ஹலோ With காம்கேர் -100: 100-வது நாள் அத்தனை கொண்டாட்டமா என்ன?

 

ஹலோ with காம்கேர் – 100
April 9, 2020

கேள்வி:   100-வது நாள் அத்தனை கொண்டாட்டமா என்ன?

இன்று இந்த வருடத்தின் 100-வது நாள். இந்த வருடம் நான் எழுதும் 100-வது பதிவு. மூச்சு விடுவதைப் போல நாள் தவறாமல் கடந்த 40 வருடங்களாக தினந்தோறும் எழுதி வருகிறேன். இந்த சமூகத்திடம் இருந்து அந்தந்த காலத்தில் நான் கற்றதையும் பெற்றதையும் இந்த சமூகத்துக்கே கொடுக்கும் நோக்கத்துடன் இந்த செயல் அமைந்துவிட்டது இறை செயலன்றி வேறென்ன?

‘எப்போதுமே புத்துணர்வோடு இப்போதுதான் எழுத ஆரம்பித்திருக்கும் புது எழுத்தாளரைப் போல் எழுதுகிறீர்களே எப்படி சாத்தியமாகிறது’ என்று என்னிடம் பலரும் கேட்கிறார்கள்.

சென்ற வருடத்தின் 366 நாட்களும் தொடர்ச்சியாக ஃபேஸ்புக்கிலும் என் வெப்சைட்டிலும் எழுதி வந்தேன். அது முடிந்த பிறகு 367 என்று போட்டல்லவா என் பதிவுகளை இந்த வருடம் தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால் நான் திரும்பவும் பதிவின் தொடக்கத்தை 1 என்றே தொடங்கி இருந்தேன்.

இதுதான் என் உற்சாகத்துக்குக் காரணம்.

தொடர்ச்சியாக எண்களைப் போட்டிருந்தால் ‘என் மனதுக்குள் ஆஹா நம்மால் இத்தனை நாட்கள் தொடர்ச்சியாக எழுத முடிந்திருக்கிறதே, சபாஷ் என்ற மமதை எட்டிப் பார்க்கும். அந்த சின்ன கர்வம் மேலே தொட முடியாமல் தடுக்கவும் வாய்ப்பை உண்டாக்கும். அந்த நிறைவு என்னை செயல்பட வைக்காமலும் போகலாம்’ எனவேதான் இந்த வருடத்தின் பதிவுகளை 1-ல் இருந்தே ஆரம்பித்திருந்தேன்.

என் 21 வயதில் என் உழைப்பு, திறமை, கல்வி இவை மூன்றையும் அடித்தளமாக்கி  எங்கள் காம்கேர் நிறுவனத்தைத் தொடங்கினேன். இப்போது 27-வது வருடம் நடந்துகொண்டிருக்கிறது. அன்றிருந்த அதே உற்சாகத்துடன்தான்  இன்றும் உழைக்கிறேன். நான் உயர்ந்ததுடன் என்னுடன் சேர்த்து பல ஆயிரக்கணக்கானவர்களையும் உயர்த்தியுள்ளேன். இதற்குக் காரணம், இப்போதுதான் நிறுவனத்தை ஆரம்பித்துள்ளேன் என்ற மனநிலையிலேயே நித்தம் பணியாற்றுவதால் கிடைக்கும் உத்வேகம்.

‘இன்று புதிதாய் பிறந்தேன்’ என்பதைப் போன்ற என் உற்சாகத்துக்கு மற்றொரு காரணம் உண்டு. என் வெற்றியையும் தோல்வியையும் பிறருடன் ஒருநாளும் ஒப்பிட்டதே இல்லை.

ஒரு கிராமத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவரிடம் அந்த கிராமத்து மக்கள் அனைவரும் ஒன்றுபோல ஒரே வேண்டுதலை வைத்தார்கள்.

‘எங்களுக்கு பிரச்சனைகள் எல்லாம் நீங்க வேண்டும், நாங்கள் விரும்புவது எல்லாம் நடக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும்…’

அந்த துறவியும் ஒரு யோசனை சொன்னார். ‘நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் மனதுக்குள் ஒரு பையை கற்பனை செய்துகொள்ளுங்கள். அதில் உங்கள் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக தெளிவாக சொல்லி அதில் போட்டு மூட்டைக் கட்டிக் கொண்டு சென்று ஊரின் நடுவில் உள்ள ஆற்றில் கொட்டிக் கரைத்து விடுங்கள். வீடு திரும்பும்போது காலியான அந்த பையில் உங்கள் விருப்பங்களை ஒவ்வொன்றாக தெளிவாக சொல்லி மூட்டைக்கட்டி எடுத்து வாருங்கள். நீங்கள் வீடு திரும்பும்போது உங்கள் விருப்பங்கள் அத்தனையும் பூர்த்தியாகி இருக்கும்’

மக்களுக்கு ஆனந்தமோ ஆனந்தம். அனைவரும் கற்பனையில் தங்கள் பிரச்சனைகளை மூட்டைக் கட்டிக் கொண்டு சென்று ஆற்றில் கரைத்துவிட்டு தங்கள் விருப்பங்களை சுமந்துகொண்டு வீடு வந்து சேர்வதற்குள் எத்தனை ஆச்சரயம் அவர்களுக்கு. அவரவர்கள் பிரச்சனைகள் மறைந்து அவர்கள் விரும்பிக் கேட்ட வீடு, வாசல், தோட்டம், கார் இத்யாதி இத்யாதி அத்தனையும் கிடைத்திருந்தது.

ஆனால் திரும்பவும் அவர்கள் மனதுக்குள் சோகம். ஏன் தெரியுமா? ஒவ்வொருவரும் அடுத்தவர்களுக்கு என்ன கிடைத்திருக்கிறது என்பதை கவனிக்க ஆரம்பித்தார்கள்.

இரண்டு அறை கொண்ட வீடும், ஐ10 காரும்  வேண்டும் என கேட்டிருந்தவருக்கு அடுத்த வீட்டுக்காரன் பங்களாவையும் பென்ஸ் காரையும்  கேட்டுப் பெற்றிருப்பதைப் பார்த்துப் பொறாமை. இரண்டு தங்க செயின் கேட்டிருந்த பெண்ணுக்கு இரண்டு தங்க நெக்லஸ் கேட்டுப் பெற்றிருந்த எதிர்வீட்டு பெண்ணைப் பார்த்து வயிற்றிரிச்சல்.

தம்மை விட மற்றவர்கள் சந்தோஷமாக இருப்பதாகவும் அவர்களுக்கு அதிகம் கிடைத்திருப்பதாகவும் நினைக்க ஆரம்பித்ததன் விளைவு சந்தோஷமாக இருந்தவர்கள் சோகத்தில் மூழ்கத் தொடங்கினார்கள்.

மனிதனின் பிரச்சனைகளும், சந்தோஷங்களும் அவரவர் மனதிலேயே இருப்பதை இந்தக் கதை எத்தனை அழகாகச் சொல்கிறது.

உங்கள் வெற்றி உங்கள் மனதில். மனதை செம்மைப்படுத்துங்கள். நிச்சயம் அது நல்வழியிலேயே உங்களை செலுத்தும்.

இது என் அறிவுரை அல்ல. அனுபவம்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 62 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon