ்ந்துகொண்டதில் இருந்தும் செல்ஃபி எடுத்துக்கொண்டதில் இருந்தும் தெரிந்துகொண்டோம்.
இதற்கு மேல் இந்தப் படத்தை பற்றி எழுதினால் படம் பார்க்கும் சுவாரஸ்யம் குறைந்துவிடும்.
சமுதாயத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்த திரைப்படத்தை தவறாமல் பாருங்கள்.
எனக்கு இந்தப் படம் பிடித்தமைக்கு இரண்டு காரணங்கள்.
ஒன்று. திரெளபதியின் கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தில் பொதிந்திருந்த நேர்மை, உண்மை, தைரியம்.
இரண்டாவது. தொழில்நுட்பம் இருபக்கமும் கூரான கத்திபோன்றது என்பதை சொல்லியிருக்கும் விதம். ஒருபக்கம் கதாநாயகி தன் கிராமத்தை பண்படுத்தவும் மேம்படுத்தவும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார். மறுபக்கம் அதே தொழில்நுட்பத்தின் உதவியுடன் பெண்களை சீரழிக்க டிஜிட்டல் டாக்குமெண்ட்டுகள் போலியாக தயாரிக்கப்படும் அவலத்தையும் படம்பிடித்திருக்கிறார்கள்.
உண்மை கதையை திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். மொத்தத்தில் சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் திரைப்படம்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software