ஹலோ with காம்கேர் – 70
March 10, 2020
கேள்வி: யார் மிகவும் சந்தோஷமானவர்கள்?
நாம் ஒவ்வொருவரும் சந்தோஷமாக இருக்க எத்தனையோ காரணிகள் இருந்தாலும் அடிப்படையாக சில விஷயங்கள் இருந்தால் ‘நிம்மதியுடன்’ கூடிய மனமகிழ்ச்சியுடன் வாழ முடியும்.
கடன் இல்லாமல் வாழ்க்கை நடத்துபவர்கள்.
வேலைக்காக குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாதவர்கள்.
ஒரு நாளில் ஒரு வேளையாவது வீட்டுச் சாப்பாட்டை சாப்பிடும் பாக்கியம் பெற்ற புண்ணியவான்கள்.
தன்னம்பிக்கையுடன் தொழில்துறையில் உச்சம் பெற்றவர்கள்கூட தற்கொலை முடிவுக்குச் செல்வதற்கு முதன்மையான காரணம் கடன். கடன் வாங்காமல் என் எல்லைக்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே செயல்படுத்தி வருவதால் தகவல் தொழில்நுட்ப தொழில்துறையில் தொய்வில்லாமல் செல்ல முடிகிறது.
வேலைக்காக மனைவி குழந்தைகளை தனியே விட்டு தாங்கள் வெளிநாடுகளுக்கு சென்று வருடம் ஒரு முறையோ இரு வருடங்களுக்கு ஒருமுறையோ தாயகம் திரும்புபவர்களை பார்த்தால் இனம் புரியாத சோகம் ஒட்டிக்கொள்ளும். நான் கல்லூரி படித்துக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் என்னுடன் படித்த பல மாணவிகளின் அப்பா வெளிநாட்டில் பணி புரிந்துகொண்டிருந்தவர்களே. அந்த மாணவிகள் மீது எனக்கு எப்போதுமே ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கும்.
எங்கள் வீட்டில் பெரும்பாலும் ஹோட்டலில் சாப்பிடுவதை தவிர்த்துவிடுவோம். திருமணம், சீமந்தம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்குச் சென்றாலும் அன்று இரவு வீட்டில் தயிர் சாதம் மட்டும் சாப்பிடும்போது தேவாமிர்தமாக உணர்வோம்.
மகாபாரதத்தில் தர்மர் யார் மிகவும் சந்தோஷமானவர்கள் என்பதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
பாண்டவர்கள் தங்கள் 12 ஆண்டுகால வனவாசம் முடிந்து, ஓராண்டு கால மறைந்த வாசம் செய்து கொண்டிருந்தபோது ஒரு நாள் எல்லோருக்கும் தாகம் ஏற்பட, தருமர் நகுலனை அருகில் ஏதேனும் நீர்நிலை தென்படுகிறதா என்பதைப் பார்த்து வரும்படி கூறினார்.
அருகில் ஒரு பொய்கை தென்பட தண்ணீர் அருந்த முற்பட்ட நகுலனை ‘என் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு நீர் அருந்து’ என்ற அசரீரி தடுத்தது. நகுலன் அதை அலட்சியம் செய்து நீர் அருந்த முற்பட அப்படியே மயங்கி சாய்கிறான்.
நகுலனை தேடி சகாதேவன் செல்ல அவனுக்கும் அந்தப் பொய்கையில் அதே கதிதான். சகாதேவனை தேடி அர்ஜுனன், பீமன் செல்ல அவர்களுக்கும் அதே கதிதான்.
இறுதியில் தர்மர் செல்ல அவருக்கும் அந்த அசரீரி கேட்க, கேள்விகளுக்கு பதில் அளிக்க ஒப்புக்கொள்கிறார். அசரீரி கேட்ட சரமாரியான கேள்விகளுக்கு அசராமல் பதில் அளித்துக்கொண்டே வருகிறார் தருமர்.
அசரீரி கேட்ட கேள்விகளில் ஒரு முக்கியமான கேள்வி, எவன் சந்தோஷத்தை அடைகிறான்?
அதற்கு தருமர், ‘கடனில்லாதனாகவும், பிழைப்பதற்காக ஊரை விட்டு ஊர் செல்ல வேண்டிய நிலையில் இல்லாதவனாகவும், தனக்கு வேண்டிய சிறிதளவு உணவாகிலும் வீட்டிலேயே கிடைக்கப் பெறுகிறவனாகவும் எவன் இருக்கிறானோ அவன் சந்தோஷமடைகிறான்.’ என பதிலளிக்கிறார்.
அசரீரி மனம் மகிழ்ந்து ‘நான் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் அறிவார்த்தமாக பதில் அளித்துள்ளாய். உன் சகோதர்களில் ஒரே ஒருவனை மட்டும் உயிர்ப்பிக்கிறேன். யார் வேண்டும் என சொல்’ என கேட்க கொஞ்சமும் யோசிக்காமல் தர்மர் நகுலனை உயிர்பித்துத் தருமாறு கேட்கிறார்.
அசரீரிக்கு ஆச்சர்யம். ‘ஏன் குறிப்பாக நகுலனை கேட்கிறாய்?’ என கேட்கிறது.
‘என் தந்தைக்கு இரண்டு மனைவியர். குந்தியின் மகனான நான் உயிருடன் இருக்கிறேன். என் சிறிய அன்னை மாத்ரியின் பிள்ளைகளில் ஒருவனான நகுலன் உயிர்பெற்று எழுவதே நியாயம். அதுவே தர்மம்’என்கிறார் தருமர்.
அசரீரியாக தருமரின் தர்ம சிந்தனையை சோதித்தது வேறு யாருமல்ல. யட்சன். யட்சன் தரும தேவன். தர்மரின் தந்தை.
தருமரின் பாரபட்சமற்ற தர்மசிந்தனையில் மகிழ்ந்து நகுலனுடன் சேர்த்து அனைவரையும் உயிர்பித்துத் தருகிறார் யட்சன்.
இந்த நிகழ்வில் ‘யார் மிகவும் சந்தோஷமானவர்கள்’ என்ற கேள்விக்கு தர்மர் அளித்த பதில் எல்லா காலங்களுக்கும் பொருந்துவதை கவனியுங்கள்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software