ஹலோ with காம்கேர் – 64
March 4, 2020
கேள்வி: தன்னம்பிக்கை என்பது ஐஸ்கிரீம் டாப்பிங் போல. எப்படி தெரியுமா?
பணக்காரர்கள், ஏழைகள், படித்தவர்கள், படிக்காதவர்கள், நிறைய நண்பர்களை வைத்திருப்பவர்கள், தேர்ந்தெடுத்த சிலரை மட்டும் நட்பில் வைத்திருப்பவர்கள், வெளிநாட்டில் உள்ளவர்கள், உள்நாட்டில் இருப்பவர்கள் இப்படி யாராக இருந்தாலும் கஷ்டங்கள், வருத்தங்கள், துக்கங்கள், தோல்விகள் அத்தனையும் எல்லோருக்கும் பொதுவானதே. அதுபோலவே, இவற்றால் உண்டாகும் வேதனைகளும் வலிகளும் அவமானங்களும் ஓரவஞ்சனையின்றி அத்தனைபேருக்கும் பொதுவானதே.
இவற்றை எல்லாம் தாங்கிக்கொண்டு எதிர்நீச்சல் போட்டு வாழ்பவர்கள் மனவலிமை உள்ளவர்கள், இல்லாதவர்கள் தடுமாறுகிறார்கள்.
திருடுபவர்களும், கொலை செய்பவர்களும், பெண்களை சீரழிப்பவர்களும், குழந்தைகளிடம் கூட காமத்தை பார்க்கும் அசிங்கமான மனோநிலை உள்ளவர்களுமே வாழ வேண்டும் என ஆசைப்பட்டு எப்படியாவது தண்டனையில் இருந்து தப்ப வேண்டும் என துடித்து முட்டி மோதி முயற்சி செய்யும்போது வாழ்க்கையில் தன்னுடைய திறமையினால் தன்னுடைய உழைப்பினால் தன்னுடைய பெருமுயற்சியினால் முன்னேறிய பலர் சட்டென வாழ்க்கையை முடித்துக்கொள்வதை காணும்போது வேதனை மட்டுமல்ல மனிதர்களின் மனநிலை குறித்த பயமும் உண்டாகிறது.
தன்னம்பிக்கை குறித்து அதிகம் பேசுபவர்களே தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்ற கண்ணோட்டத்தில் ஒருசில பதிவுகளை நேற்று படித்தேன்.
தன்னம்பிக்கை என்பது ஒரு குணம், மனோபாவம். மென்மையானவன், முரடன், சோம்பேறி, சுறுசுறுப்பானவன் என ஒவ்வொருவருக்கும் பொதுவான குணாதிசயங்கள் இருப்பதைப்போல தன்னம்பிக்கை என்பது நம் பொதுவான குணங்களுக்கு மேல் டாப்பிங் செய்யப்பட்ட ஒரு மனோபாவம்.
ஐஸ்கிரீமில் டாப்பிங் செய்யப்பட்ட முந்திரி, பிஸ்த்தா, வேர்கடலை, பழங்கள்போல என்று வைத்துக்கொள்ளுங்களேன். கோப்பையில் உள்ள கடைசி துளி ஐஸ்கிரீம் வரை டாப்பிங் செய்யப்பட்டதை இணைத்து சாப்பிடும்போதுதான் ஐஸ்கிரீம் கூட சுவைக்கும். அவசரம் அவசரமாக டாப்பிங்கை மட்டும் அள்ளி எடுத்து சாப்பிட்டுவிட்டு ஐஸ்கிரீம் சுவையாக இல்லை என்று சொல்ல முடியுமா?
அதுபோலதான் வாழ்க்கை என்ற நீண்ட பயணத்தில் ஒவ்வொரு மணித்துளியிலும் தன்னம்பிக்கையை இணைத்துக்கொண்டு வாழப்பழக வேண்டும். அப்படி செய்யாமல் தன்னம்பிக்கையை ஏதோ நமக்கான கிரீடம் போல கருதி தேவையானபோது எடுத்து வைத்துக் கொண்டு தேவையில்லாதபோது கழற்றி வைத்துவிடும் பொருளாகப் பயன்படுத்தினால் அதற்கு தன்னம்பிக்கை என்றே அர்த்தம் அல்ல. மீட்டிங் போது நாம் அணிந்துகொள்ளும் கோட்போல, விழா காலங்களில் அணிந்துக்கொள்ளும் பட்டு புடவை வேட்டி போல நிகழ்ச்சி முடிந்ததும் கழற்றி வைத்துவிடும் ஒரு வஸ்த்திரம். அவ்வளவே.
வாழ்க்கை மீதான பிடிப்புக்கு தன்னம்பிக்கை மிக அவசியம். அடுத்த வேளை சாப்பாடு கிடைக்குமா கிடைக்காதா என்றே தெரியாமல் ஏழ்மையில் வாழ்ந்து வருபவர்களை உற்று நோக்குங்கள். அவர்களால் என்ன முடிகிறதோ அதை செய்கிறார்கள். அன்றன்றைய மகிழ்ச்சி துக்கம் சோகம் இவற்றை அன்றன்றைய தினம் அவர்களின் இரவு உறக்கத்தில் கரைக்கிறார்கள். இவர்களுக்கு தங்களை இயக்குவது தன்னம்பிக்கை என்றெல்லாம் தெரியாது. விதிக்கப்பட்ட வாழ்க்கை. வாழ வேண்டும். இது மட்டுமே அவர்களுக்கு தெரியும்.
இப்படி வாழும் பக்குவம் வருவது கடினம்தான். இந்த அளவுக்கு பற்றற்ற மனநிலைக்கு வர முடியாவிட்டாலும் கொஞ்சம் மெனக்கெட்டு ஐஸ்கிரீம் டாப்பிங் போல தன்னம்பிக்கையை நம் ஒவ்வொரு செயலின் மீதும் தூவிக்கொள்வதன் மூலம் வாழ்க்கையை வாழ்ந்துவிடலாம் என்றுதான் நினைக்கிறேன்.
ஐஸ்கிரீம் டாப்பிங்கை தனியே சாப்பிடுகிறீர்களா அல்லது கடைசி தூளி ஐஸ்கிரீம் வரை டாப்பிங்கை சேர்த்து சுவைத்து சாப்பிடுகிறீர்களா என்பதில்தான் உங்கள் தன்னம்பிக்கை வெளிப்படும்.
நான் கடைசி துளி ஐஸ்கிரீம் வரை டாப்பிங்கை சேர்த்துத்தான் சாப்பிடுவேன். அப்போ நீங்க?
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software