ஹலோ with காம்கேர் – 103
April 12, 2020
கேள்வி: உபண்டுவா என்ன அது?
‘இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறார்களே எப்படித்தான் வாழ்க்கையை எதிர்கொள்ளப் போகிறார்களோ’ என்பதுதான் தங்கள் பிள்ளைகள் பற்றி பல பெற்றோர்களின் கவலையாக இருக்கும். ஆனால் நாம் பயப்படும் அளவுக்கு இளைஞர்கள் பொறுப்பில்லாமல் இருப்பதில்லை. வீட்டில் வயதானவர் யாருக்கேனும் உடல்நிலை சரியில்லை என்றால் இளைஞர்கள்தான் மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் பாலமாக இருப்பார்கள். கவனித்திருப்பீர்கள்.
குழந்தைகளானாலும் சரி, இளைஞர்களானாலும் சரி அவரவர்கள் இயல்பில் இல்லாமல் பெரியவர்களை போல மன முதிர்ச்சியுடனேயே 24 * 7 இருப்பது சாத்தியமில்லை. நம்மைப் பார்த்து வளரும் அவர்களுக்குள் இருக்கும் பொறுப்புணர்வு தேவைப்படும்போது தானாகவே வெளிப்படும். அதுதான் இயற்கை. இயல்பு. சாத்தியம்.
ஊரடங்கில் இருக்கும் இந்த சமயத்தில் நம் அரசு ஊழியர்கள், காவலர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருமே மிக சிறப்பாக செயல்படுவதாக பலரும் பாராட்டுகிறார்கள். அதுதான் உண்மையும்கூட. அவர்களிடம் பொறுப்புடன் சேர்ந்து கருணையும் அன்பும் பொறுமையும் இழைந்தோடுவதையும் கவனித்திருப்பீர்கள்.
ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். யாராக்குமே திடீரென பொறுப்பும் கருணையும் அன்பும் வந்துவிடாது. எப்போதும் எப்படி நடந்துகொள்கிறார்களோ அப்படித்தான் அவர்கள் இப்போதும் நடந்துகொள்கிறார்கள். அவர்களில் ஓரிருவர் செய்கின்ற தவறுகளால் நாம்தான் ஒட்டுமொத்தமானவர்களின் மீதும் தவறான அபிர்ப்பிராயம் வைத்துக்கொண்டு ‘இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்’ என்ற முன்கூட்டிய தீர்மானத்துடன் இவ்வளவு நாட்கள் அணுகி வந்திருக்கிறோம்.
இப்போதுதான் நமக்கு(ம்) நேரம் கிடைத்துள்ளது. அதிசயமாய் ஒவ்வொரு ஜீவனையும் உற்று நோக்குகிறோம். அதனால் அவர்களின் அணுகுமுறை நமக்கு வியப்பாக இருக்கிறது. அவ்வளவுதான்.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால் வீட்டுக்குள் அடைந்திருக்கும் நாம்தான் அன்புடனும் கருணையுடனும் மாறியிருக்கிறோம். அதனால்தான் பிறரது செயல்களில் உள்ள பொறுப்பையும் அன்பையும் கருணையையும் நம்மால் உணர முடிகிறது.
ஆப்பிரிக்க நாட்டு கலாச்சரத்தில் ‘உபண்டு’ (Ubuntu) மிகவும் பிரசித்தி பெற்றது.
ஒரு சமயம் ஆப்பிரிகாவில் ஒரு சிறிய கிராமத்தில் பழங்குடி மக்களுடன் தங்கி இருந்து மனிதநேயம் குறித்து ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தார் ஒரு பெண். அந்த மக்கள் அவருடன் மிகவும் நெருக்கமாகிவிட்டார்கள். குறிப்பாக சிறுவர்கள் அன்பைப் பொழியத் தொடங்கினார்கள்.
அவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஓட்டப்பந்தயம் ஒன்றை ஏற்பாடு செய்தார் அந்த ஆராய்ச்சியாளர். 100 மீட்டர் தொலைவில் ஒரு மரத்தின் அடியில் கூடை நிறைய இனிப்பை வைத்துவிட்டு மூன்று சிறுவர்களை அதை நோக்கி ஓடச் சொன்னார். யார் முதலில் செல்கிறார்களோ அவர்களுக்கே அந்த இனிப்பு முழுவதையும் பரிசாக கொடுத்துவிடுவதாக நிபந்தனை.
மூன்று சிறுவர்களும் ஆச்சர்யமாக ஒரு செயலை செய்தார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்துக்கொண்டு ஓடத் தொடங்கினார்கள். அவர்கள் மூவருமே ஒரு சேர அந்த இனிப்பு வைத்திருந்த மரத்தை அடைகிறார்கள். மூவரும் இனிப்பை பகிர்ந்து சாப்பிட்டார்கள்.
ஆராய்ச்சியாளர் அந்த சிறுவர்களிடம் ‘ஏன் இப்படி செய்தீர்கள்?’ என ஆச்சர்யமாகக் கேட்டார்.
அதற்கு அவர்கள் ‘உபண்டு’ என்று ஒருசேர பதில் அளித்தார்கள். மேலும் அவர்கள் விரிவாக, ‘ஒருவருக்கு மட்டும் இனிப்பு பரிசாகக் கிடைத்தால் மற்றவர்கள் வருத்தப்படுவார்களே. மற்றவர்கள் வருத்தப்படும்போது நாம் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும். அதனால்தான் மூவரும் சேர்ந்தே ஓடினோம். ஒன்றாக வெற்றி பெற்றோம். மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டோம்’ என்றும் விளக்கினார்கள்.
ஆப்பிரிக்க மொழியில் Ubuntu என்றால் ‘I am because we are’. எத்தனை வலிமையான பொருள் பொதிந்த வார்த்தை இது.
நாம் ஒவ்வொருவரும் இந்த அணுகுமுறையை பின்பற்றி செல்லுமிடமெல்லாம் அன்பையும் மகிழ்ச்சியையும் தூவிக்கொண்டே செல்வோமே. நாம் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தால் மட்டுமே நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களில் நல்லவை நம் கண்களுக்குத் தென்படும்.
மகிழ்ந்து மகிழ்வித்தல்தானே வாழ்க்கை. சுருங்கச் சொன்னால் உபண்டுவாக வாழப் பழகலாமே!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software