ஹலோ with காம்கேர் – 65
March 5, 2020
கேள்வி: யார் தைரியமானவர்?
மனவளர்ச்சிக் குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான வெப்டிஸைனிங் போட்டி முடிந்து விட்டதால் அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு அவள் அம்மா என் அலுவலகம் வந்திருந்தார். அந்த பெண் தலையை ஆட்டியபடி என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டு கைகளை தொடையின் மீது வைத்து தடவி தடவி விட்டுக் கொண்டிருந்தாள். போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றிருக்கிறாள் என்றபடி அவள் அம்மா சான்றிதழை என்னிடம் கொடுத்தார். வெப்டிஸைனிங் போட்டிக்காக நான்தான் தனிப்பட்ட முறையில் அப்பெண்ணுக்கு பயிற்சி கொடுத்திருந்தேன். அவள் மூன்றாம் பரிசு பெற்றது நான் முதல் பரிசு பெற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது.
அந்த பெண் சுண்டி விட்டால் இரத்தம் தெறிக்கின்ற கலரில் இருப்பாள். தலைமுடி சுருள் சுருளாய், பெரிய அகன்ற கண்கள், சிவந்த சொப்பு வாய். கவர்ந்திழுக்கும் பதின்ம வயது இளமை. இரட்டைப் பின்னலில் பள்ளிச் சீருடையில் பார்த்தால் அம்சமாக இருக்கும் அவளைப் பார்த்தால், அவள் பிரச்சனை குறித்து யாருக்குமே தெரியாது.
அந்தப் பெண்ணை, சிறுவயதில் இருந்தே பார்த்து வருகிறேன். ஆறாவது, ஏழாவது படிக்கும் வரை கையைப் பிடித்து அழைத்துச் செல்லும் அவள் அம்மா, அதன் பிறகு தனியாகவே பள்ளிக்குச் சென்று வர பழக்கி விட்டார்.
தனியாக எப்படி சமாளிக்கிறாள் என்று கேட்ட போது, ‘ராஜியை என்னவென்று நினைத்தீர்கள்…ஒரு பையன் இவளிடம் வாலாட்ட முடியாது… முறைத்துப் பார்த்தே மிரட்டுகிறாள். சென்ற வாரம் கமெண்ட் அடித்த ஒரு பையனின் சைக்கிளை பிடித்திழுத்து ஓங்கி ஒரு அறை விட்டிருக்கிறாள்…அதன் பிறகு யாருமே இவளிடம் வாலாட்டுவதில்லை…’. ஆமாம். அந்த அம்மா சொன்னது உண்மைதான். அந்தப் பெண்ணின் கண்களில் ஒரு சக்தி இருப்பதை நான் கவனித்திருக்கிறேன். அவள் கோபத்தில் கொஞ்சம் ஆக்ரோஷமாகப் பார்த்தால் ஓங்கியடிக்கின்ற வேகத்துடன் சுருக்கென ஒரு பயத்தைக் கொடுக்கும் உணர்வு உண்டாகும். மற்ற மாணவிகளை விட அவள் தன்னை நன்றாகவே கவனித்துக் கொள்கிறாள். இவளோடு நடந்து வரும் மற்ற மாணவிகளுக்கும் பாதுகாப்பு கொடுக்கிறாள். ஆமாம். அவளிடம் அடி வாங்குவதற்கு பயந்து கொண்டு பையன்கள் யாருமே அவளிடம் வாலாட்டுவதில்லையாம்.
பயம், தயக்கம் எதுவுமே அவளிடம் நான் பார்த்ததில்லை. குதூகலம், கொண்டாட்டம், சந்தோஷம் இவற்றுடன் அவ்வப்போது கொஞ்சம் கோபம், சிணுங்கல். சுயத்தைப் பாதுகாக்கும் சூழல் ஏற்படும் போது மட்டும் எங்கிருந்து அவளிடம் அத்தனை ஆக்ரோஷம் வருமோ தெரியாது; கோபத்தில் உதடு துடிக்கும், கண்கள் சிவப்பாகி விடும், கைகள் நடுங்கும். அசாதரண நடை நடக்கத் தொடங்குவாள். குளறி குளறி திட்டித் தீர்ப்பாள். ‘த்தூ’ என காரி துப்புவாள். அதையும் மீறி வாலாட்டினால் முதுகில், கன்னத்தில், காலில் என்று எங்கு தோதாக இடம் கிடைக்கிறதோ அங்கு ஒரே அடிதான். அடி வாங்கியவன் அவமானப்பட்டு திரும்பிக் கூட பார்க்காமல், அடி வாங்கியது போல காட்டிக் கொள்ளாமல் நாசூக்காக ஓடி விடுவான். நானே ஒருமுறை என் கண்ணால் இந்த காட்சியைப் பார்த்திருக்கிறேன். இந்த தைரியம் சாதாரணப் பெண்களிடம் இயல்பாக வருவதில்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய விஷயம்.
உண்மைதான். சாதாரணமாக எந்தக் குறையும் இன்றி இருக்கும் நாம்தான், பொது இடங்களில், பிரயாணங்களில், கடைகளில் இப்படி பலர் கூடுகின்ற இடங்களில் நமக்கு நடக்கின்ற அநீதிகளுக்கு எதிர்குரல் கொடுக்க பயந்து கொண்டு நாகரிகமாய் இருப்பதாய் காட்டிக்கொண்டு வாய் மூடி உணர்வுகளுக்கும் முகமூடி போட்டுக் கொண்டு நாசூக்காக(!) வாழ்கிறோம்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software