ஹலோ with காம்கேர் – 68
March 8, 2020
கேள்வி: சாதனைப் பெண்களுக்கான இலக்கணம் என்ன?
ஐடிதுறையில் என்னை நன்கறிந்த ஒருவர் சென்ற வாரம் போன் செய்து தன்னை அறிமுகம் செய்துகொண்டு பேசினார். முதன்முறை பேசுகிறார் என்பதால் எங்கள் நிறுவனம் தயாரித்துள்ள சாஃப்ட்வேர்கள், அனிமேஷன்கள் மற்றும் வெளியிட்டுள்ள புத்தகங்கள் என்று என்னைப் பற்றிய புள்ளிவிவரங்களுடன் பாராட்டினார்.
கடைசியாய், ‘எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு பெண்ணாய் இருந்துகொண்டு இத்தனை சாதித்ததுதான் பெரிய விஷயம் மேடம்’ என்று சொன்னார்.
இன்றல்ல நேற்றல்ல என்றுமே ‘ஒரு பெண்ணாய் இருந்துகொண்டு…’ என்ற வாசகம் எனக்கு மிகவும் அயற்சியை ஏற்படுத்தும்.
அது என்ன ‘ஒரு பெண்ணாய் இருந்துகொண்டு…’, அவள் என்ன ஆடா மாடா அவளும் மனுஷிதானே. ஆண் போல பெண்ணும் ஒரு சக ஜீவன்தானே.
இப்படி பேசுபவர்கள் முன்னேறிய பெண்களை அதிகம் பார்த்திருக்க மாட்டார்களோ என எண்ணுவதுண்டு. எல்லா காலங்களிலும் சாதனை பெண்கள் இருக்கத்தான் செய்திருக்கிறார்கள்.
சாதனை என்பது தொலைக்காட்சியில் அடிக்கடி தோன்றுவதும் பத்திரிகையில் எழுதுவதும் பேட்டி கொடுப்பதும்தான் என்றெண்ணியிருப்பவர்களுக்கு பெண்களின் உள்வலிமை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உள்வலிமை அதிகம் பெற்ற பெண்கள் அனைவருமே சாதனைப் பெண்கள்தான்.
என் கொள்ளு பாட்டி, என் பாட்டி, என் அம்மா, நான், என் தங்கை இப்படி என்னைச் சுற்றியுள்ள பெண்கள் அனைவருமே அவரவர்கள் வாழ்க்கையில் சுயமாக முன்னேறியவர்களே.
என் அம்மாவின் அப்பாவின் அம்மா, அம்மாவின் பாட்டி, என் கொள்ளு பாட்டி இன்றிருந்தால் 130 வயதிருக்கும். பாண்டிசேரியில் வாழ்ந்து வந்தவருக்கு தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பிரன்ச், தெலுங்கு என ஐந்து மொழிகளில் புலமை உண்டு. பரோபகாரி. பசி என்ற சொல் காதில் கேட்டாலே அவர்களுக்கு வயிறார சாப்பாடு போட்டு அனுப்புவாராம். அவருடைய புடவைகளும் தாத்தாவின் வேட்டிகளும், துண்டுகளும் திடீர் திடீர் என காணாமல் போகுமாம். வறுமையில் வாடுபவர்களைக் கண்டால் அவர்களுக்கு தூக்கிக்கொடுத்து விடுவாராம். எராளமான புத்தகங்கள் படிப்பாராம். என் அம்மாவின் திருமணத்துக்கு புத்தகங்களையே பரிசாகக் கொடுத்தாராம்.
என் அப்பாவின் அம்மா, என் பாட்டி வைராக்கியம் மிக்கவர். என் அப்பா 12 வயதில் எனக்கு சைக்கிள் கற்றுக்கொடுத்தபோது எனக்கு சைக்கிள் பழக வேண்டும் என்பதால் நானும் அப்பாவும் தனித்தனி சைக்கிளில் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்துக்கு பாட்டி வீட்டுக்குச் சென்றோம். அப்போது என் பாட்டி ‘நாலு பேர் கண்ணு படப்போறது… இனிமே சாயங்கால வேளையில் இப்படி சைக்கிளில் கூட்டிண்டு வராதே… பகலில் அழைத்துக்கொண்டு வா’ எனச் சொல்லி எனக்கு திருஷ்டி சுத்திப் போட்டார். பெண் குழந்தைகளுக்கு சைக்கிள் எதற்கு என்று சொல்லாமல் உண்மையில் என் நலன் கருதி பாசத்தில் அறிவுரை செய்த பாட்டியை மறக்க முடியுமா?
என் அம்மா 40 வருடகாலம் தொலைபேசி துறையில் 24 மணிநேர சுழற்சிப் பணியில் இரவு பகல் பார்க்காமல் பணிக்குச் சென்று ஓய்வு பெற்றவர். தைரியம், உழைப்பு, தன்னம்பிக்கை, புத்திசாலித்தனம் இவற்றின் மொத்த உருவம்.
என் உடன்பிறந்த சகோதரி, பரபரப்பாக சிந்தனை செய்யும் துடிப்புமிக்கவர். அதீத சுறுசுறுப்பு. அமெரிக்காவில் வாழ்ந்தாலும் சாஃட்வேர் துறையில் உயரிய பதவியில் இருந்தாலும் தன் கொள்கைகளை இம்மியும் விட்டுவிடாமல் வாழ்ந்துவரும் பழமையை விட்டுக்கொடுக்காத புதுமைப் பெண். தன் குழந்தைகளை இந்திய உணர்வுகளுடன் வளர்த்து வரும் மெகா தைரியசாலி.
இந்தச் சூழலில் நானும்.
தாம் சுயமாக சிந்திப்பதற்கும் தம் அடுத்த சந்ததியினரையும் சுயமாக சிந்திக்கும் திறனுடன் வளர்ப்பதற்கும் ஆற்றல்கொண்ட உள்வலிமை கொண்ட பெண்கள் அனைவருமே சாதனைப் பெண்கள்தான்.குறிப்பாக நாம் நாமாக வாழும் வரம் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். நான் அந்த வரம் பெற்று வந்தவள்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software