ஹலோ with காம்கேர் – 110
April 19, 2020
கேள்வி: எழுத்து, புத்தகங்கள், வாசிப்பு இவற்றுக்கான ஸ்பேஸ் இவ்வளவுதானா?
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கண்காணிப்பு சிகிச்சையில் இருப்பவர்களுக்கு படிப்பதற்காக புத்தகங்கள் இலவசமாக அளித்தபோது அவர்களில் பெரும்பாலானோர் வாங்கவில்லை என ஒரு செய்தியை படித்தேன்.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் குறிப்பாக கொரோனா நோய் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு பயமும், குடும்பத்தைப் பற்றிய கவலையும் நெருக்கிப் பிழியும். வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும் அதுதான் நிதர்சனம். அந்த நேரத்தில் அவர்களுக்குப் பிடித்த விஷயங்களை செய்ய வாய்ப்புக் கொடுத்தால்கூட அவர்களால் அவற்றை மனம் உவந்து செய்ய முடியுமா என்பது சந்தேகமே.
வாசிக்கும் வழக்கம் இருப்பவர்களால் மட்டுமே எந்த நேரத்திலும் எப்படிப்பட்ட சூழலிலும் வாசிக்க முடியும். அதனால் வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது என்று வருந்தும் நோக்கில் எதிர்மறையாக சிந்திக்க வேண்டியதில்லை என்பது என் கருத்து.
முதன் முதலில் தனியாக விமானப் பயணம் மேற்கொள்பவர்களை உன்னிப்பாக கவனித்திருக்கிறீர்களா?
அவர்கள் முகம் சீரியஸாக இருக்கும். மிகவும் இறுக்கமாக இருப்பார்கள். ஸ்பீக்கரில் கொடுக்கும் ஆங்கில அறிவிப்புகளை அவர்கள் கேட்கும் விதமே வித்தியாசமாக இருக்கும். ஆங்கிலம் பேசும் தொனி வித்தியாசமாக இருப்பதால் அவர்கள் கூர்ந்து கவனிக்கும் எச்சரிக்கை உணர்வு கண்களில் வெளிப்படும். தாங்கள் செல்ல இருக்கும் விமானத்தின் கேட்டுக்கு வந்து அமர்ந்த பிறகும் நிதானமில்லாமல் இருப்பார்கள். விமானத்தில் ஏறி அமர்ந்தும் கூட எதிரே இருக்கும் வீடியோ செட்டை தொட்டும் பார்க்க மாட்டார்கள். சொருகி வைத்திருக்கும் புத்தகங்களை மறந்தும் தொட்டுவிட மாட்டார்கள். போர்வையால் இறுக்கமாக போர்த்திக்கொண்டு கண்களை வலுகட்டாயமாக மூடிக்கொண்டே பயணிப்பார்கள்.
முதல் விமானப் பயண அனுபவமே இத்தனை பதட்டத்தை ஏற்படுத்துகிறது என்றால் உலகையே அச்சுறுத்தும் வைரஸ் தங்களையும் பாதித்துள்ளது என்பது எத்தனை பதட்டத்தை ஏற்படுத்தும்.
அதோடு மட்டுமில்லாமல் எந்த ஒரு பழக்கமும் திடீரென ஒரு நாளில் வந்துவிடாது. தொடர்ச்சியாக ஒரு வாரமோ பத்து நாட்களோ நமக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ முயற்சி செய்து பின்பற்றினால் எந்த ஒரு பழக்கமும் நம் கட்டுக்குள் வந்துவிடும்.
இந்த ஊரடங்கு தினத்தில் இதை உங்களில் பலர் உணர்ந்திருப்பீர்கள். இதுவரை புத்தகம் படிப்பதில் பெரிதாக ஆர்வம் இல்லாதவர்களால் எத்தனை நாட்கள் விடுமுறை கொடுத்தாலும் ஒரு பக்கத்தைக்கூட முடிக்க முடியாது. அதுபோல சினிமா பார்க்கும் வழக்கம் இல்லாதவர்களால் ஒரு சினிமாவை ஓரிடத்தில் உட்கார்ந்து முழுமையாக பார்க்க முடியாது. விமானப் பயணத்தின் போது நம் கண்ணெதிரே கொட்டிக்கிடக்கும் திரைப்படங்களில் ஒன்றைக்கூட பார்க்காமல் பயணிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால் அவர்களின் விருப்பமும் ஆர்வமும் வேறாக இருக்கும். ஒரு சிலருக்கு மனச்சோர்வாக இருக்கும் சமயம் சமையல் அறைக்குச் சென்று புதுவகை டிஷ் செய்வது மெடிடேஷன் போல இருக்கும். சிலருக்கு மாடித்தோட்டத்துக்குச் சென்று சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றுவது புத்துணர்வைக் கொடுக்கும். சிலர் அறையை இருட்டடித்துகொண்டு ஏசியை ஆன் செய்து போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு அரை மணி நேரம் அமைதியாக படுத்துக்கொண்டிருந்தால் உற்சாகமாகிவிடுவார்கள். இன்னும் ஒருசிலருக்கு ஐந்து பத்து நிமிடங்கள் கண் மூடி தூங்கினாலே போதும். என்னவோ பல மணி நேரங்கள் உறங்கியதைப் போல புது தெம்புடன் கண் விழிப்பார்கள்.
இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்கம், தங்கள் ஓய்வு நாட்களை அல்லது மனச்சோர்வு நேரங்களை அல்லது உற்சாகப் பொழுதுகளை கடத்துவதற்கு. இவை அனைத்துமே காலம் காலமாக அவரவர்கள் பின்பற்றிவரும் நீண்டநாள் பழக்கமாக இருக்கும். அவரவர்களின் சூழல் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் பழக்கம் வழக்காமாகிப் போயிருக்கும். அவ்வளவுதான்.
‘பதிப்பக வாசலில் புத்தகங்களை அடுக்கி வைத்துவிட்டு ஒருவாரம் கழித்து வந்தாலும் அதில் ஒரு புத்தகம் கூட காணாமல் போய் இருக்காது. அத்தனை நேர்மையானது எங்கள் தொழில்…’ என்று ஒரு பதிப்பாளர் நகைச்சுவையுடன் என்னிடம் பகிர்ந்து கொண்டது நினைவுக்கு வருகிறது.
நகைச்சுவைதான் என்றாலும் நம்மிடம் எழுத்து, புத்தங்கள், வாசிப்பு இவற்றுக்கான ஸ்பேஸ் இவ்வளவுதான்.
மேலும் அவரவர் பழக்கமும் விருப்பமும் அவரவருக்கு சொர்க்கமல்லவா?
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software