ஹலோ with காம்கேர் – 67
March 7, 2020
கேள்வி: அறம் என்பது காசு பணம் கொடுத்து உதவுவது மட்டும்தானா?
ஒரு முறை சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தைச் சார்ந்த மாணவர்கள் இல்லத்தில் தங்கி படிக்கின்ற சிறுவர்களுக்கு எங்கள் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை சார்பில் சில போட்டிகள் வைத்து, கலைநிகழ்ச்சிகள் நடத்தினோம். அப்போது சிறப்பு விருந்தினர்கள் பேசிய பிறகு, நான் அந்த மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உரை நிகழ்த்தினேன்.
‘கணிதத்தைச் சொல்லி தந்து புரிய வைக்கலாம், ஆங்கிலத்தைக் கற்றுத் தந்து பழக்கலாம். ஆனால் திறமையையும், கற்பனையையும் கற்றுத் தரவோ, பழக்கவோ இயலாது. ஒவ்வொருவரிடமும் ஏதேனும் ஒரு திறமை பொதிந்திருக்கும். அவரவர்களுக்குள் புதைந்து கிடக்கும் திறமையை அவரவர்கள் தான் வெளியில் கொண்டு வர வேண்டும். படிப்புடன் சேர்த்து உங்கள் திறமையும் வளர்த்து கொண்டே வந்தால் பொழுதுபோக்காக செய்கின்ற விஷயங்களையே பணியாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.’
இது தான் என் உரையின் சாராம்சம். இது நடந்து ஒரு சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த மடத்துக்கு சுவாமிஜியை சந்தித்துப் பேசுவதற்காகச் சென்றிருந்தேன். அப்போது அரை டிராயர் போட்டுக் கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் என்னையே பார்த்துக் கொண்டு தயங்கித் தயங்கி நின்று கொண்டிருந்தனர். நான் அவர்களை அழைத்தேன். ஒரு மாணவன் மட்டும் அருகில் வந்தான். ‘அக்கா…அவன் கதை எழுதியிருக்கான்…உங்க கிட்ட காண்பிக்கணுமாம்…’ என்று பின்னால் சற்று தள்ளி நின்று கொண்டிருந்த தன் நண்பனை திரும்பி திரும்பிப் பார்த்தபடி சொன்னான்.
நான் ஆச்சர்யப் பார்வையை பின்னால் நின்று கொண்டிருந்த அந்த மாணவன் மீது செலுத்த, அவன் கொஞ்சம் தைரியமாய் என்னருகில் வந்தான். ‘எங்கே காட்டு பார்க்கலாம்’ என்றது தான் தாமதம், ‘ஒரு நிமிஷங்கா…’ என்றபடி துள்ளி ஓடினான்.
பிரவுன் கலர் அட்டைப் போட்ட நோட்டை எடுத்து வந்து என் கைகளில் கொடுத்தான். நோட்டின் முதல் பக்கத்தில் தனசேகர் என்று தன் பெயரை எழுதியிருந்தான். அந்த நோட்டு முழுக்க இங்க் பேனாவினால் எழுதிய எழுத்துக்கள். ஒரு நெடுங்கதையை 30 பக்கத்துக்கு மேல் எழுதியிருந்தான். ஆங்காங்கே பொருத்தமான படங்களையும் தானே வரைந்திருந்தான். கடைசி பக்கத்தில் Bye என்று எழுத நினைத்திருக்கிறான். Boy என எழுதியுள்ளான். தமிழும் ஆங்கிலத்திலும் எப்போது வேண்டுமானாலும் புலமை பெற்றுக்கொள்ளலாம். கற்பனையை படைப்பாக மாற்ற வேண்டும் என்கின்ற உந்துதல் 12, 13 வயதுக்குள் உருவாகி எழுத ஆரம்பித்திருப்பதுதான் ஆச்சர்யம்.
நான் நிகழ்ச்சியில் அந்த மாணவர்களுக்காக உரைநிகழ்த்திய போது, கூறிய அறிவுரையின்படி தினமும் எழுதுவதாகவும், எதிர்காலத்தில் பெரிய எழுத்தாளராக வேண்டும் என்பதும்தான் தன் ஆசை எனவும் வேகமாக பேசி முடித்தான். என்னுடன் பேசியதினால் ஏற்பட்ட பேரானந்தத்தினால் கண்களிலும், பேச்சிலும் படபடப்பு.
அவனைப் பற்றிய செய்திகளை சேகரித்தேன். அப்பா குடிகாரர், ஒருநாள் அம்மாவை குடித்து விட்டு வந்து அடித்த போது தவறுதலாக தரையில் விழுந்து பின் மண்டையில் அடிபட்டு இறந்து போக, உறவினர்களின் உதவியுடன் அந்த மடத்து இல்லத்தில் சேர்ந்திருக்கிறான். உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லை.
அடுத்த வருட எங்கள் அறக்கட்டளை விழாவில் தனசேகருக்கு ஸ்ரீபத்மகிருஷ் விருது கொடுத்து கவுரவித்தோம். அதைத் தான் உடனடியாக என்னால் செய்ய முடிந்தது.
போகிற போக்கில் நாம் தூவும் சிறு விதைகள் எங்கேனும் என்றேனும் விருட்சமாகும். அறம் என்பது காசோ பணமோ கொடுத்து உதவுவது மட்டுமல்ல, வாழ்க்கை மீதான நம்பிக்கையை விதைப்பதுதான் ஆகச் சிறந்த அறம்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software