ஹலோ with காம்கேர் – 63
March 3, 2020
கேள்வி: நமக்குக் கிடைத்த வாழ்க்கைக்கு நன்றியுடன் இருக்கிறோமா?
நம் எல்லோருக்கும் எல்லாமே இருந்தும் ஏதேனும் குறைகள் இருந்துகொண்டேதான் இருக்கும். அதற்குக் காரணம் நாம் நம்மைப் பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருப்பதுதான். பணம், பகட்டு, புகழ் இவற்றுக்கெல்லாம் மற்றவர்களுடன் தன்னிச்சையாக ஒப்பிடும் நம் மனசு நம் கஷ்டங்களை சோகங்களை துக்கங்களை பிறருடன் ஒப்பிடத் துணிவதில்லை.
காரணம் நம்மை விட செழிப்பாக வாழ்பவர்களைப் பார்த்து நமக்குத் தோன்றும் பொறாமையும், நம் கஷ்டங்கள்தான் பிறரைவிட பெரியது என்று நமக்குள் குமையும் கழிவிரக்கமும் ஒருவிதமான சுகத்தை அளிக்கிறதோ என்று தோன்றுவதுண்டு.
நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி சமீபத்தில் தன் நெடுந்தூர கார் பயணத்தின் போது டிரைவருக்கும் அவர் மகளுக்கும் நடந்த செல்போன் உரையாடல் குறித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.
டிரைவரது மகள் தன்னை காலை 5 மணிக்கு எழுப்பிவிடச் சொல்லியிருக்கிறார். ஆனால் டிரைவர் காலை 6 மணிக்குத்தான் போன் செய்து எழுப்புகிறார். அதற்குப் பின் அப்பாவுக்கும் மகளுக்கும் நடந்த உரையாடலை நெகிழ்ந்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி இடையிலேயே காரை நிறுத்தி வீடியோவில் தன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
டிரைவரின் மனைவி கடந்த டிசம்பர் மாதம் இறந்துவிட்டார். 12 வயதில் மகள், 7 வயதில் மகன். 12 வயது மகளை எழுப்பியபோது அவள் ‘என்னப்பா நான் 5 மணிக்கல்லவா எழுப்பச் சொன்னேன். நீங்கள் 6 மணிக்கு எழுப்புகிறீர்களே…’ என கடிந்துகொண்டாள். சில நொடிகளில் சிரித்தபடி ‘வருத்தப்படாதீர்கள் அப்பா, நானே காலையில் 5 மணிக்கு எழுந்து சமையல் செய்து குளித்து தம்பியையும் தயார் செய்துவிட்டேன். பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டிருக்கிறோம்…’ என சொன்னாள்.
12 வயது மகளின் பொறுப்புணர்வை நினைத்து மகிழ்வதா அல்லது பிள்ளைகளை படிக்க வைப்பதற்காக நேர்மையாக வேலைசெய்யும் டிரைவரின் கடமை உணர்ச்சியை நினைத்து நெகிழ்வதா என்ற கொண்டாட்ட மனநிலைக்குச் சென்று, ‘என்னை இந்த நிகழ்வு நெகிழச்செய்து விட்டது. நாம் ஒவ்வொருவரும் தடைகளைச் சந்திக்கிறோம். அதில் முடங்கி விடுகிறோம். ஆனால் நண்பர்களே, நிறையப் பேர் குறைந்த விஷயங்களை வைத்து வாழ்க்கையில் நிறைய சாதிக்கிறார்கள். நமக்குக் கிடைத்த வாழ்க்கையை நாம் எவ்வளவு நன்றியுடன் நினைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நான் எனக்கு நினைவுபடுத்தும்போது உங்களுக்கும் நினைவுபடுத்த வேண்டும் என்று விரும்பினேன்…’ என்று வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
ஏழ்மையில் வாடும் இந்த டிரைவரைப் போலவே வசதியானவர்கள் வாழ்க்கையிலும் சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
அமெரிக்காவில் சிங்கிள் பேரண்டாக தன் மகளையும் மகனையும் வளர்த்துவரும் ஒரு பெண் தொழில்நுட்பத்துறையில் பணிபுரிகிறார். மகளுக்கு 19 வயது. மகனுக்கு 14 வயது.
பணி நிமித்தம் அவ்வப்பொழுது அமெரிக்காவிலேயே சில இடங்களுக்கு ஓரிரு நாட்கள் செல்ல வேண்டியிருக்குமாம். அப்போதெல்லாம் அவர் காலையில் மகனை எழுப்பி விடுவாராம். மகன் எழுந்து தன் அக்காவுக்கும் சேர்த்து காலை டிபன் மதியம் ஏதேனும் ஒரு கலந்த சாதம் தயார் செய்துகொண்டு பள்ளிக்குக் கிளம்பிச் செல்வானாம்.
மகள்தான் மூத்தவள். அவளுக்கு சமையலில் ஈடுபாடு இல்லை. அம்மா ஊரில் இல்லாத நாட்களில் மகனின் சமையல்தானாம் வீட்டில். கடைக்குச் செல்வது பொருட்கள் வாங்குவதெல்லாம் மகளின் வேலை. அவரவர்கள் ஈடுபாட்டுக்கு ஏற்ப தங்கள் வேலைகளை அவர்களாகவே பிரித்து வைத்திருக்கிறார்கள்.
மகள் காரில் தம்பியை பள்ளியில் இறக்கிவிட்டு கல்லூரிக்குச் செல்வாளாம். இரவு சாப்பாட்டுக்கு காலையில் செய்த டிபன் மீதம் இருக்குமாம். அதை சாப்பிட்டு பால் குடித்துவிட்டு தூங்கி விடுவார்களாம்.
முந்தைய நிகழ்வில் ஏழ்மையிலும் பொறுப்பாக இயங்கும் குழந்தைகள், பிந்தைய நிகழ்வில் வசதியிலும் பொறுப்பாக இயங்கும் குழந்தைகள்.
வாழ்க்கை நமக்கு என்ன கொடுக்கிறதோ அதற்கு நாம் நன்றியுடன் இருக்க வேண்டும் என்பதை இந்த இரண்டு சூழலும் சொல்லி செல்கின்றனவே!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
இன்றைய பதிவில் குறிப்பிடுள்ள நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தியின் வீடியோ பதிவுக்கான லிங்க்: https://www.facebook.com/ashishvidyaarthi/videos/10159329526142738/