ஹலோ with காம்கேர் – 97
April 6, 2020
கேள்வி: வாழ்க்கை வாழ்வதற்குத்தானே. அதைத்தவிர வேறென்ன வேலை நமக்கு?
நேற்று நான் எழுதியது ஒரு விளம்பரத்தை ஒட்டியப் பதிவு. அந்த விளம்பரத்தை நான் இயக்கி இருந்தால் எப்படி இருந்திருந்தால் என சில காட்சிகளை மாற்றி அமைத்திருந்தேன். வீட்டு வேலைகளை செய்யாத ஆண்களுக்கான பதிவு அது. எனவே வீட்டு வேலைகளை ஆண்களும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் சில கருத்துக்களைப் பகிர்ந்திருந்தேன்.
அந்தப் பதிவில் ஒரு நண்பர் (@வெங்கடசேஷன் சங்கர்) வீட்டு வேலைகளை மனைவியுடன் சேர்ந்து அத்தனை ஈடுபாட்டுடன் செய்து வந்ததாகவும், மனைவிக்கு மிக அடர்த்தியான சுருள் சுருளான தலைமுடி என்பதால் எண்ணைய் தேய்த்து குளிப்பாட்டிவிட்டு பின் உலர்வதற்காக சாம்பிராணி புகை போடுவது உட்பட அன்பையும் பாசத்தையும் காதலையும் கலந்து கட்டி வாழ்ந்து வந்ததாகவும், 46 வயதில் மனைவி கேன்சரால் இறந்துவிட்டதாகவும் தன் சோகத்தைப் பகிர்ந்திருந்தார். ஒற்றுமையாக வாழ்ந்துவந்த எங்களை இறைவன் இத்தனை சீக்கிரம் பிரித்ததுதான் வேதனை என பின்னூட்டமிட்டிருந்தார்.
இப்படி வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோகத்தை கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது.
வாழ்க்கை டெம்ப்ளேட் அனைவருக்கும் பொதுவானதுதான். அந்த டெம்ப்ளேட்டில் அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொருத்திக்கொள்ளலாம்.
அவரவர் கல்வி, உடல்நலம், மனநலம், பொருளாதாரம் போன்ற பின்புலங்களுக்கு ஏற்ப அந்த கஷ்டங்களை தாங்கிக்கொள்ளவும், முடிவுகளை தள்ளிப் போடவும், முடிந்தால் உதறித்தள்ளிவிட்டு செல்லவும் முடிகின்ற சூழல் அமையலாம். ஆனால் யாருமே தப்பித்து ஓடிவிட முடியாது. ‘விடாது கருப்பு’ என வாழ்க்கை நம்மை துரத்தும். துரத்தும் வேகத்துக்கு ஏற்ப ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அதுதான் வாழ்க்கை.
‘எனக்கு வாழ்க்கையில் கஷ்டங்களே இல்லைப்பா…’ யாராலுமே மார்தட்டி மகிழ்ந்திருக்க முடியாது. அப்படியே செய்தாலும் அந்த கர்வத்தை தட்டவாவது இயற்கை அடி கொடுக்கக் காத்திருக்கும்.
இப்படி நேற்றைய பதிவை ஒட்டி வாழ்க்கைக் குறித்து யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில் என்றோ படித்த ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசகங்கள் நினைவுக்கு வந்தது.
அதன் சாராம்சம்…
வாழ்க்கையில் போராடி போராடி என்ன நடந்தாலும் எதிர்கொள்ளும் பக்குவமும் தன்னம்பிக்கையும் பெறும்போது நாம் வாழ்க்கையின் ஓட்டத்தில் இருந்து விலகி வந்திருப்போம். That is Life.
நாம் தோற்றுவிடுவோம் என சர்வ நிச்சயமாய் நினைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் ஆச்சர்யமாக வெற்றி பெற்றுவிடுவோம். That is Life.
நமக்கு மனிதர்கள் தேவையாக இருக்கும் அத்தியாவசியமான நேரத்தில் அனைவரும் நம்மைவிட்டு சென்றிருப்பார்கள். That is Life.
அழுது அழுது நம் கண்ணீர் வற்றிய பிறகு நாம் சாய்ந்து அழுவதற்கு ஆதரவாக ஒரு தோள் கிடைக்கும். That is Life.
வாழ்க்கையில் பிறரை வெறுப்பதில் முனைவர் பட்டம் பெறும் நிலைக்கு வந்த பிறகு நம்மை திகட்டத் திகட்ட காதலிக்க ஒரு அழகான இதயம் கிடைக்கும். That is Life.
நாம் எவ்வளவுதான் ஜாக்கிரதையாக திட்டம் தீட்டினாலும் வாழ்க்கை நமக்கு என்ன திட்டம் போட்டு வைத்திருக்கிறது என நமக்குத் தெரியாது. That is Life.
வெற்றி நம்மை உலகுக்கு அடையாளம் காட்டும். தோல்வி உலகத்தை நமக்கு அடையாளம் காட்டும். That is Life.
நாம் சோர்ந்து வாழ்க்கை மீதான நம்பிக்கையை இழந்து வாழ்க்கையின் முடிவுக்கே வந்துவிட்டோம் என எண்ணும்போது கடவுள் சிரித்துக்கொண்டே ‘குழந்தாய் இது உன் வாழ்க்கையின் முடிவல்ல. சிறிய வளைவே’ என நம்பிக்கையை துளிர்க்கவிட்டுச் செல்லும். That is Life.
இதை எழுதியவர் 85 வயது இத்தாலி நடிகை சோஃபியா லோரன்.
இன்றைய என் பதிவை படித்த பிறகு, வாழ்க்கை வாழ்வதற்குத்தானே. வாழ்ந்துத்தான் பார்த்துவிடுவோமே என்ற தன்னம்பிக்கை ஒளியை உங்கள் கண்களால் பார்க்கவும், நம்பிக்கை ஒலியை உங்கள் காதுகளால் கேட்கவும் முடியுமேயானால் அதுவே என் எழுத்தும் எண்ணமும் செய்த பாக்கியம்.
அந்த பாக்கியத்தை எனக்குக் கொடுப்பீர்களா? நீங்கள் கொடுப்பீர்களா?
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software