வாழ்க்கையின் OTP-21 (புதிய தலைமுறை பெண் – ஏப்ரல் 2020)

கிடைத்ததற்கு மகிழ்ச்சி, கொடுத்ததற்கு நன்றி!

நம் எல்லோருக்கும் எல்லாமே இருந்தும் ஏதேனும் குறைகள் இருந்துகொண்டேதான் இருக்கும். அதற்குக் காரணம் நாம் நம்மைப் பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருப்பதுதான். பணம், பகட்டு, புகழ் இவற்றுக்கெல்லாம் மற்றவர்களுடன் தன்னிச்சையாக ஒப்பிடும் நம் மனசு நம் கஷ்டங்களை சோகங்களை துக்கங்களை பிறருடன் ஒப்பிடத் துணிவதில்லை.

காரணம் நம்மை விட செழிப்பாக வாழ்பவர்களைப் பார்த்து நமக்குத் தோன்றும் பொறாமையும், நம் கஷ்டங்கள்தான் பிறரைவிட பெரியது என்று நமக்குள் குமையும் கழிவிரக்கமும் ஒருவிதமான சுகத்தை அளிக்கிறதோ என்று தோன்றுவதுண்டு.

நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி சமீபத்தில் தன் நெடுந்தூர கார் பயணத்தின் போது டிரைவருக்கும் அவர் மகளுக்கும் நடந்த செல்போன் உரையாடல் குறித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.

டிரைவரது மகள் தன்னை காலை 5 மணிக்கு எழுப்பிவிடச் சொல்லியிருக்கிறார். ஆனால் டிரைவர் காலை 6 மணிக்குத்தான் போன் செய்து எழுப்புகிறார். அதற்குப் பின் அப்பாவுக்கும் மகளுக்கும் நடந்த உரையாடலை நெகிழ்ந்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி இடையிலேயே காரை நிறுத்தி வீடியோவில் தன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

டிரைவரின் மனைவி கடந்த டிசம்பர் மாதம் இறந்துவிட்டார். 12 வயதில் மகள், 7 வயதில் மகன். 12 வயது மகளை எழுப்பியபோது அவள் ‘என்னப்பா நான் 5 மணிக்கல்லவா எழுப்பச் சொன்னேன். நீங்கள் 6 மணிக்கு எழுப்புகிறீர்களே…’ என கடிந்துகொண்டாள். சில நொடிகளில் சிரித்தபடி ‘வருத்தப்படாதீர்கள் அப்பா, நானே காலையில் 5 மணிக்கு எழுந்து சமையல் செய்து குளித்து தம்பியையும் தயார் செய்துவிட்டேன். பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டிருக்கிறோம்…’ என சொன்னாள்.

12 வயது மகளின் பொறுப்புணர்வை நினைத்து மகிழ்வதா அல்லது பிள்ளைகளை படிக்க வைப்பதற்காக நேர்மையாக வேலைசெய்யும் டிரைவரின் கடமை உணர்ச்சியை நினைத்து நெகிழ்வதா என்ற கொண்டாட்ட மனநிலைக்குச் சென்று, ‘என்னை இந்த நிகழ்வு  நெகிழச்செய்து விட்டது. நாம் ஒவ்வொருவரும் தடைகளைச் சந்திக்கிறோம். அதில் முடங்கி விடுகிறோம். ஆனால் நண்பர்களே, நிறையப் பேர்  குறைந்த விஷயங்களை வைத்து வாழ்க்கையில் நிறைய சாதிக்கிறார்கள். நமக்குக் கிடைத்த வாழ்க்கையை நாம் எவ்வளவு நன்றியுடன் நினைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நான் எனக்கு நினைவுபடுத்தும்போது உங்களுக்கும் நினைவுபடுத்த வேண்டும் என்று விரும்பினேன்…’ என்று வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

ஏழ்மையில் வாடும் இந்த டிரைவரைப் போலவே வசதியானவர்கள்  வாழ்க்கையிலும் சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

அமெரிக்காவில் சிங்கிள் பேரண்டாக தன் மகளையும் மகனையும் வளர்த்துவரும் ஒரு பெண் தொழில்நுட்பத்துறையில் பணிபுரிகிறார். மகளுக்கு 19 வயது. மகனுக்கு 14 வயது.

பணி நிமித்தம் அவ்வப்பொழுது அமெரிக்காவிலேயே சில இடங்களுக்கு ஓரிரு நாட்கள் செல்ல வேண்டியிருக்குமாம். அப்போதெல்லாம் அவர் காலையில் மகனை எழுப்பி விடுவாராம். மகன் எழுந்து தன் அக்காவுக்கும் சேர்த்து காலை டிபன் மதியம் ஏதேனும் ஒரு கலந்த சாதம் தயார் செய்துகொண்டு பள்ளிக்குக் கிளம்பிச் செல்வானாம்.

மகள்தான் மூத்தவள். அவளுக்கு சமையலில் ஈடுபாடு இல்லை. அம்மா ஊரில் இல்லாத நாட்களில் மகனின் சமையல்தானாம் வீட்டில். கடைக்குச் செல்வது பொருட்கள் வாங்குவதெல்லாம் மகளின் வேலை. அவரவர்கள் ஈடுபாட்டுக்கு ஏற்ப தங்கள் வேலைகளை அவர்களாகவே பிரித்து வைத்திருக்கிறார்கள்.

மகள் காரில் தம்பியை பள்ளியில் இறக்கிவிட்டு கல்லூரிக்குச் செல்வாளாம். இரவு சாப்பாட்டுக்கு காலையில் செய்த டிபன் மீதம் இருக்குமாம். அதை சாப்பிட்டு பால் குடித்துவிட்டு தூங்கி விடுவார்களாம்.

முந்தைய நிகழ்வில் ஏழ்மையிலும் பொறுப்பாக இயங்கும் குழந்தைகள், பிந்தைய நிகழ்வில் வசதியிலும் பொறுப்பாக இயங்கும் குழந்தைகள்.

வாழ்க்கை நமக்கு என்ன கொடுக்கிறதோ அதற்கு நாம் நன்றியுடன் இருக்க வேண்டும் என்பதை இந்த இரண்டு சூழலும் சொல்லி செல்கின்றனவே. இதுவே வாழ்க்கை நமக்கு கற்றுக்கொடுக்கும் OTP.

பாசத்தின் அளவுகோல் என்ன, சென்டிமென்ட்டுகள் அவசியமா?

சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ஒரு Talk it Easy என்ற ‘காமெடி ஷோ’ வீடியோ பார்த்தேன். 4 வருடங்களுக்கு முன் வெளிவந்தது. நடிகர் பாண்டியராஜன் நடத்திக்கொண்டிருந்தார். கோர்ட் போல சீன் அமைத்திருந்தார்கள்.

ஒரு பக்கம் அப்பா, மறுபக்கம் கல்லூரி படிக்கும் மகன். அப்பாவுக்கும் மகனுக்குமான இடைவெளியையும் அவரவர்கள் பக்க நியாயங்களை பேசுவதாகவும் நடுவர் விசாரித்து தீர்ப்பு வழங்குவதாகவும் அமைத்திருந்தார்கள். அருமையான கான்செப்ட்.

ஒரு கட்டத்தில் மகன் தன் பிரச்சனையை சொல்கிறார்.

அப்பா ரொம்ப பாசமாக இருக்கிறார். அதில் தவறில்லை. அதை டெஸ்ட் செய்துகொண்டே இருக்கிறார். நான் சரியாக படிக்கவில்லை என்றால் அவர் மீது பாசமாக இல்லை என நினைக்கிறார். அவர் திருமண நாளுக்கு அம்மாவுக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்துவிட்டு கல்லூரி சென்றுவிட்டேன். அதனால் தன் மீது பாசமில்லை என நினைக்கிறார். சாப்பிட்டீர்களா, தூங்கினீர்களா என ஒவ்வொன்றையும் விசாரிக்க வேண்டும் என நினைக்கிறார். விசாரிக்கவில்லை எனில் பாசமாக இல்லை என நினைக்கிறார். நான் சாப்பிடவில்லை என்றால் அவர் மீது பாசமாக இல்லை என நினைக்கிறார். நான் காலையில் சீக்கிரம் எழுந்திருக்கவில்லை என்றால் அவர் மீது பாசமில்லை. நான் வீட்டுக்கு தாமதமாக வருவதை போன் செய்து சொல்லவில்லை என்றால் அவர் மீது பாசமில்லை.

‘இப்படி நான் செய்கின்ற ஒவ்வொரு விஷயத்தையும் பாசத்துடன் இணைத்தால் நான் என்ன என் இதயத்தைப் பிளந்தா பாசத்தை காட்டுவது’ என மகன் தன் ஆதங்கத்தை நகைச்சுவையோடு பேசினார்.

அப்பா தன் எதிர்பார்ப்பை சொல்கிறார்.

85 வயதாகும் என்னுடைய அப்பா என் கையில் சிறிய காயம் வந்தாலும் பதறிபோய் ‘என்னாச்சு, ஏதாச்சு, நீ உன் உடம்பை கவனித்துக்கொள்வதே இல்லை…’ என்று புலம்பி அழவே ஆரம்பித்துவிடுவார். என் மகன் மழையில் லேசாக நனைந்து வந்தாலே என் சட்டையை கழற்றி துடைத்துவிடுகிறேன். ஆனால் நான் மழையில் சொட்ட சொட்ட நனைந்து வந்தாலும் என் மகன் கண்டுகொள்ளாமல் நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பவும் லேப்டாப்பில் மூழ்கிவிடுகிறான்.

இப்படி சின்ன சின்னதாக தன் எதிர்பார்புகளை சொல்லிக்கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் அவர் சொன்ன ஒரு சிறிய விஷயத்தில்தான் மிகப் பெரிய உளவியல் பார்வை உள்ளது.

தன் மகன் அம்பத்தூரில் விவேகானந்தரின் 150-வது ரத யாத்திரை பொறுப்பை ஏற்று சிறப்பாக செயலாற்றியதாகவும் அதற்கான பாராட்டு விழாவில் அவனுக்கு பெரிய மனிதர்கள் பலர் மாலை போட்டு மரியாதை செய்தார்கள் என்றும் சொன்னார். அப்போது தன் மகன் அந்த மாலைகளை எடுத்து தன் மீது போட்டு இந்த பெருமை எல்லாம் என் அப்பாவையே சேரும் என ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் அதைவிட இந்த வாழ்க்கையில் வேறென்ன வேண்டும் எனக்கு. மகன் தந்தைக்கு ஆற்றும் நன்றி வேறென்ன. ஆனால் என் மகன் அப்படி செய்யவில்லையே என்று நெகிழ்ச்சியாக தன் எதிர்பார்ப்பை சொன்னார்.

இந்த நிகழ்ச்சி நகைச்சுவைக்காக எடுக்கப்பட்டிருந்தாலும் எத்தனை அரிய விஷயத்தை சொல்லி செல்கிறது.

இதையேதான் நானும் சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.

சந்தோஷங்களை வெளிப்படுத்துங்கள். சென்டிமென்ட்டுகளை வைத்துக்கொள்ளுங்கள். அன்பையும் பாசத்தையும் வெளிக்காட்டுங்கள். இவையே நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்ள உதவும் உற்சாக டானிக்; வாழ்க்கையையும் உறவுகளையும் நட்புகளையும் இணைக்கும் மாமருந்து.

உங்கள் உணர்வுகளை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அளவுக்கு அத்தனை உணர்ச்சிப் பிரவாகமாக வெளிப்படுத்தத் தெரியவில்லை என்றாலும் குறைந்தபட்சம் சின்ன சிரிப்பு, மெல்லிய அரவணைப்பு, மென்மையான வார்த்தைகள் இதன் மூலமாவது வெளிப்படுத்தத் தயங்காதீர்கள்.

மனிதர்களை ஆப்ஜெக்ட்டுகளாக பார்க்காதீர்கள். மனிதர்களை மனித நேயத்துடன் அணுகப் பழகுங்களேன். இதுவே மனிதர்களை உயிர்ப்புடன் இயங்கச் செய்யும் OTP.

துஷ்டரை கண்டால் தூர விலகு!

நல்லது கெட்டது என இரண்டு விஷயங்கள் உண்டு. நல்லது நேர்மறை, கெட்டது எதிர்மறை.

நேர்மறை, நல்லவற்றுக்குத்தான் துணைபோகும். சந்தேகமே இல்லை. ஆனால் எதிர்மறை, தீயவற்றுக்கு துணைபோவதுடன், நல்லவற்றை அழிக்கும் பேராற்றல் கொண்டது.

நல்லவற்றை செய்வதும் நல்லவராக வாழ்வதும் பெரிதல்ல, தீயவற்றை எதிர்கொள்வதே பெரிய விஷயமாக உள்ளது.

எந்த ஒரு நல்ல விஷயமும் அதன்போக்கில் அமைதியான நதிபோல கவலை இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும்போது அதை கெடுக்கும் வகையில் தீய சக்திகள் எந்த ரூபத்திலாவது வந்து தலைவிரித்தாடும்.

அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதனுடன் போராடுவதைவிட்டு நம் போக்கில் சென்றுகொண்டே இருத்தல் சாலச்சிறந்தது. அதைவிட்டு அந்த தீய சக்திகளின் பேயாட்டத்துக்கு நாம் கவலைப்படுவதை வெளிப்படையாக காண்பித்துக்கொண்டால் போச்சு, தீய சக்திகளின் வீரியம் இன்னும் அதிகமாகிவிடும்.

நம் செயல்பாடுகளை புரிந்துகொள்ளாமல் நம் கருத்துக்களுடனும் கொள்கைகளுடனும் முரண்பட்டிருப்பவர்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்கலாம்.

நல்ல விஷயங்களை செய்யும் நம் மீதே குரோத எண்ணத்துடன் செயல்படுபவர்களுக்கு புரிய வைத்தாலும் பிரஜோஜனமில்லை. ஏனெனில் அவர்களின் கண், காது, மனம் போன்ற சக ஜீவன்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள படைக்கப்பட்டிருக்கும் உறுப்புகள் அனைத்தும் உறுதியான அக்மார்க் பொறிக்கப்பட்ட அடைப்பானால் அடைக்கப்பட்டிருக்கும்.

சுருங்கச் சொன்னால் கருத்துக்களுக்கு எதிர்கருத்திடுபவரை விட கருத்துச் சொல்பவரை எதிரியாக நினைத்து செயல்படுபவர்கள் பயங்கரமானவர்கள். அவர்களில் இருந்து தூர விலகி இருப்பதுதான் சிறந்தது.

ஒரு நல்ல காரியத்தை செய்யும்போது அதை நடக்கவிடாமால் செய்வதற்கு தீய சக்திகள் பெரும்பாடுபடும். அதை எல்லாம் மீறி நன்மைகள் செய்வதுதான் உண்மையான வெற்றி. அப்படி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வெற்றி பெரும்போது அந்த வெற்றியை அதிகப்படியாக வெளிப்படுத்தி நம் சந்தோஷத்தை கொண்டாடவும் தேவையில்லை.

ஏனெனில் நம்முடைய சந்தோஷமும் மனநிம்மதியும்தான் எதிராளியை உறங்கவிடாமல் செய்யும். நாம் எடுத்துக்கொண்ட செயலில் உறுதியாக நின்று நேர்வழியில் பயணிப்பதுதான் நம் நோக்கம் என்றால் நம் வெற்றிகளை கொண்டாடுவதில்கூட ‘அடக்கிவாசித்தல்’ நல்லது.

நம் வெற்றியை ஆடம்பரமாகக் கொண்டாடி சீண்டுவதைவிட நதிபோல  ஓடிக்கொண்டிருக்கும் நாம் அருவிபோல பேராற்றலுடன் செயல்பட இந்த அடக்கிவாசித்தலே துணைபுரியும்.

இதற்கு பெயர் அடங்கிப் போவது என்று அர்த்தம் இல்லை. எதிராளியை அடக்கும் அற்புத ஆயுதம், ஆகச்சிறந்த தந்திரம், ஈடு இணையில்லா மந்திரம். துஷ்டரைக் கண்டால் தூர விலகுவதற்கு கோழைத்தனம் என்று பொருளில்லை. அப்படி விலகுவதே தைரியத்தின் உச்சம்.  இதுவே, நிம்மதியான வாழ்க்கைக்கு உதவும் OTP.

நீங்கள் தைரியசாலியாக வாழ விரும்புகிறீர்களா அல்லது கோழையாக இருக்க விரும்புகிறீர்களா. முடிவு உங்கள் கைகளில்.

இந்தா பிடிங்க உங்களுக்கான OTP…

வாழ்க்கை நமக்கு என்ன கொடுக்கிறதோ அதற்கு நாம் நன்றியுடன் இருக்க வேண்டும்; மனிதர்களை ஆப்ஜெக்ட்டுகளாக பார்க்காமல் மனித நேயத்துடன் அணுக வேண்டும்; துஷ்டரை கண்டால் தூர விலக வேண்டும் இதெல்லாம் நிம்மதியான வாழ்க்கைக்கான OTP. புரிந்துகொள்பவர்கள் புத்திசாலிகள்.

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
புதிய தலைமுறை – பெண் மாத இதழ்
வாழ்க்கையின் OTP – 21
ஏப்ரல் 2020

(Visited 45 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon