ஹலோ with காம்கேர் – 66
March 6, 2020
கேள்வி: நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் பெண்களுக்கு மட்டும் போதாது. ஏன் தெரியுமா?
எல்லா விஷயங்களுக்கும் புதுமை புரட்சி போராட்டம் என்று உணர்ச்சி கொந்தளிப்பில் நாம் நம் உடலையும் மனதையும் கெடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. சில விஷயங்களுக்கு நாம் செய்கின்ற சின்ன சின்ன செயல்கள், பேசுகின்ற குட்டி குட்டி வாக்கியங்கள்கூட மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஒரு நிமிட வீடியோ ஒன்று பார்த்தேன். பதினைந்து பதினாறு வயதிருக்கும் ஒரு பள்ளி மாணவி பஸ்ஸின் கடைசி சீட்டில் ஜன்னல் ஓரமாக அமர்ந்து பயணம் செய்கிறாள். கொஞ்சம் இடைவெளி விட்டு அவளைவிட ஓரிரண்டு வயது அதிகமுள்ள இளைஞன் அமர்ந்து அந்த பெண்ணை பார்த்து மெல்லியதாக விசில் அடித்து அவளை சைட் அடித்தபடி வருகிறான்.
அந்த மாணவியின் முகத்தில் பயம். ஒரு ஸ்டாப்பில் சுமார் ஐம்பது வயதுள்ள ஒரு பெண்மணி ஏறுகிறார். எதேச்சையாக அந்த இளைஞனின் செய்கையை பார்க்கிறார். அவர் நின்று கொண்டிருக்கும் இடத்தின் அருகே சீட் காலியாக இருந்தாலும் அதில் அமராமல் அந்த இளைஞனிடம் வந்து ‘கொஞ்சம் இடம் கொடுக்கிறாயா?’ என கேட்டு அந்த மாணவியின் அருகே அமர்ந்து கொள்கிறார். மாணவி நன்றியுடன் அவரை பார்க்க, அந்த இளைஞனின் முகத்தை சங்கடமாக வைத்துக்கொண்டு நகர்ந்து அமர்கிறான்.
‘எல்லா குழந்தைகளையும் உங்கள் குழந்தைகளாக பாருங்கள்’ என்ற வசனத்துடன் அந்த வீடியோ நிறைவடைந்தது.
மற்றொரு வீடியோ. ஒரு பஸ் ஸ்டாப்பில் ஓர் இளம் பெண் அமர்ந்திருக்கிறாள். அவள் அருகே அமர்ந்திருந்த இரண்டு இளைஞர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவளை நோக்கி நகர்ந்து அமர்கிறார்கள். பஸ் ஸ்டாப்பில் யாருமே இதை கண்டுகொள்ளவில்லை.
அப்போது இரண்டு பள்ளி மாணவர்கள் வருகிறார்கள். அந்த இளைஞர்களின் செய்கைகளை கவனிக்கிறார்கள். ‘அண்ணா நீங்கள் செல்ல வேண்டிய பஸ் இந்த திசையில் வருகிறது பாருங்கள்…’ என அந்த இளம் பெண் அமர்ந்திருக்கும் திசைக்கு எதிர் திசையைக் காட்டுகிறார்கள்.
அந்த இளைஞர்களுக்கு தங்கள் செய்கையில் கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் அவமானம். அந்த இடத்தைவிட்டு நகர்கிறார்கள்.
முந்தைய வீடியோவில் பஸ்ஸில் ஏறிய பெண்மணியின் சமயோஜிதமான செயல்பாடு, பிந்தைய வீடியோவில் பள்ளி மாணவர்கள் புத்திசாலித்தனமாக சொல்லிய ஒரு சின்ன வாக்கியம் எத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது பாருங்கள்.
இப்படித்தான் சின்ன சின்ன தவறுகளை அவ்வப்பொழுது சுட்டிக் காண்பித்தாலேபோதும். தவறுகளே நடக்காது என சொல்லவில்லை. அவை குறைய வாய்ப்புண்டு என சொல்கிறேன்.
இன்றைய இளைஞர்கள் பலருக்கு அவர்கள் செய்கின்ற செயல்களில் உள்ள சின்ன சின்ன தவறுகளை சுட்டிக் காட்டக் கூட ஆட்கள் இல்லை. விளைவு அவர்களுடன் அவர்கள் தெரிந்தே செய்கின்ற தவறுகளும், அறியாமல் செய்கின்ற தவறுகளும் பூதாகரமாக வளர்ந்து நிற்கும் அவலம்.
அவரவர்களுக்கு அவரவர் வாழ்க்கை, சந்தோஷம், பிரச்சனை, வேலை, ஓட்டம். பிறரை நிமிர்ந்து பார்த்தால்தானே என்ன நடந்துகொண்டிருக்கிறது, அதுபோன்ற சூழல் நம் வீட்டில் உள்ளவர்களுக்கும் ஏற்படும் என்கின்ற உணர்வு ஏற்படும்.
நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் பாரதியாரின் கனவுப் பெண்களுக்கு மட்டும் இருந்தால் போதாது. இன்றைய சூழலில் அவர்களைச் சுற்றி இருப்பவர்களும் அவசியம்.
ஆண்களும் நிமிர்ந்த நன்னடையுடனும், நேர்கொண்ட பார்வையுடனும் வளைய வந்தால்தான் அவர்களும் ஒழுக்கமாக இருக்க முடியும். இந்த சமுதாயத்தில் பெண்களுடன் இணைந்து பயணிக்கும் ஒவ்வொருவரும் நிமிர்ந்த நன்னடையுடனும், நேர்கொண்ட பார்வையுடனும் இருந்தால் மட்டுமே தவறுகளை சுட்டிக் காட்டும் தைரியத்துடன் செயல்பட முடியும்.
என்னைப் பொருந்தவரை நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் நம் ஒவ்வொருவருக்கும் அவசியம் என்பேன்.
என்ன சரிதானே?
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software