ஹலோ with காம்கேர் – 98
April 7, 2020
கேள்வி: தாயின் சிந்தனை 1+ ஆகவே இருப்பதன் சூட்சுமம் என்ன?
ஒரு தாய் சிந்தனையில்கூட அவள் தனித்திருக்க முடியாது. அவளது சிந்தனையும் எண்ணங்களும் அவளை சார்ந்ததாக மட்டுமே இருப்பதில்லை. அவள் எதை பற்றி சிந்தித்தாலும் 1+ ஆக சிந்திக்க வேண்டியிருக்கும். ஒன்று அவளுக்காக, மற்றொன்று அவள் குழந்தைகளுக்காக.
ஒரு தாயின் வாழ்க்கையே அவளுக்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறதோ அதற்கேற்ப பல பரிணாமங்கள் எடுக்கும் வல்லமை பெற்றது.
இரண்டு குழந்தைகள் என்றால் இரண்டும் ஒன்றுபோல இருந்துவிட்டால் பிரச்சனை இல்லை. இரண்டும் வெவ்வேறு துருவமாக இருந்துவிட்டால் தாயின் பொறுப்பு கூடும்தானே.
உதாரணத்துக்கு இரண்டு குழந்தைகள் பெற்ற தாய்க்கு உடல் என்னவோ ஒன்றுதான். ஆனால் சிந்தனை மூன்றாக (1 + 2) இருக்க வேண்டும். ஒரு குழந்தையுடன் பேசும்போது அவள் சிந்தனையுடன் அந்த குழந்தையின் சிந்தனையை மனதில் ஏற்றிக்கொண்டு பேச வேண்டும். அடுத்த குழந்தையுடன் பேசும்போது அந்த குழந்தையின் சிந்தனையை ஒத்து பேச வேண்டும்.
பெரும்பாலான சந்தர்பங்களில் தன் சுயத்தை மறந்து யாருடன் பேசுகிறாளோ அந்தக் குழந்தையாகவே மாறி ஒரே நேரத்தில் பல அவதாரங்களை எடுக்க வேண்டியிருக்கும்.
தாயைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில் ஒரு தாயின் வேதனையைச் சொல்லும் மூன்று நிமிட வீடியோ பார்த்தேன்.
சாலையில் தனித்து அலைந்துகொண்டிருக்கும் ஒரு வயதான தாயிடம் மைக்கை நீட்டி ஏதோ கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
அவர் ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் பதில் சொல்கிறார். நடுநடுவே தமிழிலும் பேசுகிறார். நாம் வியந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது நம் கண்களை கலங்கச் செய்கிறார்.
‘ஏம்மா இப்படி சாலையில் தனித்து நின்றுகொண்டிருக்கிறீர்கள்’ என கேட்கிறார்கள். அதற்கு அந்தத் தாய் ‘எனக்கு சாப்பாடுபோட பொண்ணு பொறக்கலையே பிள்ளைதானே பொறந்தது!’ என்கிறார். துக்கம் அடைக்கிறது அவருக்கு. ஆனால் அழக்கூட தெம்பில்லை. விசும்புகிறார்.
‘பையன் பிக் ஷாட்டா பெங்களூரில் இருக்கிறார். நான் இங்க இப்படி ரோடில்… சோ… ஐ எம் புவர்…’
‘இப்போ எங்க தங்கியிருக்கீங்க?’
‘இதோ… இங்கத்தான் இருக்கேன்…’ என சாலையோரத்தை காண்பிக்கிறார்.
‘வீடு எங்கிருந்தது?’
‘வீடு இருந்தது அதை வித்து அந்த பணத்தையும் வேலையில் கிடைத்த பணத்தையும் பையனுக்காக செலவழிச்சுட்டேன்… இப்போ ஒரு வாய் சாப்பாட்டுக்கு பிச்சை எடுக்கறேன்…’
‘கணவர் இல்லையா?’
‘பையனுக்கு மூணு வயசுல போயிட்டாரு… செய்யாத வேல இல்ல… அவனை கஷ்டப்பட்டு படிக்க வச்சேன். இப்போ நான் அனாதைய நிக்கறேன்…’
‘நீங்கள்தான் கல்யாணம் பண்ணி வைத்தீர்களா?’
‘ஆமா நல்லா படிக்க வச்சேன்… அவனும் நல்ல படிச்சான்…. கைநிறைய சம்பாதிக்கிறான்… கல்யாணமும் பண்ணி வச்சேன்… மை டாட்டர் இன் லா ஈஸ் வெரி நைஸ்… ஆனா நான் அனாதையா நிக்கறேன்…’ அழுகையில் அவர் பேசுகின்ற வார்த்தைகள் கரைந்துவிட்டதால் சரியாக புரியவில்லை.
‘சரி இப்படி பொறுப்பில்லாமல் இருக்கும் மகன்களை என்ன செய்யலாம்?’
‘தண்டன கொடுக்கணும்…’
‘என்ன தண்டனைக் கொடுக்கலாம்…’
‘மனசுக்கு என்ன தோணுதோ அந்த தண்டன கொடுக்கணும்… ஆனால் மனசு கேக்க மாட்டேங்குதே…’ கேவி கேவி அழுது புடவை முந்தானையால் முகத்தை அழுந்த துடைத்துக்கொள்கிறார்.
‘அழாதீங்க… அழாதீங்க… நாங்க அடிக்கடி உங்களை வந்து பார்க்கிறோம்…’
‘வந்து பாருங்க… வரும்போது டீ வாங்கிகொடுத்துட்டுப் போனா போதும்…’
பேட்டி எடுத்தவர்கள் அந்த பெண்மணிக்கு கொஞ்சம் பணம் கொடுக்கிறார்கள். முதலில் மறுத்தாலும் வற்புறுத்தியபோது தேங்க்யூ என ஆங்கிலத்தில் நன்றி சொல்கிறார்.
‘God Bless u. எங்க போனாலும் சேஃப்ட்டியா வூட்டுக்கு வாங்கோ… ராத்திரில வெளில சுத்தாதீங்க…’ என்று தன் மகனிடம் பேசுவதைப் போல அன்புடன் விடைபெறுகிறார்.
‘எனக்கு சாப்பாடுபோட பொண்ணு பொறக்கலையே பிள்ளைதானே பொறந்தது!’ என்று அவர் பொட்டில் அறைந்ததைப் போல சொன்னது காதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கிறது.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software