ஹலோ With காம்கேர் -101: சாம்பாரில் சரியான அளவு தண்ணீர் சேர்ப்போமா?

ஹலோ with காம்கேர் – 101
April 10, 2020

கேள்வி:   சாம்பாரில் சரியான அளவு தண்ணீர் சேர்ப்போமா?

‘கொரோனாவாவது மண்ணாவது எல்லாம் மீடியாக்கள் செய்யும் அலப்பறை, நமக்கெல்லாம் அதெல்லாம் வராது’ என பிப்ரவரி மாதம்வரை அலட்சியமாய் சொல்லிக்கொண்டிருந்த பலர் இன்று உலகடங்கினாலும் ஊரடங்கினாலும் வீட்டடங்கி முடங்கி இருக்கிறார்கள்.

பிப்ரவரி மாதம் அவர்களிடம் தெரிந்தது நேர்மறை சிந்தனையும் அல்ல, எதிர்மறை சிந்தனையும் அல்ல. ‘மனம் போன போக்கில்’ என்று சொல்வார்களே அதைப்போல் எதை குறித்தும் ஆராயாமல் தங்கள் செளகர்யத்துக்கு எது பொருந்துகிறதோ அதையே சிந்திப்பது, அதைச் சார்ந்தே செயல்படுத்துவது என்ற மனோபாவமே அவர்களிடம் குடிகொண்டிருந்தது.

நேர்மறை சிந்தனைகள் என்பதும் எதிர்மறை சிந்தனைகள் என்பதும் ஏதோ வெவ்வேறு என்று எண்ணிவிட வேண்டாம்.

இரண்டும் ஒன்று என்று சொல்வதைவிட ‘சிந்தனைகள்’ என்ற ஒற்றை வார்த்தையில் இரண்டையும் அடக்கிவிடலாம்.

நாம் சிரிக்கிறோம், அழுகிறோம், வருந்துகிறோம் என்பதைப்போல சிந்திக்கிறோம் என்பதும் ஒரு செயல். நாம் பொதுவாக சிந்திப்பதே நேர்மறையாகத்தான் இருக்கும்.

நாமாக கற்பனை செய்துகொள்வதினாலும் நம்முடைய அனுபவங்களினால் சாதாரண விஷயங்களைக் கூட பெரிதுபடுத்தி ஜாக்கிரதையாகவோ அல்லது கண்டுகொள்ளாமல் கவனக்குறைவாகவோ அணுகுவதாலும் உண்டாகும் விளைவுகள் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். அவ்வளவே.

சிந்தனையில் எதுவும் மாறுபடுவதில்லை, விளைவுகளில்தான் மாறுபடுகிறது.

உதாரணத்துக்கு எல்லோருமே சமையலில் சாம்பாரை  ஒரே லாஜிக்கில்தான்  செய்கிறோம். ஆனால் ஏன் அனைவரது கைப்பக்குவமும் ஒன்றுபோல் இருப்பதில்லை. அதில் சேர்க்கப்படும் உப்பு புளி மிளகாய் பொடி பெருங்காயம் இவற்றின் அளவுகளோடு அதில் நாம் கலக்கும் தண்ணீரின் அளவில்தான் சூட்சுமமே அடங்கி உள்ளது. தண்ணீர் கொஞ்சம் கூடினாலும் குறைந்தாலும் சுவை அடியோடு மாறிவிடும்.

அதுபோல்தான் நம் சிந்தனையில் நம் அனுபவம் எனும் இங்ரெடியண்ட்டை (Ingredient) சேர்ப்பதற்கு ஏற்ப விளைவுகளில் நேர்மறையும் எதிர்மறையும் வெளிப்படும்.

நாம் அனைவருக்குமே சிந்தனைகள் ஒன்றாகத்தான் இருக்கும். நமக்கு கெட்டவைதான் நடக்கும் என்றும், நாம் தோல்விதான் அடைவோம் என்றும் நினைத்துக்கொண்டா வாழ்க்கையை நடத்துகிறோம். அப்படி நினைத்துக்கொண்டு நம் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தால் மனிதன் வாழவே முடியாது. நித்தம் செத்துத் செத்துத்தான் பிழைக்க வேண்டியிருக்கும்.

ஒரு குழந்தை பிறக்கிறது. ஆசை ஆசையாய் அதை என்ன படிக்க வைக்க வேண்டும், அது என்னவாக வர வேண்டும், அது எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டும் என ஒரு பெற்றோராய் நமக்குள்தான் எத்தனை எதிர்பார்ப்புகள். அந்தக் குழந்தையுடன் சேர்த்து நம் கனவுகளையும் அல்லவா சுமக்கத் தொடங்கிவிடுகிறோம். அதற்கேற்ப திட்டமிடவும் பணத்தை சேமிக்கவும் ஆரம்பித்து விடுகிறோம். ஆனால் எதிர்பாராத விதமாக அந்தக் குழந்தை ஏதேனும் நோயினாலோ அல்லது விபத்தினாலோ இடையில் பதினைந்து இருபது வயதில் இறந்துவிடுவதாக வைத்துக்கொள்வோம். இந்த நிகழ்ச்சி இப்படித்தான் நடக்கும் என நமக்கு முன்கூட்டியே தெரியாதிருப்பதால்தான் நாம் உயிர்ப்புடன் வாழ்கிறோம். இது இப்படித்தான் நடக்கும் என்பது முன்பே தெரிந்துவிட்டால் நம்மால் நிம்மதியாக மூச்சுவிட முடியுமா?

நம் நம்பிக்கைக்கும் வாழ்க்கை முகத்தில் அறைந்து சொல்லிக்கொடுக்கும் நிதர்சனத்துக்கும் இடையே உள்ள இடைவெளியில்தான் நம் வாழ்க்கையின் உயிர்ப்பு அடங்கியுள்ளது.

அகந்தை. அறியாமை. அலட்சியம். இவற்றை சிந்தனையுடன் கலக்கும்போது அது எதிர்மறை விளைவுகளை உண்டாக்குகிறது.

சமயோஜிதம். அறிவாற்றல். பொறுப்பு.  இவற்றை சிந்தனையுடன் கலக்கும்போது உண்டாகும் விளைவுகள் நேர்மறையாக அமையப்பெறும்.

இந்த இரண்டு கலவையில் நாம் நம் சிந்தனையுடன் எந்த இங்ரெடியண்ட்டை கலக்கப் போகிறோம் என்பதில்தான் நாம் நேர்மறை சிந்தனையுள்ள மனிதர்களா, எதிர்மறை சிந்தனையுள்ள மனிதர்களா என்ற முத்திரையைக் கொடுக்கும்.

என்னுடைய சாய்ஸ் ‘சமயோஜிதம். அறிவாற்றல். பொறுப்பு’. அப்போ உங்களுக்கு?

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 25 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon