ஹலோ with காம்கேர் – 71
March 11, 2020
கேள்வி: தான் மட்டும் முந்தி இருப்பதுதான் வெற்றியா?
மற்றவர்களை நம் திறமையினால் முந்திச் செல்வதும், எதிலும் முதன்மையாக இருப்பதுமே வெற்றி என நம்மில் பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் வெற்றி என்பது அதுவல்ல.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்ச்சி. நானும், ஓவியர் ஒருவரும் சிறப்பு விருந்தினர்கள். மாணவர்களும் தமிழகம் முழுவதிலும் உள்ள சுயமகளிர் உதவிக்குழுவினரை சேர்ந்த பெண்களுமே பார்வையாளர்கள்.
முதலில் அவர் பேசினார். ஒரு மணி நேர உரையில் தான் வாழ்க்கையில் முன்னுக்கு வந்ததை பெருமையாக நகைச்சுவை இழைந்தோட அருமையாக சொல்லிக்கொண்டிருந்தார். டிஜிட்டல் ஓவியத்தில் இன்றிருக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து பேசினார். அவர் பேசி முடித்ததும் கைத்தட்டல்.
நானும் அவருடைய உரையை ஆழ்ந்து கவனித்தேன். அவரை அடுத்து நான் பேசினேன். வழக்கம்போல இயல்பாக பேசினேன். பேசிக்கொண்டிருக்கும்போதே அவ்வப்பொழுது இடையிடையில் கைத்தட்டல். பார்வையாளர்கள் கண்களில் ஆர்வமும் உற்சாகமும் என்னை மேலும் இயல்பாக பேச வைத்தது. நான் பேசி முடித்ததும் உற்சாக கரகோஷம்தான்.
பார்வையாளர்கள் பலர் என்னிடம் வந்து என்னுடைய உரையை பாராட்டியதுடன் என் பேச்சுக்கு ரசிகர்களாகி விட்டதாக சொல்லி மகிழ்ந்தார்கள். வேறு எங்கேனும் நிகழ்ச்சியில் பேசினால் தகவல் கொடுக்க முடியுமா என கேட்டு அவர்கள் வாட்ஸ் அப் எண் கொடுத்தார்கள்.
பார்வையாளர்களில் சிலர் தள்ளி நின்று மற்றவர்கள் என்னிடம் என்ன பேசுகிறார்கள் என்பதை ஆர்வமுடன் கவனித்தார்கள். சிலர் தூரத்தில் நின்று பார்த்துவிட்டு சென்றார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நானும் என் அனுபவங்களைத்தான் பகிர்ந்துகொண்டேன். ஓவியரும் அவர் அனுபவங்களைத்தான் பகிர்ந்துகொண்டார். ஆனால் இருவரும் ஓரிடத்தில்தான் வித்தியாசப்பட்டோம்.
நான் என் துறை சார்ந்த விஷயங்களை என் அனுபவங்களுடன் இணைத்து இயல்பாக மிகைப்படுத்தல் இன்றி பேசினேன். நான் இயங்கிவரும் தொழில்நுட்ப தொழில்துறையில் நான் வளர வளர என்னுடன் சேர்ந்து வாழ்க்கையில் உயர்ந்தவர்களையும் அவர்கள் இப்போது இருக்கும் நிலையையும் எடுத்துச் சொல்லிக்கொண்டே வந்தேன்.
ஓவியர் என்னைவிட கணீர் குரலில் வார்த்தை அலங்காரங்களுடன் சிரிக்க சிரிக்க நன்றாக பேசினார். சொல்லப் போனால் அவரைச் சுற்றித்தான் பார்வையாளர்கள் சூழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அவருடைய 30 ஆண்டுகால அனுபவ உரையில் அவர் மட்டுமே வியாபித்திருந்தார். அவருடன் இணைந்து பயணித்தவர்களோ அல்லது அவரால் முன்னுக்கு வந்தவர்களோ இடம் பெறவே இல்லை.
நிகழ்ச்சி முடிந்ததும் அவர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் ஏதோ பேசிக்கொண்டிருக்க பார்வையாளர்கள் கவனம் என் மீது மட்டுமே.
இதை பெருமைக்காக சொல்லவில்லை.
தனிநபர் வளர்ச்சி திறமை என்பதெல்லாம் ஒருகட்டம் வரைதான் மக்களிடம் பேசப்படும். நம் வளர்ச்சியையும் திறமையையும் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் இந்த சமுதாயத்துக்கும் உதவும் வகையில் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைத்தான் இந்த உலகம் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறது.
வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வுஎனக்கு மிகவும் பிடித்த திருக்குறள் இது. நாம் மட்டுமே வாழ்க்கையில் உயர்வது வெற்றியல்ல. நாமும் வளர்ந்து நம்மைச் சார்ந்தவர்களையும் உயர்த்துவதில்தான் உண்மையான வெற்றி அடங்கியுள்ளது.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software