ஹலோ with காம்கேர் – 115
April 24, 2020
கேள்வி: ‘இன்று என்ன சமையல்’ என்ற விசாரிப்புக்குப் பின்னால் இவ்வளவு பெரிய உளவியல் உள்ளதா?
நாற்பது வயதேயான என் உறவினர் ஒருவர் கல்லூரியில் படிக்கும் தன் ஒரே மகனுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார். குழந்தைக்கு 10 வயதிருக்கும்போதே கணவர் இறந்துவிட்டார். பள்ளியில் அட்மின் செக்ஷனில் பணி புரிகிறார். ஊரடங்கின் போது வீட்டில் இருக்கிறார்.
தினமும் அவருக்கு போன் செய்து ‘இன்று என்ன டிபன்?’ என்று கேட்டு உரையாடலைத் தொடங்குவேன்.
அன்றைய பொழுது எப்படி சென்றது, என்ன சமையல், என்ன டிபன், என்ன டிவி நிகழ்ச்சி பார்த்தேன், என்ன சினிமா பார்த்தேன், மகனுடனான செல்ல சண்டைகள் என அவரே எல்லாவற்றையும் சொல்லிவிடுவார். நான் காதுகொடுத்து கேட்டு ‘ம்’ கொட்டி, ‘அடடா’ சொல்லி, ‘அப்படியா?’ என வியந்து கேட்டுக்கொண்டிருப்பேன். அதை மட்டுமே செய்வேன். உண்மையில் வேறெதுவும் அதிகப்படியாக பேச மாட்டேன்.
குறிப்பாக சமையல் குறித்து தினமும் புதிது புதிதாக ஏதேனும் ஒரு புது டிபன், சைட் டிஷ் என தயாரிப்பதை ரசனையோடு சொல்வார். செயல்முறை விளக்கத்துடன் அவர் சொல்வதை கேட்பதற்கு எனக்கு ‘பொறுமை’ இல்லாவிட்டாலும் அவர் ரசனையோடு சொல்வதை கேட்க வேண்டும் என்பதற்காகவே நானும் ‘பொறுமையாக’ கேட்டுக்கொள்வேன்.
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ரசனை. எனக்கு சாஃப்ட்வேர், குறும்படங்கள், திரைப்படங்கள், புத்தகம், எழுத்து இவை பற்றிப் பேசினால் பிடிக்கும். அவருக்கு சமையல்.
சிலருக்கு தோட்டம், சிலருக்கு பாட்டு. சிலருக்கு நடனம். இன்னும் சிலருக்கு யோகா தியானம். ரசனைகள்தான் வேறுபடுகிறதே தவிர, அடிப்படையில் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பழக்கத்துக்கும் விருப்பத்துக்கும் கட்டுண்டே பயணிக்கிறோம். அவரவர் விருப்பம் அவரவருக்கு சொர்க்கம். இதில் விமர்சிக்க ஏதுமில்லை. எது உயர்ந்த ரசனை தாழ்ந்த ரசனை என்ற உயர்வு தாழ்வுக்கும் இடமில்லை. ரசனை. அவ்வளவுதான்.
நேற்றும் வழக்கம்போல் மாலை 6 மணி அளவில் போன் செய்திருந்தேன். ‘இன்றைக்கு என்ன ஸ்பெஷல் டிபன்’ என்ற என் டிரேட் மார்க் கேள்வியை கேட்டபோது அவர் அழுதே விட்டார். ‘நீதான் தினமும் கூப்பிட்டு விசாரிக்கிறாய். என் உடன்பிறந்தவர்கள் இருக்கேனா இல்லையா என்றுகூட கவலைப்படுவதில்லை. ஊரடங்கின்போது இதுவரை ஒருநாள் கூட போன் செய்ததில்லை’ என்று சொன்னபோது போன் செய்வதே அத்தனை பெரிய வடிகாலாக இருக்கிறதா என வியந்தேன்.
ஆனால், ‘இன்று என்ன சமையல்’ என்ற ஒற்றை கேள்விக்குப் பின்னால் இத்தனை உளவியல் இருக்கிறதா என நான் வியக்கவில்லை.
காரணம் இப்படி அவரவர்களுக்கு என்ன பிடிக்கிறதோ அதை ஒட்டிய சம்பாஷனைகள் அமையும்போது உரையாடல் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதை உணர்ந்துத்தானே பேசுகிறேன்.
பிறருடன் பேசும்போது நம்மைப் பற்றியும் நம் ரசனைகள் பற்றியும் நம் பிரச்சனைகள் சாதனைகள் பற்றியுமே பேசிக்கொண்டிருந்தால் நாளடைவில் நம்மிடம் இருந்து அழைப்பு வந்தாலோ அல்லது தூரத்தில் நாம் வருவது தெரிந்தாலோ ‘ரெடி ஜூட்’ என நம்மை தவிர்த்துவிட்டு ஓடவே பார்ப்பார்கள்.
பிறருடன் பேசும்போது யாருடன் பேசுகிறோமோ அவர்கள் குறித்து நாமே கேள்வி கேட்டு அதை ஒட்டிய கருத்துப் பரிமாற்றங்களுடன் பேசும்போது நம்முடன் பேசுவதற்கு எல்லோருமே பிரியப்படுவார்கள்.
காசா, பணமா… கரிசனம் தானே காட்டப் போகிறோம். அதைக்கூட செய்ய முடியாதா என்ன?
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software