ஹலோ with காம்கேர் – 72
March 12, 2020
கேள்வி: எதிர்மறையான எதிர்பார்ப்புகள் நேர்மறை பலனை கொடுக்குமா?
வாழ்க்கையில் எல்லாவற்றையும் நேர்மறையாகவே யோசிக்க வேண்டும் என்பதெல்லாம் சரிதான். அப்படி நேர்மறையாகவே யோசித்துக்கொண்டிருக்கும்போது ஏதேனும் எதிர்மறையாக நடந்துவிட்டால் சட்டென உடைந்து போவதும் நாம்தான்.
நேர்மறையாகவே சிந்தித்துக்கொண்டிருப்பதால் நம்மைச் சுற்றி எல்லாமே நேர்மறையாகவே நடந்துவிடும் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. எதிர்மறையாகவும் நடக்கலாம். முதலில் அந்தத் தெளிவு வேண்டும் நமக்கு.
வாழ்க்கையில் பல நேரங்களில் நேர்மறையான சிந்தனையுடன் கூடிய எதிர்மறையான எதிர்பார்ப்புகள்கூட நேர்மறையான பலனை பெற்றுத் தரும். இந்த மனநிலையில் நேர்மறை பலன் கிடைத்தால் இரட்டை மகிழ்ச்சி கிடைக்கும். எதிர்மறை பலன் கிடைத்தால் ஏமாற்றம் இல்லாத பக்குவப்பட்ட மனநிலை உண்டாகும்.
ஏழெட்டு வருடங்களுக்கு முந்தைய வீட்டு ப்ளான் ஒன்றை A1 ஷீட்டில் (பெரிய சைஸ்) செராக்ஸ் எடுப்பதற்காக நேற்று நானே நேரடியாக செராக்ஸ் கடை சென்றிருந்தேன். செராக்ஸ் எடுப்பவரிடம் ‘செராக்ஸ் நன்றாக வருமா?’ என கேட்டேன். ‘சுமாராகத்தான் வரும். ஏனெனில் ப்ளான் பழசாகி விட்டது. மடிப்புகள் வேறு உள்ளது’ என்று சொன்னார்.
செராக்ஸ் எதிர்பார்த்ததைவிட அருமையாக தெளிவாக வந்தது. என் முக மலர்ச்சியை பார்த்துவிட்டு ‘நான் நன்றாக வரும் என்று சொல்லி செராக்ஸ் சுமாராக இருந்திருந்தால் நீங்கள் வருத்தப்பட்டிருப்பீர்கள். நான் நன்றாக வராது என சொன்னேன். செராக்ஸ் நன்றாக வந்துள்ளது. இப்போது உங்களுக்கு சந்தோஷமாக உள்ளதல்லவா…’ என்று சொன்னார்.
அவரைப் பொருத்தவரை அவர் நேர்மறையாகவே சிந்தித்திருக்கிறார். வாடிக்கையாளர்களின் மனதறிந்து அவர்களிடம் எப்படி பேசினால் அவர்களுக்கு மனம் கோணாமல் சர்வீஸ் செய்துகொடுக்க முடியும் என்ற நுணுக்கம் அறிந்து எதிர்மறையான எதிர்பார்ப்பை கொடுத்து நேர்மறை பலனை பெற்றிருக்கிறார். இது ஒருவித உளவியல் சிந்தனை. இது உளவியல் என்றெல்லாம் அந்த செராக்ஸ் கடைக்காரருக்கு தெரியாது. அவரது அனுபவம் அவரை பண்படுத்தியுள்ளது.
இப்போதெல்லாம் அப்பா அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளை அவர்களின் சின்ன சின்ன தவறுகளை எடுத்துச் சொல்வதில்லை. மெல்லியதாக கடிந்துகொள்வதும், மென்மையாக அடிப்பதும் இல்லை. அவர்கள் கேட்டதையெல்லாம் செய்வதோடு கேட்காததையும் மனதறிந்து அள்ளிக் கொடுக்கிறார்கள். விளைவு தொட்டால் சிணுங்கி மனம் பெருகி வருகிறது.
படித்துவிட்டு கல்லூரியில் இருந்து நேரடியாக வேலையில் சேர்கின்ற இளைஞர்களுக்கு அவர்கள் படித்தத் துறையிலும் ஞானம் இருப்பதில்லை. ஞானம் கூட வேண்டாம், அடிப்படையாவது தெரிகிறதா என்றால் அதுவுமில்லை.
பி.ஈ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு புரோகிராமிங்கின் அடிப்படையான if..else, loop, arrays இவற்றில்கூட அடிப்படை அறிவு இல்லாமல் இருக்கிறார்கள். எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்த மாணவர்களுக்கு சின்ன சின்ன எலக்ட்ரிக்கல் பழுதுகளைகூட சரிசெய்யத் தெரிவதில்லை. கிராஃபிக்ஸில் RGB கலர்கோட் டிஜிட்டல் சாதனங்களில் பார்ப்பதற்கும், CMYK என்பது பிரிண்ட் எடுப்பதற்கான கலர்கோட் என்ற மிக மிக அடிப்படையான விஷயம்கூட தெரியாமல் புத்தக அறிவை மட்டும் வைத்துக்கொண்டு வேலைக்கு வந்துவிடுகிறார்கள்.
டீம் லீடர் சொல்லிக்கொடுக்கும்போது கொஞ்சம் குரலை உயர்த்திவிட்டால் போச்சு. கண்கள் சிவக்க அழுது ஏதோ நடக்கக் கூடாத விஷயம் நடந்துவிட்டதைப் போல சூழலை உருவாக்கி விடுகிறார்கள். எங்கள் அப்பா அம்மாகூட இப்படி கடிந்துகொண்டதில்லை என துக்கம் அடைக்க பேசி அடுத்த நாளே வேலையில் இருந்து நின்றுவிடுகிறார்கள்.
சீனா புகழ் ‘ஃபார்ச்சூன் குக்கீஸ்’ பிஸ்கட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அதிர்ஷ்ட வாசகங்களைப் போலதான் வாழ்க்கையில் நமக்கு நடக்கும் நல்லதும் கெட்டதும். அந்த பிஸ்கட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வாசகம் என்ன என்று வெளிப்படையாக தெரிந்துவிட்டால் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப் போகிறது.
நேர்மறையாக சிந்தியுங்கள், எதிர்மறையான பலனுக்கும் மனதை தயார்படுத்துங்கள். இதுவே நிம்மதியான மனநிலையைப் பெறுவதற்கான தாரக மந்திரம்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software