ஹலோ with காம்கேர் – 99
April 8, 2020
கேள்வி: ஐஸ் டீ லாஜிக் தெரியுமா?
ஊரடங்கு தினங்கள் ஆரம்பத்தில் வீட்டில் இருந்தபடி வேலை, சாப்பாடு, தூக்கம், டிவி, சினிமா, புத்தக வாசிப்பு, வாட்ஸ் அப், ஃபேஸ்புக், குழந்தைகள், வீட்டு வேலை என முதல் ஒருவாரம் குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருப்பதைப் போல மாறுபட்ட உற்சாக மனநிலைதான் எல்லோருக்கும்.
ஒரு வார காலம் முடிந்த நிலையிலேயே வீடே ஜெயில் போல தோன்ற ஆரம்பித்திருக்கும். எல்லாவற்றுக்கும் மேல் எதிர்காலம் குறித்த கவலை. சம்பளம் வருமோ வராதோ குறைக்கப்படுமா என்ற பயம். வேலை இருக்குமா போகுமா என்ற சஞ்சலம். முதல் வாரத்துக்குள் சம்பளம் கிரெடிட் ஆகிவிடுபவர்களுக்கு இன்னும் வராதது மன இறுக்கத்தை உண்டாக்கி இருக்கும்.
எதற்கும் கவலைப்பட வேண்டாம், நிலைமை சீராகும் என்று மூன்றாவது நபராய் இருந்து ஆலோசனைகள் கொடுப்பது சுலபம். எனவே நான் உங்களுக்கு ஆலோசனை சொல்லவில்லை, சின்னதாக மாற்றி யோசிக்க சொல்கிறேன்.
உங்களுக்குள் துளிர்விட்டிருக்கும் பயத்தை ‘உங்களுக்கு நீங்கள்’ சொல்லவே சொல்லாதீர்கள். என்ன புரியவில்லையா. உங்களுடன் நீங்கள் மூன்றாம் நபராக தள்ளி நின்று பழக ஆரம்பியுங்கள். அந்த நபருக்குள் உங்கள் பயத்தைப் புகுத்தாதீர்கள். அப்போதுதான் அந்த நபரால் சிந்திக்க முடியும். கையில் இருக்கும் பணத்தை சிக்கனமாக எப்படி பயன்படுத்தலாம் என யோசியுங்கள்.
இதையெல்லாம் தாண்டி நம் மக்கள் எந்த சூழலிலும் வாழ்க்கையை அதன் போக்கில் சென்று தங்கள் விருப்பப்படி வாழ முடியும் என்பதை தொழில்நுட்பத்தை மிகச்சரியாக பயன்படுத்தி வருபவர்களிடம் காண முடிகிறது.
தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர்கள்கூட வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சி சேனல்களுக்கு லைவாக கன்டென்ட் கொடுக்கவும் விவாதம் செய்யவும் ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு லேப்டாப்பும், வீட்டையும் சேனலையும் இணைக்கத் தேவையான சாஃப்ட்வேரும் ஆப்பும் இருந்துவிட்டால் தூரம் வெறும் கிலோமீட்டர் கணக்குத்தான்.
ஃபேஸ்புக் லைவ், யு-டியூப் லைவ், ஃபேஸ் டைம் சாட், ஸ்கைப் என்றிருந்தவர்கள் முழுமையான அலுவலகத் தேவைகளுக்கு ‘ஜூம்’ என்ற ஆப்பையும், தங்கள் குடும்பத்தினர்களிடமும் நண்பர்களுடனும் தொடர்புகொள்ள ‘ஹவுஸ் பார்ட்டி’ என்ற ஆப்பையும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
வாராந்திர மாதாந்திர இலக்கியக் கூட்டங்கள், திரைத்துறை சார்ந்த விவாதங்கள், புத்தக அறிமுக விழாக்கள் போன்றவற்றை ஆன்லைனிலேயே ஜூம் ஆப் மூலம் நடத்தத்தொடங்கி விட்டார்கள். வெளிநாடுகளில் இருந்தெல்லாம் அந்த மீட்டிங்கில் கலந்துகொள்கிறார்கள், விவாதிக்கிறார்கள், புதிய முடிவுகள் எடுக்கிறார்கள்.
ஊரடங்கு இன்னும் நீட்டிக்கப்படலாம் என்ற அனுமானங்களினால் வாழ்க்கையை இப்படியே ஓட்டிவிட முடியாது என்ற மனநிலையில் அவரவர்கள் இயல்பாக எப்போதும்போல் தங்கள் பணிகளை செய்ய என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் தொழில்நுட்பம் மூலம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஆன்லைனிலேயே மருத்துவம், பிசினஸ், கல்வி என பல்துறை சார்ந்தவர்கள் கவுன்சிலிங் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்
ஒரு சிறிய யோசனை வாழ்க்கையையே புரட்டிப் போட முடியும். சாதா டீ விற்றுக்கொண்டிருந்தவர் சிறிய யோசனை மூலம் ஐஸ் டீயை அறிமுகப்படுத்தி உலகப்புகழ் பெற்ற கதையை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
1904-ம் ஆண்டு அமெரிக்காவில் மிசெளரியின் உள்ள செயின்ட் லூயிஸில் உலகக் கண்காட்சி ஒன்று நடந்தது. அதில் ரிச்சர்டு பிளெச்சி டென் என்பவர் டீ ஸ்டால் போட்டிருந்தார். கடுமையான கோடைக் காலமாக இருந்ததால் யாருமே டீ அருந்த வரவில்லை. அவர் மனம் தளரவில்லை. கோடைக்கு இதமாக ஐஸ் கட்டியை டீயில் போட்டு கோடைக்கு இதமாக ஐஸ் டீ கிடைக்கும் என அறிவித்து அதை விற்க ஆரம்பித்தார். புதுவிதமான டீயைப் பருக அவர் ஸ்டாலில் கூட்டம் அலைமோதியது. ஐஸ் டீயை கண்டுபிடித்தவர் என்ற பெயரும் பெற்றார்.
இப்படி தங்கள் பணியின் அடிப்படைத் தன்மையை மாற்றாமலேயே சூழலுக்கு ஏற்ப அதில் சிறு மாறுதல்களை மட்டும் செய்து அதில் உச்சத்துக்குச் செல்ல முடியும்.
சஞ்சலப்படாதீர்கள். கவலைப்படாதீர்கள். நிதானமாக யோசியுங்கள். உங்கள் கண்களை மறைத்துக்கொண்டிருந்த பாதை தெளிவாகத் தெரியும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software