ஹலோ With காம்கேர் -102: வாழ்க்கை நமக்கு வாரிவாரிக் கொடுப்பதை அள்ளிஅள்ளிப் பருக ஏன் தெரியவில்லை?

ஹலோ with காம்கேர் – 102
April 11, 2020

கேள்வி:   வாழ்க்கை நமக்கு வாரிவாரிக் கொடுப்பதை அள்ளிஅள்ளிப் பருக ஏன் தெரியவில்லை?

நேற்று முன் தினம். வெளியே வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. மதியம் பைப்பை திறந்தால் தண்ணீருக்கு பதில் வெந்நீர்.

மாலை ஐந்து மணிவாக்கில் மேகம் கருத்து சில்லென காற்றடிக்கத் தொடங்கி சில நிமிடங்களில் சடசடவென மழை. இடைஞ்சலாய் பரபரத்து அங்கும் இங்கும் ஓடுவதற்கு மனிதர்கள் இல்லாததால் மழையும் விஸ்ராந்தியாய் பெய்யத்தொடங்கியது. அரை மணி நேரம் கொட்டித் தீர்த்தது. முகம் அலம்புவதற்கு பைப்பைத் திறந்தால் தண்ணீருக்கு பதில் ‘ஐஸ்’ நீர்.

சூரியன் புறப்பட்டது முதல் தொடர்ச்சியாக 12 மணி நேரம் அதன் வெக்கையை உள்வாங்கிக்கொண்டிருந்த பூமி அரை மணிநேர மழைக்கே குளிர்ந்துவிட்டிருந்தது. இவ்வளவு துளி கருணை போதுமானதாக உள்ளது பூமித்தாய் குளிர்வதற்கு.

இப்படித்தான் நமக்கு உதவி செய்யும் வாய்ப்பும் வசதியும் இல்லாவிட்டாலும், உதவி செய்ய வேண்டும் என நாம் மனதால் நினைத்தாலேபோதும். நல்லது செய்ததற்கு ஈடான பலன் கிடைத்துவிடும்.

மகாபாரதத்தில் ஒரு நிகழ்வு. தான தர்மங்கள் செய்வதில் கர்ணனை மிஞ்சுவதற்கு யாருமே கிடையாது. அவர் இறந்த பிறகு சொர்க்கத்துக்குச் சென்றார். அங்கு சென்றதும் அவருக்கு பசி எடுத்தது. அங்குள்ள தேவதூதர்களிடம் ‘சொர்க்கத்தில் பசி எடுக்குமா?’ என கேட்கிறார். அதற்கு அவர்கள் ‘உன் ஆள்காட்டி விரலை வாயில் வைத்துக்கொள்’ என சொல்கிறார்கள். கர்ணன் குழம்பியபடி அப்படியே செய்கிறார். என்ன அதிசயம். பசி அடங்கி விடுகிறது. கர்ணன் அதிசயித்து காரணம் கேட்கிறார். தேவதூதர்கள் காரணத்தை சொல்கிறார்கள்.

‘கர்ணா நீ எத்தனையோ தான தர்மங்கள் செய்தாய். ஆனால் அன்னதானம் மட்டும் செய்யவே இல்லை. அதனால்தான் சொர்க்கத்தில் உனக்கு பசி ஏற்பட்டது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் போரை நிறுத்துவதற்காக தன் பரிவாரங்களுடன் துரியோதனனிடம் தூது வந்த சமயம் ‘எங்களுக்கெல்லாம் சாப்பிட எங்கே உணவு தயாராகியுள்ளது?’ என கேட்டபோது ‘அதோ அங்கே’ என உன் ஆள்காட்டி விரலால் உணவு தயாராக இருந்த இடத்தை சுட்டிக்காட்டினாய். அதனால் உன் ஆள்காட்டி விரல் அன்னதானம் செய்த புண்ணியத்தைப் பெற்றது. எனவேதான் உன் ஆள்காட்டி விரலை வாயில் வைத்ததும் உன் பசி அடங்கியது’

இப்படித்தான் வாழ்க்கை நம்மிடம் பெரிது பெரிதாக எதையும் எதிர்பார்ப்பதில்லை. ஒரு துளி நேர்மையை, ஒரு துளி ஒழுக்கத்தை, ஒருதுளி மனிதத்தை. அது இருப்பது தெரிந்துவிட்டால் போதும், வாழ்க்கை நமக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கக் காத்திருக்கும்.

ஒரு மாணவனின் தேர்வுத்தாளை திருத்தும் ஆசிரியர் அவன் 33 மதிப்பெண் மட்டுமே எடுத்திருந்தால், அவனுடைய ஏதேனும் ஒரு பதிலுக்கு இரண்டு மார்க் அதிகம் போட முடியுமா என பார்த்து கூடுதல் மதிப்பெண் போட்டு மனிதாபிமானத்தின் அடிப்படையில் அந்த மாணவனின்  மதிப்பெண்ணை 35 ஆக்கி பாஸ் செய்ய வைப்பதைப்போல்தான் வாழ்க்கையும் நம்மிடம் எங்கேயாவது குட்டியூண்டு நல்லது தென்படுகிறதா என கண்களில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டே இருக்கும். அதன் கண்களுக்கு நம்மிடம் தூசுபோல ஏதேனும் நல்லவை ஒட்டிக்கொண்டிருப்பது தெரிந்தால்போதும். அதற்கு குஷி வந்துவிடும். ‘இந்தா இந்தா’ என பல நன்மைகளை வாரிக்கொடுக்கத் தொடங்கிவிடும்.

நமக்குத்தான் நம்மிடம் உள்ள நல்லவையும் தெரிவதில்லை. வாழ்க்கை வாரி வாரிக்கொடுப்பதை அள்ளிப் பருகவும் தெரிவதில்லை.

இத்தனை நாட்கள்தான் ஓடிக்கொண்டே இருந்தாயிற்று. ‘நேரம் இல்லை, பிஸி’ என எல்லாவற்றுக்கும் இதே காரணத்தைச் சொல்லி தட்டிக் கழித்தாயிற்று.

இப்போது ஊரடங்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் நல்லதொரு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையாவது தெரிந்துகொள்ள முயற்சிப்போம். நமக்காகவே வாழ்ந்தவர்களையும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும் நினைத்துப் பார்க்கவாவது செய்வோமே.

அந்த நன்றியுணர்ச்சி இருந்துவிட்டால்போதும் வாழ்க்கை நமக்கு வாரிவாரிக் கொடுப்பதை தடுக்க யாராலும் முடியாது.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 29 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon