ஹலோ With காம்கேர் -111: கலாமின் கனவு நனவாகி வருகிறதா?

 

ஹலோ with காம்கேர் – 111
April 20, 2020

கேள்வி: கலாமின் கனவு நனவாகி வருகிறதா?

ஜனவரி 1, 2020 ஆங்கிலப் புத்தாண்டு அன்று  அரசு பள்ளி ஆசிரியர்களுக்காக ‘அறம் வளர்ப்போம்’ குழுவைத் தொடங்கி ‘தினம் ஒரு அறநெறி’ என்று தினந்தோறும் காலை 6 மணிக்கு அறநெறி கருத்துக்களை எழுதி பதிவிட்டு வருகிறேன்.

அதை அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகிறார்கள்.

ஏப்ரல் 14, 2020 தமிழ்ப் புத்தாண்டு அன்று அதே குழுவில் ‘இங்கிதம் பழ(க்)குவோம்’ என்ற தலைப்பில் நன்னெறி கருத்துக்களை எழுத ஆரம்பித்துள்ளேன்.

இந்த வருடத்தின் இறுதியில் ‘அறம் வளர்ப்போம்’ என்ற செயலியை (APP) தயாரித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர்களும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் வெளியிட இருக்கிறேன்.

மாணவர்களுக்காக மட்டுமில்லாமல் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமே அவை பயனுள்ளதாக இருக்கும் வகையில் எழுதுகிறேன்.

ஊரடங்கு காலகட்டத்திலும் ஆசிரியர்கள் வீட்டில் தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித் தருவதாகவும், வீடியோகால் மூலம் மாணவர்களுடன் பேசும்போது இந்த அறநெறி கருத்துக்களை சொல்லிக்கொடுப்பதாகவும் என்னிடம் சொல்கிறார்கள்.

‘அறம் வளர்ப்போம்’ குழுவில் இணைந்துள்ள  ஆசிரியர்கள் பெரும்பாலும் கிராமம் மற்றும் சிறுநகரங்களில் உள்ள பள்ளியில் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். மொபைல் சிக்னல் கூட விட்டுவிட்டுதான் கிடைக்கும் என சொல்லி இருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் தொழில்நுட்பத்தை சிரத்தையாய் பயன்படுத்துவதைப் பார்க்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது.

2020-ல் இந்தியா வல்லரசாகும் என்பது டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் கனவு. கிட்டத்தட்ட அவர் கனவு நனவாகி வருகிறது என்றுதான் நினைக்கிறேன்.

தொழில்நுட்பம் அவரவர் கைகளில். லேப்டாப்பிலேயே அலுவலகம். நினைத்த நேரத்தில் ஆன்லைனில் அலுவலக மீட்டிங். நினைத்த நேரத்தில் ஆன்லைனில் புத்தக வெளியீடு. நினைத்த நேரத்தில் ஆன்லைனில் கருத்தரங்குகள். ஊரடங்கினால் எதுவும் நின்றுபோனதாக தெரியவில்லை.

சின்னஞ்சிறு கிராமத்தில் அமைதியாக இயங்கிவரும் பள்ளிகளில் உள்ள மாணவர்கள்கூட ஆசிரியர்களுடன் ஆன்லைனில் பேசுகிறார்கள். சந்தேகம் கேட்கிறார்கள். வகுப்பை கவனிக்கிறார்கள்.

ஊரடங்கு நம்மிடம் உள்ள தொழில்நுட்ப வசதிகளை சிறப்பாக பயன்படுத்தும் யுக்தியை நமக்குள் புகுத்தியுள்ளது.

இந்த காலகட்டத்தில் தொழில்நுட்பத்தின் அதிகபட்ச சுவையை அனுபவித்த நம் மக்களால் இனி அதை இன்னும் சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதையும் அவர்களாகவே தெரிந்துகொள்வார்கள்.

நல்லவர்கள் சிலர் காணும் கனவுகள்  பலிதம் ஆகும். ஆம். இந்தியா வல்லரசு ஆகும் என்ற கலாம் அவர்களின் கனவும் பலிதம் ஆகிவருகிறதே.

நம்முடைய நுண்ணறிவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சூட்சுமமும், இயற்கையாகவே நம் நாட்டில் உள்ள இயற்கை வளங்களும், நோய் எதிர்ப்பு சக்தியும் இன்னும் எத்தனை கொரோனாக்கள் வந்து கதவை தட்டினாலும் அவற்றால் எதையும் செய்ய முடியாது.

இன்னும் கொஞ்ச காலம்தான். பொறுமை காப்போம். அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்போம்.

கொரோனா அழியும் காலம் வெகுவிரைவில். இனிவரும் காலம் பொற்காலம்தான்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 43 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon